புதன், 27 அக்டோபர், 2010

இடதுசாரிகள் படு தோல்வி, கேரள உள்ளாட்சித் தேர்தல்-காங். அமோக வெற்றி

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு படுதோல்வி கிடைத்தது.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்ய இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் நேரடி போட்டி நிலவியது.

கேரள வரலாற்றில் முதன் முதலாக இந்த தடவை உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் பாதிக்கு பாதி பதவிகளில் பெண்கள் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. 10 மணிக்கெல்லாம் முடிவுகள் வெளிவரத் தொடங்கின.

கேரளாவில் 33 நகரசபைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நகரசபைகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக மலப்புரம், கோட்டயம் நகரசபைகளில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களைப் பிடித்து இடதுசாரிகளுக்கு ஆப்பு வைத்தது.

கொச்சி, திருச்சூர் மாநகராட்சிகள் முடிவுகள் முதலில் அறிவிக்கப்பட்டன. இரண்டு மாநகராட்சிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. கொச்சி மாநகராட்சியை கடந்த 30 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருச்சூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 45 வார்டுகள் காங்கிரஸ் வசமாகி உள்ளது. 2 இடங்களில் பா.ஜ.க.வும், 2 இடங்களில் சுயேட்சைகளும் வென்றுள்ளனர். படுதோல்வியை தழுவிய கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது.

கேரளாவில் வயநாடு பகுதியில் சமுதாய ஜனதா தளம் கட்சி நல்ல செல்வாக்குடன் உள்ளது. அந்த கட்சி சமீபத்தில் கம்யூனிஸ்டு கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள கல்பேட்டா நகரசபையை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பிடித்துள்ளது.

பாஜக பரவாயில்லை

பாரதீய ஜனதா கட்சிக்கும், கேரள உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக கேரளாவின் வடக்கு பகுதியில் பாரதீய ஜனதா கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காசர்கோடு நகரசபையில் பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு கிடைத்துள்ள பெரும் தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

பதிவு செய்தது: 27 Oct 2010 5:56 pm
50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அது தான் எல்லாம் கணவன் மார்களும் இங்கேயே இருக்கிரன்களே,

பதிவு செய்தவர்: TAMILAN
பதிவு செய்தது: 27 Oct 2010 5:45 pm
COMMUNISTS ARE GETTING DOWN. THEIR POLICIES WOULD BE FAILURED.

கருத்துகள் இல்லை: