வியாழன், 28 அக்டோபர், 2010

விவசாயத்தில் ரசாயன உரம் கலந்து கொலை : இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

மதுரை: "" விவசாயத்தில் ரசாயன உரம் கலந்து நம்மை கொல்கின்றனர்,'' என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார். மதுரை பொதுப்பணித்துறை சார்பில், சுற்றுப்புறச்சூழல் சீர்கேடுகளும், தீர்வுகளும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. உதவி செயற்பொறியாளர் கருணாகரன் வரவேற்றார். செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். உயிரியலும், சுற்றுச்சூழலும் குறித்து இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது : கடந்த 12 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவில்தான் அதிகம். தற்கொலை  செய்வது மட்டுமில்லாமல், விவசாயத்தில் ரசாயன உரம் கலந்து நம்மை கொல்கின்றனர். நஞ்சு உணவாகும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.  வெப்பமயமாதல், உணவு பற்றாக்குறைதான் இன்று உலகை அச்சுறுத்துகிறது. பூமி வெப்பமாவதற்கு 75 சதவீதம் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் காரணம். அதிகமான தொழிற்சாலைகள், வாகனங்களின் புகை, காடுகள் அழிப்பால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் 1950ல் எடுத்த சர்வேபடி, 23 சதவீதம் காடுகள் இருந்தன. சேட்டிலைட்டில் 11 சதவீதம் மட்டுமே இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. அதிலும் 3 சதவீதம் கருவேலமரங்கள். தண்ணீரில் 21 வகை நோய்கள் பரவுகின்றன. துரித உணவில் 150 வகை ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் 90 ஆயிரம் டன் ரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோடியே 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. இது எல்லா சீரழிவிற்கும் காரணமாவதோடு, பூமி சூடாக 33 சதவீதம் காரணமாகிறது. தமிழகத்தில் பூச்சிகளை உட்கொள்ளும் பறவைகள் 200 இருந்தன. பயிர் நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால், அவை இறக்கின்றன. நாம் சாகாமல் இருப்பது ஆச்சரியம். இயற்கை வேளாண் குறித்து யோசிக்க வேண்டிய காலமிது. விவசாய நிலங்களில் மரக்கன்று நடவேண்டும். அதன் நடுவே பயிர் செய்ய வேண்டும். சமூகம் நல்லா இருப்பது நமது கையில்தான் உள்ளது என்றார். சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனர் எஸ்.வி. பதி, பேராசிரியர் சந்திரன், வேல்ராஜன் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: