ஆண்பால் பெண்பால்
தமிழ்நாட்டில்
தமிழர்களை விட அதிகமாக வசிக்கும் இனம் ஒன்று உண்டு. இவர்களை ‘எம்.ஜி.ஆர்
பைத்தியங்கள்’ என்றும் சொல்லலாம். ‘எம்.ஜி.ஆர் ரசிகர்கள்’ என்றும் சொல்லிக்
கொள்ளலாம். ‘பைத்தியம்’ என்பதே சரியென்று ‘ஆண்பால், பெண்பாலை’
வாசிக்கும்போது தோன்றுகிறது. நானும் கூட அந்தப் பைத்தியங்களில் ஒருவன்தான்
என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
‘பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்’ தமிழ்மகனால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், எவ்வகையில் அந்த சமர்ப்பணத்தை நியாயப்படுத்துகிறது என்பது, இறுதி அத்தியாயம் வரை நீளும் சஸ்பென்ஸ்.
‘யாரோ எழுதிய இந்த நாவலில் மிகுந்திருக்கும் அதிகப்படியான குழப்பங்கள் குறித்து என்னுடைய விளக்கம்’ என்று நாவல் தொடங்குவதற்கு முன்பாகவே பதினாறு பக்க படா நீளமான விளக்கம் ஒன்றினை தருகிறார் தமிழ்மகன்.
உண்மையில் இந்த விளக்கம்தான் குழப்புகிறதே தவிர, நாவல் தெளிவான நீரோடையாகவே பாய்ச்சல் கொள்கிறது. இந்த நாவலை எழுதியது நானல்ல என்று வாக்குமூலம் கொடுக்கிறார் நாவலாசிரியர். அதற்கேற்ப நாவலின் முதல் பாகம் ‘பிரியா சொல்வதாக பிரமிளா எழுதியது’ என்றும், இரண்டாம் பாகம் ‘அருண் சொல்வதாக ரகு எழுதியது’ என்றும் இருக்கிறது. நாவலை எழுதியவர் தமிழ்மகனல்ல என்றால் யாருக்கு ராயல்டி தருவது என்று முன்னுரைக்கு வந்து குழம்புகிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாறாக கதை தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் புதிர் விளையாட்டே சுவாரஸ்யத்துக்கு சுழி போடுகிறது.
இந்நாவலில் சொல்லப்படும் முதலிரவு, பர்ஃபெக்டான முதலிரவு. இதுவரை ‘அந்த’ அனுபவம் இல்லாத இருவர் தனித்து இரவைக் கழிப்பதில் எதிர்கொள்ளும் சங்கடங்கள். அங்கே நடக்கும் சிறு சிறு அசைவுகளையும் கூட ஆண்மனம் எதிர்கொள்வதற்கும், பெண்மனம் எதிர்கொள்வதற்குமான வேறுபாடுகள் என்று நுட்பமான சித்தரிப்புகளில் கவர்கிறார் தமிழ்மகன்.
‘நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அதுவாகவே மாறிப்போய் விடுகிறோம்’ என்று காந்தியோ, காப்மேயரோ அல்லது யாரோ சொல்லியிருக்கிறார்கள். ‘நாம் எதை அதிகமாக வெறுக்கிறோமோ, ஒருகாலத்தில் அதை நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்’ என்று இந்த கதையைப் படித்தால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. நாயகி ப்ரியாவுக்கு எம்.ஜி.ஆர் என்றால் உயிர். நாயகனுக்கும் சரி. நாவலாசிரியருக்கும் சரி, அவர் வேப்பங்காய். ஆனால் பாருங்கள். ப்ரியா பைத்தியம் பிடித்து எம்.ஜி.ஆர் தமிழர் என்று நிரூபிக்க எங்கெல்லாம் பயணிக்கிறாளோ, என்னவெல்லாம் செய்கிறாளோ.. அத்தனையையும் நாவலாசிரியர் செய்திருக்கிறார். இவரே கும்பகோணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்ட கோயில் என்று எல்லாவற்றுக்கும் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணக் காப்பக அலுவலகங்களுக்கு சென்று தேடியிருக்கிறார். ஆனால் பிரியாவுக்கு மட்டும் மனநிலை சரியில்லை என்று காதுகுத்துகிறார். எனக்கென்னவோ ப்ரியாவை விட பெரிய எம்.ஜி.ஆர் பைத்தியமாக தமிழ்மகனைதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு இளம்பெண்ணுக்கு வெண்குஷ்டம் வருகிறது. இதையடுத்து இயல்பாக தோன்றும் தாழ்வு மனப்பான்மை. மனச்சிதைவு. அதன் வாயிலாக அப்பெண்ணுக்கு தோன்றும் மாயத்தோற்றங்கள். திருமணக் குழப்பங்கள், இறுதியில் விவாகரத்து, மனநோய் காப்பகம் என்று போகிறது கதை.
இந்தக் கதைக்கு ரோஷோமான் பாணியில் கதை சொல்லும் வடிவத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். முதல் பாகம் முழுக்க சொல்லப்படும் அதே கதைதான், இரண்டாம் பாகத்திலும். அதே காட்சிகள், கிட்டத்தட்ட வசனங்களும் கூட அதே. விருமாண்டி மாதிரியேதான். விருமாண்டியிலாவது கேமிரா கோணங்களில் வித்தியாசம் காட்டமுடியும். இது அச்சில் இருக்கும் நாவல். இங்கேதான் தமிழ்மகனின் சாமர்த்தியம் மிளிருகிறது. ஒரே கதையை திரும்பப் படிக்கும் அலுப்பு சற்றுக்கூட ஏற்பட்டுவிடாத வகையில் மொழியை லகான் பிடித்து கட்டுப்படுத்துகிறார்.
இரண்டு பாகங்களுக்கும் தலா இருபது அத்தியாயங்கள். இருவருக்கும் மனப்பிளவு மனநோயின் காரணமாக என்றே முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம் வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு பத்தியில் போகிறபோக்கில் கொளுத்திப்போடும் ஒரு மேட்டரில் கதையின் ஆதாரத்தன்மையே யூ டர்ன் அடிக்கிறது. மிக முக்கியமான இந்த சஸ்பென்ஸை கூட வெளியீட்டுவிழாவில் ஒரு பெண்கவிஞர் சூறைத்தேங்காய் உடைப்பது மாதிரி போட்டு உடைத்துவிட்டார். மனம் பிறழ்ந்த பெண் மனம், பெருந்தன்மையான ஆண் மனம் என்று ஆணாதிக்கப் பார்வையில் கதை எழுதிவிட்டாரே தமிழ்மகன் என்று ஆரம்பத்தில் ஏற்பட்ட கோபம் முழுக்க இறுதியில் கரைந்து, உருகிப் போய்விடுகிறது.
பெண்கள் எம்.ஜி.ஆரை ரசிப்பது உடல்சார்ந்த ஈர்ப்பின் காரணமாகதான் என்று பொதுவான ஒரு அபிப்ராயம் உண்டு. ஒரு ஆண் எம்.ஜி.ஆரை எப்படிப் பார்க்கிறானோ, அதே மாதிரி இயல்பான ரசனைதான் பெண்ணுடையதும் என்பதை பிரச்சாரநெடி இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு. அதே மாதிரி காமம் என்கிற ஒற்றை விஷயத்தை அணுகுவதில் ஆண், பெண் இருவருக்குமான 360 டிகிரி கோணத்தையும் இண்டு, இடுக்கு விடாமல் அலசித் துவைத்திருப்பது, நாவலாசிரியரின் நீண்டகால அனுபவத்தை(?) வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் கதையில் தமிழ்மகனே ஒரு பாத்திரமாக வருகிறார். நாயகன் இவரை போற்றுகிறார் (செக்ஸ் பத்தி நல்லா எழுதறாரு). நாயகி இவரை வெறுக்கிறார் (அந்தாளுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது).
முதல் பாகத்தில் ஒருவரும், இரண்டாம் பாகத்தில் அடுத்தவருமாக இரண்டே பேர் இருநூற்றி ஐம்பது பக்கத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தால் போர் அடிக்காதா? அதிலும் வசனங்கள் மிகவும் குறைவு. போர் அடிக்கவேயில்லை என்று நான் வேண்டுமானால் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறேன். சரியான மொழிநுட்பத்தை கைகொண்டால் எவ்வளவு வறட்சியான விஷயங்களையும் எப்படி வெகுசுவாரஸ்யமாக்க முடியும் என்பதை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ளலாம்.
‘ஆண்பால், பெண்பால்’ ஒரு குடும்பக் கதை. அதில் அரசியல் இருக்கிறது. வரலாறு இருக்கிறது. ஒரு நாவல் இலக்கியமாக கதை மட்டும் போதாது, நல்ல களத்தையும் அடையாளம் காணவேண்டும் என்று பாடமெடுத்திருக்கிறது இந்நாவல். தமிழ்மகனின் முந்தைய சூப்பர் ஹிட் ‘வெட்டுப்புலி‘’’’க்கு முற்றிலும் மாறுபட்ட கதை என்றாலும், அது பாய்ந்தது எட்டு அடி, இது பாய்ந்திருப்பது முப்பத்தி இரண்டு அடி.
நூல் : ஆண்பால் பெண்பால்
ஆசிரியர் : தமிழ்மகன்
விலை : ரூ.200
பக்கங்கள் : 256
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
தொலைபேசி : 91-44-24993448. இணையத்தளம் : www.uyirmmai@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக