தமிழக எல்லையில் கேரள படகுகள் : சிங்களத்தை பழியாக்கும் மலையாளம்
கேரள படகுகளில் எழுதப்பட்டுள்ள மலையாள வார்த்தைகளை, சிங்கள வார்த்தைகள் என நினைத்து தமிழக மீனவர்களும் அவர்களது அதட்டலுக்கு அடிபணிகின்றனர். "தமிழக எல்லையில் கேரளாவிலிருந்து வாங்கப்படும் தடை செய்யப்பட்ட படகுகள் புழக்கம் அதிகரித்து வருவதே, மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.இந்திய கடல் பகுதியை பொறுத்தவரை எல்லை பிரிப்பதில் தொடர்ந்து குளறுபடி உள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் தங்களுக்குரிய பகுதியை தேர்வு செய்வதில் திண்டாடி வருகின்றனர். கிடைத்த இடத்தில் வலையை விரித்து மீன்பிடித்து வருகின்றனர். சில நேரங்களில் அவர்கள் விரிக்கும் வலை இலங்கை கடற்பகுதியில் என்பது, அந்நாட்டின் கடற்படை எச்சரிப்புக்கு பின்பே தெரியவருகிறது. இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கு, இலங்கை கடற்படையே காரணம் என்ற, குற்றசாட்டும் இருந்து வருகிறது. இது உண்மை என்றாலும், இதில் மறைமுகமான உண்மை ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமீப காலமாக தடை செய்யப்பட்ட அதிக இழுவை திறன் கொண்ட படகுகள் மன்னார் வளைகுடாவில் இயக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தடை விதிக்கப்பட்ட இப்படகுகளை இங்குள்ள சிலர் கேரளாவிலிருந்தே வாங்குகின்றனர். மன்னார் வளைகுடாவில் கிடைக்கும் அரிய வகை மீன்களுக்கு ஆசைப்பட்டு, இவை ஆழ்கடல் பகுதியில் இயக்கப்படுகிறது. இவற்றை விசைப்படகு மீனவர்கள் கண்காணிக்காத படி பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர். அதில் ஒன்று தான், சிங்களத்தை பயன்படுத்தும் முறை, தாம் இலங்கையை சேர்ந்தவர்கள், எனக்கூறிக்கொண்டு, தம்மை நெருங்கி வரும் விசைப்படகு மீனவர்களை துரத்தி அடிக்கும் முறை.
வாங்கி வரப்பட்ட கேரள படகுகளில் எழுதப்பட்டுள்ள மலையாள வார்த்தைகளை, சிங்கள வார்த்தைகள் என நினைத்து தமிழக மீனவர்களும் அவர்களது அதட்டலுக்கு அடிபணிகின்றனர். சமீபகாலமாக அதிகரித்து வரும் இப்பிரச்னை, தற்போது வெளிச்சத்தில் வரத்தொடங்கியுள்ளது. இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலை தமக்கு சாதகமாக்கி, தமிழக மீனவர்களை துன்புறுத்த தொடங்கி உள்ளதால், தமிழக மீனவர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக