வெள்ளி, 14 அக்டோபர், 2011

கார்டனில் இருந்து விஜய் தரப்புக்கு, கொஞ்சம் ‘ஹாட்’டான எச்சரிக்கை!


Viruvirupu,





சென்னை, இந்தியா: நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் ‘மக்கள் இயக்கம்’ மற்றொரு ட்ராக்கில் தமது அரசியல் ஆசைகளை பூர்த்தி செய்ய சில நகர்வுகளை சொந்தமாக செய்வது அ.தி.மு.க. தரப்பை எரிச்சல் படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. அதையடுத்து, விஜய்யின் தகப்பனார் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஹாட்டான எச்சரிக்கை ஒன்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து சென்றிருப்பதாக, தெரியவருகிறது.
விறுவிறுப்பு.காமில் ஏற்கனவே வெளியான “இளைய தளபதி (விஜய்) அரசியலில், ஸ்டார்ட், ஆக்ஷன், கேமரா!” நியூஸ் ஸ்டோரியில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதில் கூறப்பட்ட பிரச்சினை, சட்டமன்றத் தேர்தல் நாட்களில் அ.தி.மு.க. தலைமையை எரிச்சல் படுத்தியிருந்தது.


விஜய்யும் சந்திரசேகரும் நாம் எழுதியபடி மதுரையில் பல்ஸ் பார்க்க நினைத்த விஷயமும் பக்குவமாக அ.தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்லப்பட்டதில், கார்டன் குட்-புக்கில் இருந்து விஜய்யின் பெயர் கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்டது என்கிறார்கள்.
இந்த விஷயம் தெரிந்தோ, தெரியாமலோ, உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் ஆட்களை வேட்பாளர்களாக இறக்க சந்திரசேகர் முடிவு செய்தார். முந்தைய நியூஸ் ஸ்டோரியில் அவர் அ.தி.மு.க.வுடன் பேசிய விஷயம் பற்றியும் எழுதியிருந்தோம். அப்போது தொடங்கிய பேச்சு, முதல் கட்டத்துடனேயே முடிவுக்கு வந்துவிட்டது.
விஜய் பின்னடித்த பழைய கதைதான் மீண்டும் தொடரும் என்பதே அ.தி.மு.க.வின் நினைப்பு. அந்த கட்டுரையில் நாம் பயன்படுத்திய ‘மகா இழுவை நபர்’ என்ற அதே வார்த்தைப் பிரயோகத்தை, சந்திரசேகருடன் பேசிய அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரும் உபயோகித்ததுதான் ஆச்சரியம்.
சுருக்கமாகச் சொன்னால், அ.தி.மு.க.வின் பெயரை யூஸ் பண்ணிக்கொண்டு, தனி ட்ராக்கில் ஓட விரும்பும் இவர்களது இயக்கத்தை தொடக்கத்திலேயே வெட்டிக் கொண்டது அ.தி.மு.க. தலைமை.
ஆனால், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் தென் மாவட்டங்களிலுள்ள சில பகுதிகளில் இருந்து அ.தி.மு.க. தலைமைச் செயலகத்துக்கு புகார் மேல் புகார்கள் வரத் தொடங்கின. அ.தி.மு.க. வேட்பாளர் ஒருபக்கமாக பிரச்சாரம் செய்ய, விஜய் இயக்கத்தினர் அதே வார்ட்டில் தமது சொந்த வேட்பாளரை, “அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர்” என்று விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்ய, ஏகப்பட்ட குழப்பங்கள்.
இறுதியில், சென்னையில் வைத்து சந்திரசேகரிடம், “இதையெல்லாம் உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் அவரோ, இது எதுவுமே தனக்குத் தெரியாதது போல ப்ரிட்டென்ட் பண்ணியிருக்கிறார். “விஜய் ரசிகர்கள் சிலர் ஆர்வக் கோளாறில் தாங்களாகவே முடிவு செய்து தேர்தலில் நின்றிருக்கலாம். அதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை” என்ற ரூட்டில் அவர் போயிருக்கிறார்.
இந்த மூவ், கார்டனை ரொம்பவும் எரிச்சலடைய வைத்துவிட்டது.
“ஓகோ, உங்களுக்குத் தெரியாதா? அப்ப சரி. அவர்களை எப்படி ஆஃப் செய்வது என்று எங்களுக்குத் தெரியும்” என்று ஹாட்டாகவே சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன.
அதன் பின்னர்தான் சந்திரசேகருக்கு, இதெல்லாம் சினிமா அல்ல, நிஜமாகவே நெருப்புடன் விளையாடுவது என்ற விஷயம் புரிந்திருக்கின்றது.
திருச்செந்தூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் இயக்கத்தினர் அனைவரும் போட்டியில் இருந்து விலக வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்படவேண்டும்” என்று அறிவித்தார்.
போட்டியிடும் ஆட்கள் யார் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இன்-பாக்ட், அவர்கள் போட்டியிட அனுமதி கொடுத்ததே இவர்தான் என்கிறார்கள். பேசாமல், அவர்களை தொடர்பு கொண்டு போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும்படி கூறி, ஓசைப்படாமல் காரியத்தை முடித்திருக்கலாம்.
அப்படிச் செய்யாமல் பப்ளிக்காக வேண்டுகோள் விட்டதன் காரணம், அ.தி.மு.க.வை சாந்தப் படுத்த என்கிறார்கள்.
அவரது பகிரங்க வேண்டுகோளில், “எமது மக்கள் இயக்கத்தின் கட்டுபாட்டை மீறி யாரேனும் போட்டியிட்டால், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் இயக்கத்தின் பெயரையோ, படத்தையோ,கொடியையோ, விஜய்யின் பெயரையோ பயன்படுத்த கூடாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நல்லதல்ல. அப்படி செய்தால் அந்த இயக்கத்தால் வளர முடியாது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிடுவதால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைபாட்டை நாம் எடுத்து உள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.
இந்தத் தேர்தலில் மட்டுமென்ன, அடுத்த தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் இவர்கள் பெயர் இடம்பெற சான்ஸ் அவ்வளவாக இல்லை. காரணம், எஸ்.ஏ.சந்திரசேகர் ஸ்டைல் அரசியல் ஜெயலலிதாவுக்கு சரிப்பட்டு வராது!
எமது ஊகம் சரியாக இருந்தால், இப்படி ஒரு அறிக்கை விட்டுவிட்டு, திரை மறைவில் தமது இயக்க ஆட்களை போட்டியில் இருந்து விலக வேண்டாம் என்று சிக்னல் கொடுக்க விரும்புவார் எஸ்ஏ.சந்திரசேகர். அது அவரது ஸ்டைல். அதை அவர் செய்வது், செய்யாமல் விடுவதும், அ.தி.மு.க.வில் இருந்து கொடுக்கப்பட்ட எச்சரிக்கை எவ்வளவு ஹாட் என்பதில் தங்கியுள்ளது.
ஒருவேளை அவர் ரிஸ்க் எடுத்து, தனது ஸ்டைலில் அ.தி.மு.க.வை அன்டர்-கட்  செய்ய முயன்றால்,  அதன்பின்தான் ஜெயலலிதாவின் ஸ்டைலைக் காண வேண்டியிருக்கும்.
வேலாயுதத்துக்கு எதிராக வேறு சில ‘வேல் ஆயுதங்கள்’ வந்திறங்கும்!
-சென்னையிலிருந்து அசோகனின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: