வியாழன், 13 அக்டோபர், 2011

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத் தமிழன் தேசவழமைச் சட்டத்துக்கு உட்பட்டவன்’ : எவரும் குடாநாட்டில் காணியை கொள்வனவு செய்யத் தடையில்லை!

தமிழனாக இருந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த எந்தவொரு நபரும் தேசவழமைச் சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவரெனக் கூறியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் யாழ்ப்பாணத்தைச் சேராதவர்களுக்கும் அங்கு காணியை கொள்வனவு செய்வதற்குத் தடை விதிக்கும் எந்தவொரு சட்டமும் அமுலில் இல்லையெனவும் தெரிவித்தார்.

வட மாகாண உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்குமான சட்ட அறிவூட்டல் கருத்தரங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோது உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்தார். தேசவழமைச் சட்டம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

தேச வழமை என்பதை தேசத்தின் வழமையென கருத்தில் கொள்ளலாம். தேசவழமைச் சட்டம் சட்டங்களில் மிகவும் முக்கியமானதொரு சட்டமாகும். தேசவழமைச் சட்டம் வாழ்வின் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எம்மைத் தொட்டுச் செல்கின்றது. குறிப்பாக வடக்கில் அதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள சட்டங்களில் தேசவழமைச் சட்டம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தேசவழமைச் சட்டம் எவ்வாறு சட்டமாக்கப்பட்டது என்பதனை ஆராய்ந்தால் யாழ்.மக்களால் தொன்று தொட்டு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒழுக்க முறைமைகளைத் தொகுத்தே தேசவழமைச் சட்டம் உருவாக்கப்பட்டது.
1707 ஆம் ஆண்டில் தேச வழமை சேவையென உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம் 1800 களில் சட்டமாக ஒழுங்கமைக்கப்பட்டு தேசவழமைச் சட்டமாக உருப்பெற்றது. மகா தேசாதிபதி ஜோன் சைமன் தேசவழமைச் சட்டம் நாட்டின் வழமையெனக் கூறியுள்ளார்.
இத் தேசவழமைச் சட்டம் எத்தனையோ மாறுதல்களுடன் வாழ்வின் எந்தவொரு அத்தியாயத்தையும் தொட்டுச் செல்கின்றது. 1869 இல் தேசவழமைச் சட்டத்தை கற்றுக் கொண்ட அப்போதைய பிரதம நிதியரசர் அலெக்சான்டரா ஜொனாதன் தேசவழமைச் சட்டத்தை மக்கள் வழங்கும் மரியாதை எனவும் வட பகுதி மக்களால் புனிதமாகப் போற்றப்படும் ஒரு சட்டம் எனவும் அச்சட்டத்தினை மேலைத்தேய நீதிபதிகளும் கற்று அதன் பிரகாரம் தீர்ப்பு வழங்க வேண்டுமெனக் கூறியுள்ளார். இன்று நாம் நாளாந்தம் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். ஒருவர் இறந்தால் சொத்துக்களை எவ்வாறு பிரிப்பது, எவருடைய பெயரிற்கு மாற்றுவது என்பன உள்ளிட்ட பல பிரச்சினைகள் உண்டு.
அதேவேளை பிள்ளைகள் அற்ற பெற்றோர் இறந்தால் அந்தச் சொத்துக்களை எவ்வாறு பிரிப்பது என்பன குறித்தும் பல பிரச்சினைகள் எழுவதுண்டு. கணவன் இறக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் சரிசமமாக சொத்துக்கள் பிரிக்கப்படவேண்டும். 50 வீதம் மனைவிக்கும் 50 வீதம் பிள்ளைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். தேடிய தேட்டம், முதுசொம், சீதனம் என சொத்துக்கள் மூன்று வகைப்படும். தேடிய தேட்டம் கணவன், மனைவியின் இல்லற வாழ்வின் போது கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள். இதற்கு கணவனும் மனைவியும் பங்குதாரர்கள் முதுசொம் பரம்பரை பரம்பரையாக வரும் சொத்துக்கள். மற்றையது சீதனச் சொத்துக்கள்.
தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சர்வானந்தா கந்தசாமி எதிர் மாணிக்கவாசகர் என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பு சிறந்த உதாரணமாகும். இல்லறத்தின் போது மனைவியோ கணவனோ சொத்தினை கொள்வனவு செய்தால் இருவருக்குமே அதில் சம உரிமை உண்டு. கணவன் கொள்வனவு செய்யும் சொத்தில் மனைவிக்கும் மனைவி கொள்வனவு செய்யும் சொத்தில் கணவனுக்கும் சம உரிமை உண்டு.
கணவன் மனைவிக்கு எழுதப்பட்ட ஆதனத்தையோ அல்லது மனைவிக்கு எழுதப்பட்ட ஆதனத்தையோ மனைவியின் அனுமதியின்றி கணவன் அடகு வைக்க முடியும். ஆனால் விற்பனை செய்ய முடியாது. திருமணத்தின் பின்னர் கணவன்,மனைவியின் ஒரு பிரதிநிதியாகவே செயற்படுவார். இதனால் கணவன் சுயேச்சையாக செயற்பட முடியும்.
ஆனால் மனைவிக்கு எழுதியிருந்தாலும் அந்த ஆதனத்தை மனைவியால் மாத்திரம் ஒப்பமிட்டு விற்பனை செய்யவோ அடகு வைக்கவோ முடியாது. பெண்ணியம்,சம உரிமை குறித்து நாம் இன்று பேசிக் கொண்டாலும் திருமணத்தின் பின்னர் பெண்கள் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட வேண்டும். அதேவேளை, கணவன் வெளிநாட்டில் இருந்தால் குறித்த ஆதனத்தை விற்பனை செய்வதற்கு எவ்வாறாயினலும் கணவனின் ஒப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லாதுவிடின் அந்த சொத்துக்களை விற்பனை செய்ய முடியாது.
ஆனால் சில குறித்த சந்தர்ப்பங்களில் மனைவி நீதிமன்றம் சென்று கணவர் ஆதனப்பத்திரத்தில் கைச்சாத்திட சரியான காரணம் எதுவும் இன்றி மறுப்புத் தெரிவிக்கின்றார் என வழக்குத் தாக்கல் செய்தால் வழக்கை விசாரித்த பின்னர் அந்த சொத்தினை விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கும். அதேவேளை கணவனும் மனைவியும் இணைந்து ஆதனங்களை அனுபவிக்கின்ற சில விடயங்களில் கட்டுப்பாடுகள் உண்டு. இல்லற வாழ்வின் போது மனைவியால் தனியாக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. அதேவேளை மனைவிக்கு எதிராக ஒருவர் வழக்குத் தாக்கல் செய்தால் கணவனும் மனைவி சார்பில் கட்சிக்காரராகின்றார். கணவனும் கட்சி தாரராக இணைக்கப்படவேண்டும்.
அதேவேளை இல்லறத்தின் போது மனைவியோ கணவரோ தமது ஆதனத்தின் அல்லது சொத்தின் பெறுமதியின் 50 வீதத்திற்கும் குறைவானதையே தேடி தேட்ட ஆதனத்தில் பிள்ளைகளுக்கு நன்கொடையாக கொடுக்கலாம்.
அதேவேளை மனைவி இறந்தால் மனைவியின் சொத்தில் 25 வீதம் பிள்ளைகளுக்கும் 25 வீதம் கணவனுக்கும் சென்றடையும். கணவன் இறந்தால் மனைவிக்கு பிள்ளைகள் இல்லாவிடின் 75 வீதமான சொத்துக்கள் வந்தடையும்.
அதேவேளை கணவன் தேசவழமைச் சட்டத்திற்கு உட்படாதவராக இருந்தால் மனைவிக்கு 50 சதவீதமும் கணவனின் சகோதரர்களுக்கு 50 வீதமும் சொத்துக்கள் சென்றடையும்.தமிழனாக இருந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த எந்தவொரு நபரும் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்டவராவார். குறித்த ஒரு நபர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வெளிநாட்டில் அந்நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் யாழ்ப்பாணத்துடன் பூர்வீகத் தொடர்புகளை பேணுமிடத்தில் அவர் தேச வழமைச் சட்டத்திற்கு உட்பட்வராவார்.
அதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள காணிகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு தான் விற்பனை செய்ய வேண்டுமென எந்தச் சட்டமும் கூறவில்லை. சொந்தக் காணியாக இருந்தால் ஏனைய பங்குதாரர்கள் கொள்வனவு செய்யாதவிடத்து அக்காணியை பிறருக்கு விற்பனை செய்ய முடியும். சிறுபான்மையினர் தமது கலாசார மரபுகளை பேணிப் பாதுகாத்து வளர்த்துக் கொள்வதற்கே தேசவழமைச் சட்டம் வழி வகுக்கின்றதென வெளிநாட்டவர்களால் கூறப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: