புதன், 12 அக்டோபர், 2011

Newjaffna,tamilcnn தவறான செய்திகளை பரப்புகின்றன

தமிழ் சமூகம் தொடர்பில் தழிம் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன(.tamilcnn+newjaffna)

சுதந்திர ஊடக்குரல் அமைப்பு கண்டித்து அறிக்கை
யாழ்ப்பாணத் தமிழ் சமூகம் தொடர்பில் தழிம் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா போன்ற இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன: இவை தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஊடகவியலாளர்களின் அமைப்பான சுதந்திர ஊடகக் குரல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு :

புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழர்களால் இயக்கப்படும் சில தமிழ் இணையத்தளங்களில் தமிழ் சமூகம் தொடர்பாகவும், தமிழர் கலாசாரம், வாழ்வியல், விழுமியங்கள் தொடர்பாகவும் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுவரும் பிறழ்வான செய்திகள் தொடர்பாக மக்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்று சுதந்திர ஊடகக் குரல் கருதுகிறது.

குறிப்பாக, tamilcnn.com, newjaffna.com உள்ளிட்ட சில இணையத்தளங்கள், யாழ்ப்பாண இளைஞர், யுவதிகள், பாடசாலை மாணவர்கள், கல்வியலாளர்கள், சமூகப் பெரியோர் மற்றும் அதிகாரிகள் தொடர்பாக பல பிறழ்வான செய்திகளை வெளியிட்டு, தமிழ்ச் சமூகம் பற்றிய தவறான விம்பத்தை புலம்பெயர் தமிழர்களுக்கும், வெளியுலகுக்கும் காட்ட முனைகின்றன.

செய்திகளை வெளியிடுவது என்ற பெயரில் தனிநபர்களுக்கு எதிரான கீழ்த்தரமான, வக்கிர எண்ணம் கொண்ட தாக்குதல்களை இந்த இணையத்தளங்கள் மேற்கொண்டு வருகின்றன. இப்படியான செய்திகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றன, சம்பந்தப்பட்டவர்களுடைய தனிநபர் உரிமையைப் பாதிப்பனவாக, அவர்களுடைய சுயமரியாதைக்கு இழிவேற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டவையாக அமைந்துள்ளன. இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படவேண்டும்.

ஜனநாயகம், மனித உரிமைகளை மேலாக மதிக்கும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து நடத்தப்படும் இந்த இணையத்தளங்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது கவலை தரும் விடயமாக இருக்கிறது. இவ்வாறான செய்தியறிக்கையிடல்களில், கூடுதலாகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஊடக வன்முறைப் போக்கையும் அவதானிக்க முடிகிறது.

இத்தகைய இணையத்தளங்களில் வரும் செய்திகள் தரவு மூலங்கள் அற்ற, ஊடக விழுமியமற்ற அறிக்கையிடல் முறையைப் பின்பற்றுகின்றன. இது விடயமாக தமிழ் ஊடகங்களும், தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர் மக்களும் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியம் என்று சுதந்திர ஊடகக் குரல் கருதுகிறது.

இந்த பிறழ்வான ஊடகப் போக்குத் தொடர்பாக, காத்திரமான, முன்னெச்சரிக்கை மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது, ஊடகவியலாளர்களதும், ஊடக நிறுவனங்களினதும், ஒட்டு மொத்த சமூகத்தினதும் முக்கிய பொறுப்பாக இருக்கிறது. எனவே, இத்தகைய பிறழ்வுமிக்க ஊடகச் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மேற்படி தமிழ் இணைய ஊடகங்களை சுதந்திர ஊடகக் குரல் விநயமாகக் கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், ஏற்கனவே தரவேற்றம் செய்யப்பட்டுள்ள இவ்வாறான பிறழ்வு மிக்க, ஊடக விழுமியங்களுக்கு முரணான செய்திகள் மற்றும் உள்ளீடுகளை நீக்கி, ஊடகங்கள் சார்பாகவும், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகம் சார்பாகவும் விடுக்கப்படும் இந்தக் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

சில தமிழ் இணைய ஊடகங்களின் இத்தகைய ஊடகச் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் ஊடகக் குரல் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்பதையும், இவ்வாறான போக்கை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என்பதையும் இத்தால் அறியத்தருகிறோம் என்றுள்ளது.

கருத்துகள் இல்லை: