செவ்வாய், 11 அக்டோபர், 2011

பெரிய வேடிக்கை என்ன தெரியுமா, ஈவிகேஎஸ் இளங்கோவனே சொல்லுகிறார்...: சுப.வீரபாண்டியன் பேச்சு



திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். நேருவை ஆதரித்து தேர்தல் பிரசார தி.மு.க பொதுக்கூட்டம் 10.10.2011 அன்று இரவு திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்,
வருகிற தேர்தல் வெறும் இடைத்தேர்தல் மட்டும் அல்ல. கடந்த 5 மாத காலத்திலே இந்த ஆட்சி என்ன கொடுமைகளையெல்லாம் செய்திருக்கிறது என்று, எடைப் போட்டு பார்க்க இருக்கின்ற எடைத்தேர்தலும் கூட. திருச்சி மாநகர மக்கள் சரியாக எடை போடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

திருச்சியினுடைய நாளைய மேயர் மேடையில் அமர்ந்திருப்பதைப்போல, நாளைய சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு அவர்களும் இந்த மேடையில் இருந்திருக்க வேண்டும். இப்போது திருச்சி நீதிமன்றத்திலே தான் இருக்கிறார். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. நீதிமன்றத்தின் பிணை கிடைத்து, இந்தக் கூட்டம் முடிவடைவதற்கு முன்பு நேரு அவர்கள் இந்த மேடைக்கு வந்துவிடமாட்டாரா என்று நான் ஆசைப் படுகிறேன். ஆனால், அந்த அம்மையார் இல்லை அவரை சட்டமன்ற உறுப்பினராக்கி தான், திருச்சி அனுப்புவேன் என்று ஆசைப்படுகிறாரோ என்னவோ நமக்கு தெரியாது.


இந்த மேடையை கவனித்துப் பாருங்கள். தேர்தலுக்கு முன்னால் இருந்த தலைவர்கள் அனைவரும் இந்த மேடையில் இருக்கிறார்கள். ஆனால் அந்த அம்மையாரோடு இருந்த தலைவர்களில் யாராவது ஒரே ஒருவராவது இன்று அந்த அம்மாவோடு இருக்கிறார்களா. பேசகிறார்களா. பேசுகிறார்கள். தொலைக்காட்சியிலே பேசுகிறார்கள். இன்றைக்குக் கூட பேசுகிறார்கள். நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சொல்லுகிறார், யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு அளியுங்கள். அதிமுகவுக்கு மட்டும் வாக்களித்துவிடாதீர்கள். சொல்லுவது யார். நேற்று வரைக்கும் அவர்கள் கூட இருந்த கிருஷ்ணசாமி சொல்லுகிறார்.

அதைவிட பெரிய வேடிக்கை என்ன தெரியுமா. இந்த அரசின் அராஜகத்தை வன்முறையை, அடக்குமுறையை பொருத்துக்கொள்ள முடியவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவனே சொல்லுகிறார். இளங்கோவனே என்று நான் சொல்லுவதற்கு என்ன பொருள் என்று உங்களுக்கு தெரியும்.

அடுத்தததாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகிறார். கூடங்குளத்திலே உண்ணாவிரதம் இருக்கிற மக்கள் இவரது கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் குஜராத்திலே உண்ணாவிரதம் இருக்கிற மோடியை ஆதரித்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறாரே, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இருந்த மோடியை ஆதரித்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த ஜெயலலிதா, கூடங்குளத்தில் உண்ணாவிரதம் இருந்த மக்களை சந்திக்க இரண்டு வார்டு கவுன்சிலர்களையாவது அனுப்பினாரா? என்று கேட்கிற ஜவாஹிருல்லா சொல்லுகிறார், இஸ்லாமிய மக்கள் இனிமேல் அந்த அம்மையாருக்கு மறந்தும் வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார். இப்படி அவர்களோடு இருந்தவர்களெல்லாம் இன்றைக்கு மாறி வேறு நிலைக்கு வந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: