வியாழன், 14 அக்டோபர், 2010

யாழில் சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்காவிடின் போராட்டம்-ஜாதிக ஹெல உறுமய!

போர் காரணமாக வடக்கு கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்த சிங்கள மக்களை அரசாங்கம் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என ஜாதிக யஹல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை மீள் குடியேற்றுவதற்காக தேசப்பற்றுடைய சமூகங்கள் அணி திரட்டப்படும் என ஜாதிக யஹல உறுமய கட்சி அறிவித்துள்ளது.

1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 150 சிங்கள குடும்பங்கள் தற்போது யாழ்ப்பாண ரயில் நிலையம் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கு ஆகியவற்றில் தங்கியிருப்பதாக ஜாதிகயஹல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 12 நாட்களாக குறித்த மக்கள் இவ்வாறு தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளனர்.
போர் நிறைவடைந்து ஓராண்டு கழிந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்கள் எவரதும் அழுத்தங்களுக்கு அஞ்சி யாழ்ப்பாணத்திற்கு செல்லவில்லை. போர் இடம்பெற்றகாலத்தில் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வந்த ஒரு இலட்சத்து 65 ஆயிரம் சிங்கள மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். சிங்கள மக்களை பிரதேசங்களிலிருந்து வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகள் பாரிய படுகொலைகளை மேற்கொண்டனர். 246 படுகொலைச் சம்பவங்களில் சுமார் 5 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர் காரணமாக அதிகளவான தமிழ் முஸ்லிம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு காட்டப்படும் முனைப்பு சிங்கள மக்களை மீள்குடியேற்றுவதற்கும் காட்டப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியூதீன் முஸ்லிம் மக்களை மீள்குடி யேற்றிய போதிலும் ஒரு சிங்கள குடும்பத்தையேனும் குடியேற்றவில்லை என ஜாதிக யஹல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கள மக்கள் தங்கியிருந்த வீடுகளில் புலிகளின் மாவீரர் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். காணி உரிமையை கோரி யாழ்ப்பாணம் சென்றுள்ள சிங்கள மக்களின் சுக துக்கங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: