வெள்ளி, 15 அக்டோபர், 2010

சித்தர்கள் எவ்வாறு மருத்துவக் குறிப்புகளையும், தத்துவங்களையும் குறிப்பால் உணர்த்தினரோ

பழமொழி சொல்லும் மருத்துவக் குறிப்பு
(முனைவர் சி. சேதுராமன்)
பழமொழிகள் பெரியோர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவத்தில் கண்ட மெய்மைகள் ஆகும். தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு விதமான வாழ்க்கைப் பாடங்களில் இருந்து தாங்கள் பெற்ற அனுபவ மொழிகளை பழமொழிகளாகக் கூறிப் போந்தனர். சித்தர்கள் எவ்வாறு மருத்துவக் குறிப்புகளையும், தத்துவங்களையும் குறிப்பால் உணர்த்தினரோ அதுபோன்று இப்பழமொழிகளில் நமது முன்னோர்கள் மூலிகை மருத்துவக் குறிப்புகளை நேரிடையாகவும், குறிப்பாகவும் எடுத்துரைத்துள்ளனர்,
நோய் இன்றி மகிழ்வாக வாழ்வதே உண்மையான செல்வமாகும். நோயுடன் நீண்ட நாள் செல்வராக வாழ்வதைக் காட்டிலும், நோயின்றி உடல் நலமுடன் வாழ்வதே ஒருவர், பெற்ற உண்மையான செல்வமாகும். இத்தகைய வாழ்க்கைக் குறிப்பை, “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
உணவை அளவோடு உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் நோயின்றி வாழலாம். அளவுக்கு மீறி உண்டால் உடலில் உணவு நஞ்சாக மாறி உடலுக்குத் தீங்கினைத் தரும். இதனை வாழ்க்கைச் சித்தராகிய வள்ளுவர், “மிகினும் குறையினும் நோய் செய்யும்என்று குறள்வழி குறிப்பிடுகிறார். எந்த உணவாக இருந்தாலும் அளவோடு உண்ண வேண்டும். என மக்களுக்கு இதன் வழி வலியுறுத்தியிருப்பது நோக்கத்தக்கது. இக்கருத்தை, “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்என்ற பழமொழி தெளிவாக எடுத்துரைக்கிறது.
வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனுக்குக் கொடுஎன்ற பழமொழி வழங்கப்படுவதை நாம் பலரும் அறிந்துள்ளோம். நல்ல தரமான உணவுப் பொருள்களை வாங்கி உண்பதற்குப் பயன்படுத்த வேண்டும். கலப்பட உணவால் தான் பெரும்பாலான நோய்கள் உருவாகின்றன. விலை மலிவாகக் கொடுத்தோ அல்லது தரமற்ற உணவுப் பொருளை வாங்கிப் பயன்படுத்தினால் நோய் உடலில் ஏற்படும். அதனை மக்கள் தவிர்த்தல் வேண்டும். இக்கருத்தை மேற்கூறிய பழமொழி நன்கு புலப்படுத்துகிறது. உணவைச் சரிவர உண்ணாதிருந்தாலும் உடலுக்குத் தீங்கு நேரிடும். கருமித்தனத்துடன் சிலர் பட்டினியாக இருப்பர். அவ்வாறு உணவினைச் சரியான நேரத்திற்கு உண்ணாதிருந்தால் வயிற்றில் புண் ஏற்பட்டு மருத்துவரை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்கவே மருத்துவத்திற்குச் செலவு செய்வதைவிட அதிக விலையாக இருப்பினும் தரமான உணவுப் பொருட்களை வணிகரிடம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் இப்பழமொழி விளக்கி நிற்கிறது.
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நோயால் பலர் இறக்கின்றனர். இந்நோயை ஆவாரையின் பூ கட்டுப்படுத்தும். இத்தகைய மருத்துவக் குறிப்பினை, “ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதில்லைஎன்ற பழமொழி எடுத்துரைக்கிறது. நீரிழிவு நோயினைக் குணப்படுத்தும் மருத்துவக் குறிப்பு இப்பழமொழியில் இடம்பெற்றுள்ளது. இப் பழமொழிகள் மருத்துவப் பெட்டகங்களாகும்.
தின்ன மண்ணுக்குச் சோகைமண்ணைத் தின்னல் கூடாது. ஏனெனில் சிறு குழந்தைகள் விளையாடும்போது தங்களது வாயில் மண்ணை அள்ளிப்போட்டுத் தின்று கொண்டே இருக்கும். அவ்வாறு தின்றால் இரத்தம் தனது தன்மையை இழந்து குழந்தைகள் நிறம் மாறி வெளிறிக் காணப்படுவர். இதனை இரத்த சோகை என்றும் குறிப்பிடுவர். அதனையே இப்பழமொழி இவ்வாறு எடுத்துரைக்கிறது.
இஞ்சியைக் காயவைத்து அதனை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துவர். பித்தம், வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற நோய்களை முற்றிலும் விரட்டும் தன்மை கொண்டது சுக்கு. இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நோய்வருவதில்லை. இந்நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பிற நோய்கள் உடலில் ஏற்படாத வண்ணம் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு அளிக்கும் குணம் சுக்கிற்கு உண்டு. அதனை உணர்ந்து நமது பெரியோர்கள்சுக்கிற்கு மிஞ்சின மருந்துமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்லைஎனப் பழமொழியில் இம்மருத்துவக் குறிப்பை எடுத்துரைத்துள்ளனர்.
மிளகு எந்த விடத்தையும் உடன் முறிக்கக் கூடிய ஓர் அரிய மருந்தாகும். தேள், பாம்பு, பூரான், பிற தெரியாத பூச்சிகடிகளுக்கு மிளகையும், ஒரு வெற்றிலையையும் வைத்துத் தின்று உள் விழுங்கினால் விடம் உடலில் உடனே பரவாது. நமக்குத் தெரியாமல் பிறர், உணவில் விடம் வைத்திருந்தாலும் அதனை உண்டால் மிளகு அதனை முறித்துவிடும். மிளகிற்கு விடத்தை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது. இம்மருத்துவக் குறிப்பு, ‘நான்கு மிளகும் ஒரு வெத்திலையும் இருந்தா பகைவன் வீட்டில் கூட உணவருந்தலாம்என்ற பழமொழியில் இடம்பெற்றுள்ளது. அதனால் தான் நமது முன்னோர்கள் மிளகை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டனர். மேலும் காரத்திற்கு மிளகையே அதிகம் பயன்படுத்தினர். இன்று மிளகிற்குப் பதில் மிளகாயைப் பயன்படுத்துகின்றனர். அதனால் பல்வேறு வயிற்று நோய்களுக்கு இன்று மக்கள் ஆளாகின்றனர் எனலாம்.
தூய தண்ணீர் ஓர் அரிய மருந்தாகும். இதனைத் தண்ணீர் மருத்துவம் என்று கூறுவர். இந்நீரின் மருத்துவ குணத்தையும், அது போக்கும் நோயையும், “ஆற்று நீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டும் போக்கும்என்ற பழமொழி நவில்கிறது. ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும். அது போன்றே அருவி நீரில் பல கனி(ம)ச் சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ் வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும். சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும் எனப் பல்வேறு சித்த மருத்துவக் குறிப்புகளை இப்பழமொழி எடுத்துரைக்கிறது.
உடல் நலத்திற்கு வெங்காயம் தேவை. வெங்காயம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுடன், இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் மிக்க மருந்தாகவும் விளங்குகின்றது. இதனால் வெங்காயத்தை, “காய்களின் இளவரசன்என்பர். அனைத்து உணவு வகைகளைச் செய்கின்றபோதும் இவ்வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. வெங்காயத்திற்கு நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் ஆற்றல் அதிகம் உண்டு. சிறிய வெங்காயத்தைப் பச்சையாக உண்டு வர பல்வேறு நோய்கள் குணமாகும். இதனை, “வெங்காயம் உண்போர்க்குத் தன்காயம்; பழுதில்லை; தன் காயம் காக்க வெங்காயம் வேண்டும்என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.
பெண்களுக்குக் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாக அரச மரக் காற்று பயன்படுகிறது. ஏனெனில் இந்த மரத்தின் அடியில் ஒட்சிசன் அதிகம் நிலவுகிறது. அதிகாலையில் அரசமரத்தின் கீழ் சுற்றி நடந்தால் அம்மரத்தின் அடியில் உள்ள ஓசோன் படலம் உடலில் பட்டு பல்வேறு விதமான நோய்களைப் போக்குகிறது. அரசமரத்தின் காற்று, இலை, &8!கீsஜி போன்றவை கருப்பையில் உண்டாகும் கோளாறுகளைப் போக்கிக் கருவுறச் செய்யும் ஆற்றலுடையது. இத்தகைய சித்த மருத்துவக் குறிப்புகளை, “அரச மரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாளாம்’ ‘அரசை (னை) நம்பி, புருஷனைக் கைவிட்டதுபோல்போன்ற பழமொழிகள் எடுத்து விளக்குகின்றன.
முருங்கைக் கீரை பயன் மிகுந்த சித்த மருந்தாக விளங்குகிறது. இதில் விற்றமின் சத்துக்கள், உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கி உள்ளன. இதனைச் சரியாக வேகவைத்து உண்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். அதேபோன்று அகத்திக் கீரை பல சத்துக்களை உள்ளடக்கியது. பெண்களின் கருப்பை தொடர்பான நோய்களுக்கு இக்கீரையை வேக வைத்து உண்ணவேண்டும். இவ்விரண்டு கீரைகளையும் பக்குவமாக வேகவைத்து உண்ண வேண்டும் என்பதனை, ‘வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்திஎன்ற பழமொழி உணர்த்துகிறது. முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது. இக்கீரைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இப்பழமொழிகள் மொழிவது குறிப்பிடத்தக்கது. இங்ஙனம் பல்வேறு பழமொழிகள் சித்த மருத்துவக் குறிப்புகள் அடங்கிய களஞ்சியங்களாகத் திகழ்கின்றன. இப்பழமொழிகள் நமது முன்னோர்களின் அனுபவ மருத்துவத்தை எடுத்துரைக்கின்றன எனலாம். இதனை கைவைத்தியம் என்றும், பாட்டி வைத்தியம் என்றும் கூறுவர், இப்பழமொழிகளில் பொதிந்துள்ள அனுபவ மருத்துவக் குறிப்புகளை நன்கு மேலும் ஆராய்ந்தால் பல்வேறு சித்த மருத்துவ நுட்பங்களை புலப் படுத்தலாம்.

கருத்துகள் இல்லை: