வெள்ளி, 29 அக்டோபர், 2010

Viswananthathevan.அரிது அரிது விஸ்வானந்ததேவன் போன்று மார்க்ஸிட்டாகப் பிறப்பது

- ஆனந்ததேவன்-
visuஎம்மத்தியில், மார்க்ஸிசம் தெரிந்து அதன்படிவாழ்ந்தவர்கள் மிகச்சிலரே. வாழ்ந்துவருபவர்களும் உள்ளனர்.  மார்க்ஸிசம் தெரிந்த எல்லோரும் மார்க்ஸி;ஸ்ட்;டாக வாழ்ந்தது கிடையாது.   மாறாக, படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழ்ந்துவருபவர்களும் உள்ளனர். கார்ல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றோரின் உருவப்படங்களை தொங்கவிட்டு பந்தா காட்டியவர்களும,;;  மார்க்ஸிஸத்தை நுனிப்புல் மேய்ந்தவர்களும் எம்மத்தியில் உள்ளனர்.  இடதுசாரித் தத்துவத்தை, புத்திஜீவி அந்தஸ்துக்காக, இளம்பருவத்தில் காவித்திரிந்தவர்களும் உள்ளனர்.  இவர்கள் எல்லோரும் இன்று, தமது வர்க்க குணாம்சத்திற்கிணங்க, வலதுசாரி அதுவும் பாசிச முகாமுக்குள் தமது புகழுக்காக உலாவருவதை வரலாறு எமக்குப் படம் பிடித்துக்காட்டுகிறது. 
 தோழர் விஸ்வானந்ததேவனோ இவர்களுக்கு நேரெதிரானவர்.  அவர் மார்க்ஸிட்டாக வாழ்ந்து காட்டிய அப்பழுக்கற்ற அரசியல் நேர்மை வாய்ந்த மனிதர். இவர் ஒரு பொறியியலாளரும் கூட. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில,;  தொழிலாளர்களின் போராட்டத்திற்காக தனது தொழிலையே துறந்த சிறந்த தொண்டன்.  அண்மையில் அவரது உருவப்படத்தை தேனீ இணையத்தளத்தில் பார்த்ததும், என்னால் அவர்பற்றி மீட்காமலும்,  எழுதாமலும் இருக்க முடியவில்லை.  உருவப்படத்தையும், அவரது கட்டுரையையும் பிரசுரித்தமைக்கு முதலில் தேனீக்கு நன்றி சொல்லவேண்டும்.
   அவர்  உருவத்தில் சார்ளிசப்ளின் போல் குள்ளமானவர்தான். ஆனால்  பார்வையிலும், கருத்தாழத்திலும் மிக உயர்ந்தவர.; அடர்ந்த கேசம், அடர்ந்த தாடி,  தோளில் ஒரு தோற்பை அதனுள் சஞ்சிகைகளும், மார்க்ஸிசப் புத்தககங்களும். (பொத்தகம்தான் தூயதமிழென்ற கண்டு பிடிப்பும் உள்ளது. சரிபார்த்துக்கொள்ளுங்கள்)   புத்தகங்கள் வைத்திருந்தமையால் அவர் புத்தகப்பூச்சியாகவோ அல்லது புத்தகவாதியாகவோ பரிமளித்தது கிடையாது. புத்தகங்களில் உள்ள விடயங்களை, சாராம்சத்தைக் கிரகித்து, அவற்றை விமர்சனபூர்வமாகப் பார்த்தவர்.  எமது நாட்டின் ஸ்தூல நிலைமைகளுக்கேற்ப நடைமுறைப்படுத்த முயன்ற  மகான்.
     அவர் எழுபதுகளில் இனப் பிரச்சினைகள் ஆரம்பமாகுமுன்னரே இலங்கை முழுவதற்குமான சோசலிச புரட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர்.  இனப்பிரச்சினை கூர்மையடைந்ததும், பிரதான முரண்பாடான இனமுரண்பாட்டை தீர்ப்பதனூடகவே வர்;க்க முரண்பாட்டையும் தீர்க்க முடியும் என்று நம்பியவர்;.  இதனூடகவே இலங்கை முழுவதற்குமான சோசலிசப்புரட்சி சாத்தியமாகுமென்று நம்பியவர்.  இதன்காரணமாக, சிங்கள முற்போக்கு சக்திகளுடனும், நட்புறவை வளர்த்தவர்.  இதற்கு அவரது சரளமான மும்மொழியிலான பேச்சும், உரையாடலும் அவருக்கு கை கொடுத்தன. அவர் ஏகாதிபத்தியங்களின் உள்நோக்கங்களையும், ஏனைய நாடுகளிலுள்ள போராட்ட அமைப்புக்களின் வரலாறுகளையும், படிப்பினைகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தவர்.  இத்தகைய கண்ணோட்டங்களிலிருந்தே, தமிழீழத்தேசிய விடுதலை முன்னணியை உருவாக்கினார்.
    தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தை, புலிகள்போன்று முதலாளித்துவ தலைமையிலல்லாது,  பாட்டாளிவர்க்க சிந்தனையுள்ள பிரிவினரின் தலைமையில் நடாத்துவதே சரியானதென்ற கண்ணோட்டம் வைத்திருந்தார்.  இதனாலேயே மாவோவின் புதிய ஜனநாயகப்புரட்சியே எமக்குப் பொருத்தமானதென்ற முடிவுக்கு வந்தார்.  பாசிஸ்டுக்களுக்கும், இராணுவ சர்வாதிகார ஆட்சியை விரும்பிய சரத்பொன்சேகாக்களுக்கும் ஜனநாயகத்தைக்கோரும் ஜனநாயகவாதிகள் ஒரு முறை புதியஜனநாயகப்புரட்சியை புரட்டிப்பார்ப்பது நல்லது.  இந்த ஜனநாயக வாதிகள் எல்லோரும் தம்மையறியாமல் முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் சேவகம் செய்கின்றார்கள்.  ஜனநாயகத்தை பொத்தாம் பொதுவில் பார்க்கிறார்கள்.  ஜனநாயகத்திற்கும்  வர்க்கச்சார்புகளுண்டென்பதை  மறந்துவிடுகிறார்கள். 
   புலித்தலைமையின், ஒடுக்குமுறையை செயற்கைத்தனமாக உருவாக்கும் foco  theoryயையும், சுத்த இராணுவக்கண்ணோட்டத்தையும், தனிநபர் பயங்கரவாதத்தையும் அன்றே விமர்சித்தவர். இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னரே அது பாஸிசத்திற்கு இட்டுச்செல்லுமென்று ஆரூடம் கூறியவர்.  அதனையே முள்ளிவாய்க்காலில்   புலிகளால் சொந்தமக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிப்பிரயோகத்திலிருந்து  உணர்கிறோம்.   இதில் கிட்டத்தட்ட 200 தமிழ்மக்கள் கொலைசெய்யப்பட்டனர். 
    1975இல் அல்பிரட் துரையப்பாவைக்கொன்றபோதே தோழரால் கூறப்பட்ட தனிநபர் பயங்கரவாதம், இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திவரைக்கும் வந்ததை வரலாற்றினூடாகக் காண்கிறோம்.  புலிகள் ஒரு மாஃபியா இயக்கம் என்று கூறியதை, கிட்டுவின் குரங்குடனான வலமும், பிரபாகரனின் புலிக்குட்டிவளர்ப்பும், நீச்சல்தடாகமும் குறியீடாக வெளிப்பட்டதைக் கண்ணுற்றோம்.  புலித்தலைமைக்கு, பணத்திலும், ஆயுதத்திலுமிருந்த அதீத அக்கறை மக்கள்மீது கிஞ்சிற்றும் இருந்தது கிடையாது. மாஃபியா என்பதற்கான விளக்கம் புரியாது மேற்கத்தைய முதலாளித்துவ ஊடகங்களின் கண்ணோட்டத்திலிருந்து சீன அரசாங்கத்தை மாஃபியா என்று கூறியவர்களும் உள்ளனர்.
    தமிழ்தேசிய விடுதலைப்போராட்டம் இனஒடுக்குமுறைக்குள்ளான  சகலபிரிவினர்களிலிருந்தும், கட்டியெழுப்பப்படும் ஐக்கியமுன்னணியை பாட்டாளிவர்க்க சிந்தனையில் முன்னெடுத்தலே பொருத்தமானதும் சரியானதுமென்றார்.  வேற்றுமைகளை அங்கீகரிப்பதிலிருந்து, பிறக்கும் ஒற்றுமையே ஐக்கிய முன்னணியென்று கூறினார்.  பொத்தாம்பொதுவில் ஒற்றுமையென்று கூக்குரலிடுவது தவறானதென்று கருதியவர். 
     இத்தகைய கருத்துடையவர்களை, இத்தகைய கருத்துக்களைச் செவிமடுக்கக்கூடியவர்களை தேடியலைந்தார்.  அதில் ஓரளவு வெற்றியும் கண்டார்.  ஆனால், அதனுள்வந்த வறட்டுவாதிகளும்,நிலையியல்வாதிகளும், புத்தகவாதிகளும், தன்முனைப்புவாதிகளும் அமைப்பை சீர்குலைத்துவிட்டனர்.  அவர் அதிலிருந்தும் மீண்டு PLFTயை ஸ்தாபித்தார்.  அவர் தன்முனைப்புவாதமில்லாதவர் (egoism).. மாறாக  ஸ்தாபன நலனும், புரட்சி நலனும், உட்கட்சி ஜனநாயகமும் கொண்ட நெஞ்சுரமிக்க போராளியாக வாழ்ந்தவர். அவரிடம் நிறையவே இயங்கியல் பார்வையிருந்தது. எல்லாவற்றிற்குமேலாக தோழர்களின் நலன்மீது மிகுந்த பரிவுகொண்டவர். இத்தகைய கருத்துக்களுக்கும், தகமைகளுக்கும் சொந்தக்கார்தான் தோழர் விஸ்வானந்ததேவன். 

கருத்துகள் இல்லை: