புதன், 9 ஜூன், 2010

முடிவு எடுப்பதில் பா.ம.க., திணறல் : தி.மு.க.,வை உதறவும் தயக்கம்

தி.மு.க., கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க முடியாமல், பா.ம.க., திணறி வருகிறது. அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன், ராமதாஸ் நேற்று சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில், தி.மு.க.,வை உதறவும் அக்கட்சி தயங்கி வருகிறது.

தி.மு.க.,வுடன் கூட்டணி சேர விருப்பம் தெரிவித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ராமதாஸ் இரண்டு முறை கடிதம் எழுதினார். அதனடிப்படையில், தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் விவாதித்து, கூட்டணியில் பா.ம.க.,வை சேர்த்துக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. இதை, முதல்வர் கருணாநிதியும் அறிவித்தார். எனினும், அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுக்காமல், சட்டசபை தேர்தலுக்கு பிறகே வழங்கப்படும் என தி.மு.க., அறிவித்ததை, பா.ம.க.,வால் ஏற்க முடியவில்லை.இதனால், கூட்டணி குறித்து ஏற்கனவே முதல்வர் அறிவித்தபிறகும், அதன்பின் தொடர்ச்சியாக பா.ம.க., ஆலோசித்து வருகிறது. இதனால், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படாத நிலை இருக்கிறது. இந்நிலையில், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நேற்று சென்னையில் கூட்டி, ராமதாஸ் விரிவாக ஆலோசனை நடத்தினார். எனினும், தி.மு.க., கூட்டணி குறித்து எந்தவித முடிவும் அதில் எடுக்கவில்லை.


இது தொடர்பாக, நிருபர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டி: கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி குறித்தும், உட்கட்சி தேர்தலை வரும் 30ம் தேதிக்குள் நடத்தி முடிப்பது குறித்தும் மட்டுமே பேசினோம். தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்தோ, ராஜ்யசபா தேர்தல் குறித்தோ எதுவும் பேசவில்லை. பென்னாகரம் தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிராக பேசியதற்காகல, இப்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது என்பது தவறு. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு நிறைய உதாரணம் கூற முடியும். கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' புத்தகத்திலேயே முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளை உடைய ராஜாஜியின் சுதந்திரா கட்சியும், தி.மு.க.,வும் கூட்டணி வைத்தது குறித்தும், 1971ல் இந்திரா காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி வைத்தது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தி.மு.க.,வினர் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இது குறித்து நாங்கள் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறோம். கோரிக்கை என்ன? முதல்வரை மீண்டும் ஒருமுறை எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து பேசுவர். அந்த சந்திப்பு ரகசியமாக இருக்காது. அதற்குப் பின், கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுப்போம். எங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதுபோல், எங்கள் முடிவு குறித்து நான் அறிவிப்பேன். தி.மு.க.,விடம் நாங்கள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அவற்றை இப்போது வெளியிட முடியாது. கூட்டணி குறித்து ஒரே நாளில் முடிவு செய்துவிட முடியாது. அதனால்தான் திரும்பத் திரும்ப இது குறித்து பேசுகிறோம். முதல்வரின் கனவுத் திட்டமான, சட்ட மேலவை குறித்த தீர்மானத்தில் எங்கள் ஆதரவு இருந்ததால்தான் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் அது நிறைவேறியது. எங்கள் ஆதரவு இல்லையென்றால் அது நிறைவேறியிருக்காது. அதை இந்த தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அ.தி.மு.க., எங்களை கூட்டணிக்கு அழைத்ததாக வெளியான செய்தி உண்மைதான். பென்னாகரம் தேர்தலின் போது, எங்களுக்கு ஆதரவு தருவதாகவும், ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி ராஜ்யசபா, "சீட்' தருவதாகவும் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் எங்களிடம் தெரிவித்தனர். ராஜ்யசபா, "சீட்'தான் எங்களுக்கு முக்கியம் என்றால், அ.தி.மு.க., அழைப்பை நாங்கள் ஏற்றிருப்போம்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


"புராண காலத்தில் இருந்தே, "குரு'க்கள் தான் பிரச்னைக்கு காரணம்' என முதல்வர் கூறியது குறித்து கேட்டபோது,"எங்கள் குரு, மிக, மிக, மிக நல்லவர். வெளிப்படையாக பேசக் கூடியவர்' என, ராமதாஸ் பதிலளித்தார்.பா.ம.க., நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் எந்தவித முடிவும் எடுக்காததன் மூலம், கூட்டணி விவகாரத்தில் அக்கட்சி திணறி வருவது தெளிவாகியுள்ளது. அதேநேரத்தில், தி.மு.க.,வை உதறவும் தயக்கம் காட்டி வருகிறது. இதனால், அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: