வியாழன், 28 அக்டோபர், 2010

தலைமறைவு வாழ்க்கை நடத்தும் "விக்கிலீக்ஸ்' அதிபர்


ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ராணுவ அத்துமீறல்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் அதிபர் ஜூலியன் அசேஞ்ச் உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த படைகள் அங்கு தங்கி பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. அந்த காலக்கட்டத்தில், அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள், சித்ரவதை, அப்பாவி பொதுமக்களை கொன்றது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்த நான்கு லட்சம் ஆவணங்களையும், வீடியோ காட்சிகளையும் அண்மையில், "விக்கிலீக்ஸ்' என்ற இணையதளம் வெளியிட்டது.
இது சர்வதேச அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.நா., சபை உத்தரவிட்டுள்ளது.
இந்த ரகசியங்களை வெளியிட்டதால், தான் கைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று கருதிய "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் அதிபர் ஜூலியன் அசேஞ்ச் (39) தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். அமெரிக்கா அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு நடந்தால், இங்கிலாந்தும் ஜூலியன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும். எனவே, ஜூலியன் அவ்வப்போது தான் தங்கும் இடத்தை மாற்றி வருகிறார்.
ரகசிய ஆவணங்களை வெளியிட்ட போது, ஜூலியன் சுவீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் தங்கியிருந்தார். பின்னர், அங்கிருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு சென்றார். தற்போது, லண்டனில் தங்கியுள்ளார்.
இந்த பயணத்தின் போது, அவரது லேப்-டாப்பும், பையும் காணாமல் போய் விட்டது. தனது தோற்றத்தை மறைப்பதற்காக தனது தலைக்கு "டை' அடித்து கொண்டுள்ளார். வேறு பெயர்களில் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கும் ஜூலியன், தரையிலும், சோபாவிலும் படுத்து உறங்குகிறார். தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், இருப்பிடம் தெரிந்துவிடும் என்பதால், அதை பயன்படுத்தாமல், நண்பர்களிடம் கடன் வாங்கி செலவு செய்கிறார்.
பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜூலியன் கூறியதாவது: என்னை ஊடகத்துறையின் "ஜேம்ஸ் பாண்ட்' என்று கூறுகின்றனர். இதனால், எனக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்துள்ளனர். அதே நேரத்தில், அவர்களில் சிலர், துரோகிகளாக மாறி, என்னை காட்டி கொடுத்து விட்டனர். இதனால், எனக்கு இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.
சுவீடனில், இரண்டு பெண்களை நான் பாலியல் பலாத்காரம் செய்ததாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், நான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடவில்லை. அந்த பெண்களின் முழு சம்மதத்துடன் தான் அந்த சம்பவம் நடந்தது. அமெரிக்கா திட்டமிட்டு என் மீது அவதூறு பரப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இவ்வாறு ஜூலியன் கூறினார்.

கருத்துகள் இல்லை: