புதன், 9 ஜூன், 2010

கனடாவில் ஊடகங்களை நடாத்தி வரும் பெரும்பாலோர், அடிப்படையான ஊடக அறிவு சம்பந்தமான கல்வி

இலங்கையிலும் சரி, புலம்பெயர் நாடுகளிலும் சரி, செயல்படுகின்ற தமிழ் ஊடகங்கள் அனைத்தும் ‘சொல்வல் எழுதல் பாணியிலேயே தமது ஊடகப் பணியைச் செய்து வருகின்றன. அவை மக்களுக்கு உண்மைகளின் அடிப்படையில் செய்திகளை வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட சில அரசியல் சக்திகளின் உள்ளாந்த நோக்கங்களை ஈடுசெய்வதற்காகவே, கடந்த காலங்களிலும் இப்பொழுதும் செயல்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் இன்றைய பாரிய சீரழிவுகளுக்கு, தமிழ் அரசியல் சக்திகள் மட்டுமின்றி, ஊடகங்களும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதை யாரும் மறுத்துவிட முடியாது.” இவ்வாறு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ் வெளியீடுகளின் முன்னைநாள் முகாமைத்துவ ஆசிரியரும், இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளருமான மனோரஞ்சன் கூறினார்.
கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம், யூன் 06ம் திகதி கனடாவின் ஸ்காபரோ நகரில் ஒழுங்கு செய்திருந்த ‘ஊடக தர்மமும் தமிழ் ஊடகங்களும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மனோரஞ்சன் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  தமிழ் சமூகத்தில் கடந்த 35 வருட வரலாற்றை, எதிர்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் எழுதும் போது, கடந்த காலத்தில் தமிழ் ஊடகங்கள் தெரிவித்த செய்திகளையும், தகவல்களையும், கருத்துக்களையும் அடியொற்றி எழுதுவார்களாக இருந்தால், அது எமது எதிர்காலச் சந்ததியினருக்கு மிகவும் தவறான சித்திரம் ஒன்றையே வழங்கும். எனவே இப்பொழுதே தமிழ் ஊடகங்களால் திரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் வரலாறு சரியான முறையில் திருத்தி எழுதப்பட வேண்டும்.”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ தமிழ் ஊடகங்களின் இந்தப் போக்கிற்கு, கடந்த 35 வருடங்களாக தமிழ் மக்கள் மத்தியில் தமது எதேச்சாதிகார நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த புலிகள் பிரதான காரணகர்த்தாக்களாக இருந்த போதிலும், அவர்கள் மட்டும் பொறுப்பாளிகள் அல்ல. அவர்களது தவறான போக்கை தடுத்து நிறுத்தாதது மட்டுமின்றி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், பீஸ்மர், கோகர்ணன், கிரிஜா, மதுபாலன் போன்ற பெயர்களில் ஒழிந்து நின்று கொண்டு அரசியல் ஆய்வுகளைச் செய்து வந்த, தம்மை ‘முற்போக்கு புத்திஜீவிகள்’ என்போரும் காரணகர்த்தாக்கள் ஆவர். அவர்கள் செய்த இந்த வரலாற்றுக் குற்றங்களிலிருந்து ஒருபோதும் அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது” என்றார்.
கருத்தரங்கில் உரையாற்றிய சமூகச் செயற்பாட்டாளரும், கம்யூனிஸட் கார்த்திகேசனின் புதல்வியுமான ஜானகி பாலகிருஸ்னன் தமது உரையில், “ ஊடகம் என்பது எப்பொழுதும் பக்கச்சார்பற்ற முறையில் உண்மையைச் சொல்வதாக இருக்க வேண்டும். அதேவேளையில் அதில் வரும் விடயங்கள் ஜனரஞ்சகமாகவும், காலத்திற்கேற்ப சுருக்கமாகவும் இருக்கவும் வேண்டும். ஊடகங்கள் மக்களின் பொழுதுபோக்கு விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும். இன்று தயாரிக்கப்படும் அநேகமான திரைப்படங்கள் வன்முறையைத் தூண்டுவனவாக இருப்பதால், சமூகத்தில் பாரிய எதிர் விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. கனடிய தமிழ் சமூகம் தனிமைப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு, கனடிய பிரதான நீரோட்டத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய, முன்னாள் லேக்ஹவுஸ் ஊடகவியலாளரும், ‘தினமுரசு’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான து.பாஸ்கரன், ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய தர்மங்கள், சர்வதேச விதிமுறைகள் பற்றி விரிவான ஆய்வறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினாh. கொழும்பு பல்கலைக் கழகத்திலும், கனடிய ஊடக நிறுவனமொன்றிலும் தாம் கற்ற, ஊடக செயற்பாட்டு முறைகள் குறித்த மிகவும் பயனள்ள கருத்துகளை அவர் தமது ஆய்வறிக்கையில் முன் வைத்தார்.
அங்கு கருத்துரைத்த அவர், “கனடாவில் ஊடகங்களை நடாத்தி வரும் பெரும்பாலோர், அடிப்படையான ஊடக அறிவு சம்பந்தமான கல்வி இல்லாமல் இருப்பதுடன், வியாபாரநோக்கமொன்றையே தமது ஊடக தர்மமாகக் கருதிச் செயல்பட்டு வருகின்றனர். அவற்றை அடைவதற்காக அவர்கள் புலிகளின் மக்கள் விரோதச் செயல்பாட்டை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துச் செயற்பட்டு வருகின்றனர். இது ஒரு தூரதிஸ்டமான நிலைமை” என்றார்.
கருத்தரங்கிற்கு தலைமை வகித்த நீண்டபால இடதுசாரிச் செயற்பாட்டாளரும், லேக்ஹவுஸ் வெளியீடுகளான தினகரன், அமுது என்பனவற்றில் பணியாற்றியவருமான ச.சுப்பிரமணியம், கடந்த 35 வருட காலமாக தமிழ் ஊடகத்துறை எதிர்நோக்கி வரும் சவால்களை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக தமிழ் ஊடகத்துறை புலிகளின் பாசிசச் செயற்பாடுகளால் எவ்வாறு முற்றுமுழுதாக செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டார்.
அங்கு சுப்பிரமணியம் உரையாற்றுகையில், “ இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொலை அச்சுறுத்தலுக்கும்,  அடக்குமுறைக்கும் உள்ளாகிறார்கள் என சில வெளிநாட்டு ஊடக அமைப்புகள் அடிக்கடி குற்றம் சாட்டி நீலிக் கண்ணீர் வடிக்கின்றன. ஆனால் இதே அமைப்புகள் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில், புலிகள் ஊடகவியலாளாகள் மீது நடாத்திய நரபலி வேட்டை குறித்து கண்ணை மூடிக்கொண்டே இருந்து வந்துள்ளன. ஏன் வெளிநாடுகளில் கூட புலிகள் தமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்து பலரைத் தாக்கிய போது மௌனமாகவே இருந்தன. இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை அரசாங்கத்தை விட, புலிகளே அதிகளவில் ஊடகவியலாளர்களைக் கொன்று குவித்துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,  1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர். தலைமையிலான ஐ.தே.க அரசின் இராணுவம், ‘மனிதன்’ என்ற ஒரு சிறிய பத்;திரிகையின் ஆசிரியரும், பல்கலைக்கழக மாணவருமாகிய விமலதாசன் என்பவரை முதன் முதலாகக் கொலைசெய்து, தமிழ் ஊடகவியலாளர்களுக்கெதிரான தாக்குதலை ஆரம்பித்து வைத்தது.
அதைத் தொடர்ந்து, புலிகள் தமது கைவரிசைசையை ஊடகவியலாளர்கள் மீது காட்ட ஆரம்பித்தனர். அவர்கள் தொடர்ந்து ‘ஈழமுரசு’ பத்திரிகை அதிபரும், தமிழர் நிதிய உரிமையாளருமான மயில் அமிர்தலிங்கம் அவர்களைக் கொலைசெய்து அவரது பத்திரிகையை அபகரித்தனர். பின்னர் ‘விடுதலை’ என்ற பத்திரிகையின் ஊடகவியலாளர் சண்முகலிங்கம், சிரேஸ்ட பத்திரிகையாளரும், மட்டுநகர் மாநகரசபை மேயருமான செழியன் பேரின்பநாயகம், ‘புதியபாதை’ ஆசிரியர் சுந்தரம், கவிஞரும், நாடக செயற்பாட்டாளரும், பெண்ணியவாதியும், யாழ்.பல்கலைக்கழக மாணவியுமான செல்வி, ‘முறிந்த பனை’ நூலின் ஆசரியர்களில் ஒருவரும், யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளருமான ரஜனி திராணகம, “புதியதோர் உலகம்’ நாவலின் ஆசரியர் கோவிந்தன் (நோபேர்ட்), ‘மக்கள் குரல்’ வானொலி அறிவிப்பாளரும், நாடகவியலாளருமான தர்மலிங்கம் மாஸ்டர், ‘தொழிலாளர் பாதை’ ஆசிரியர் குழு உறுப்பினர் தேவராசா, இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா, ‘தினமுரசு’ பத்திரிகையாளர் சின்னபாலா என்றழைக்கப்படும் பால நடராஜ ஐயர் உட்பட பலரைக் கொலை செய்துள்ளனர். பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டிருந்த சிறுவர்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.
“புலம்பெயர் நாடுகளில் கூட, 1996ல் பிரான்சில் வைத்து சபாலிங்கம், கஜேந்திரன் போன்ற ஊடகவியலாளர்களைக் கொலை செய்ததுடன், கனடாவில் ‘தாயகம்’ பத்திரிகை ஆசிரியர் ஜோர்ச் குருஸ்சேவ், கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிபர் இளைய பாரதி, சுதந்திர ஊடகவியலாளர் டீ.பி.எஸ். ஜெயராஜ் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். கனடாவில் தமிழகத்திலிருந்து வரும் ‘துக்ளக்’ சஞ்சிகைக்கும், இலங்கையிலிருந்து வரும் ‘தினமுரசு’ பத்திரிகைக்கும் தடை விதித்தனர். லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் ரி.பி.சி வானொலி நிலையத்தை பல தடவைகள் தாக்கி அதன் ஒலி பரப்புக் கருவிகளைச் சேதப்படுத்தினர். இவைகள் எதுபற்றியும் இந்த சர்வதேச ஊடக அமைப்புகள் எவ்வித கண்டனங்களும் தெரிவிக்காதது, அவர்களுடைய பக்கச் சார்பையும், உள்நோக்கங்களையும் அம்பலமாக்குகின்றது” என்றார்.
கருத்தரங்கில் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் உட்பட மண்டபம் நிறைந்த மக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: