புதன், 13 அக்டோபர், 2010

மனவளம் குறைந்த குழந்தைகளுடன் சினேகா 'பர்த்டே'!

Sneha celebrates her birthday'புன்னகையிலும் சரி, மார்க்கெட்டிலும் சரி... இன்றும் இளவரசியாகவே வலம் வரும் சினேகாவுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளை மிகுந்த அர்த்தமுள்ளதாகக் கொண்டாடி மகிழ்ந்தார் சினேகா.

அப்படி என்ன செய்தார்...?

"பெரிய பிளானெல்லாம் போட்டு எதுவும் பண்ணலைங்க. காலைல அப்பா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன். காளிகாம்பாள் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டேன். அடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்குப்போய் சில உதவிகள் செய்தேன்.

என்னுடைய ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது. அவர்களுடன் கேக் வெட்டி இந்த பிறந்தநாளைக் கொண்டாடினேன். மனசுக்கு நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருந்தது,..," என்றார், தனது 'பிராண்ட்' புன்னகையுடன்.

பாலவிகார் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்களை முழுவதுமாக தன் செலவில் வாங்கித் தந்தார்.

பாலவிஹாரின் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சினேகா, இனிப்புகள், எழுதுபொருள்கள் என அவர்கள் கேட்ட அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தார்.

இன்று பிற்பகல் வரை அங்கேயே இருந்த சினேகா, பாலவிகார் குழந்தைகளுடன் சந்தோஷமாக ஆடிப் பாடினார். அவர்கள் மத்தியில் கேக் வெட்டியபோது 100 குழந்தைகளும் சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர்.

2007-ம் ஆண்டு 15000 ரசிகர்கள் தனக்கு ஒரு சேர பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதை இது நினைவுபடுத்துவதாக இருந்தது என நெகிழ்ந்தார் சினேகா. பின்னர் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி விட்டார்.

பின்னர் சினேகாவே கைப்பட அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறினார்.

முன்னதாக பாலவிஹார் வந்த சினேகாவுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பளித்தனர் அவரது ரசிகர்கள். சினேகாவை மகிழ்விக்கும் வகையில் ரோபோ சங்கர் மற்றும் அவரது குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமலும் சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் எப்படி இருந்திருக்கும் என்று அவர்கள் நடித்துக் காட்டியதை ரசித்து மகிழ்ந்தார் சினேகா.

சினேகாவின் மக்கள் தொடர்பாளர் ஜான், சினேகா ரசிகர் மன்ற தலைவர் செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: