வெள்ளி, 11 ஜூன், 2010

காதல் தகராறில் மின் கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர் கொலை

நெல்லை அருகே காதல் தகராறி்ல் ஆட்டோ டிரைவர் ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தென்காசி அருகே உள்ள ஆலங்குளத்தையடுத்த பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாடக்கண்ணு (35).

இவர் அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகள் உமா மகேஸ்வரியை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்யவும் முறைப்படி பெண் கேட்டார்.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உமா மகேஸ்வரியின் தந்தை திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து தனது மகளுக்கு உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்தார். முத்து என்பவருக்கு உமா மகேஸ்வரியை திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனாலும் உமா மகேஸ்வரியும், மாடக்கண்ணுவும் தொடர்ந்து செல்போனில் பேசியும், அவ்வப்போது சந்தித்தும் வந்துள்ளனர்.

இது உமா மகேஸ்வரியின் கணவர் முத்துக்கு தெரியவந்தவுடன் அவர் மனைவியை எச்சரித்தார். ஆனாலும் இந்தக் கள்ளக் காதல் தொடர்ந்தது.

இந் நிலையில் நேற்று முன்தினம் பூலாங்குளத்தில் அம்மன் கோவில் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள மனைவி உமா மகேஸ்வரி மற்றும் 2 மகள்களுடன் முத்து பூலாங்குளம் சென்றார்.

அப்போது உமா மகேஸ்வரி மாடக்கண்ணுவிடம் பேசியதாகத் தெரிகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த முத்து, தனது மாமனார் சுப்பையாவுடன் இணைந்து மாடக்கண்ணுவை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் மாடக்கண்ணுவின் வீட்டுக்குச் சென்ற சுப்பையா, தனது பேரக் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி ஆட்டோவை கொண்டு வருமாறு மாடக்கண்ணுவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து மாடக்கண்ணு ஆட்டோவுடன் சுப்பையாவின் வீட்டுக்குச் சென்றார்.

அப்போது அங்கிருந்த முத்து மற்றும் சுப்பையாவின் உறவினர்கள் மாடக்கண்ணுவை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளன்.
கற்கள், கட்டைகளாலும் அடித்துள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் அந்தக் கும்பல் பயங்கரமாகத் தாக்கியதில் மாடக்கண்ணு அங்கேயே இறந்தார். இதையடுத்து முத்து உள்ளிட்ட அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மாடக்கண்ணு பிணமாக கம்பத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து அவரது வீட்டுக்குத் தகவல் தந்தனர்.

போலீசார் இன்று காலை சுப்பையாவை கைது செய்தனர். அவரது மருமகன் முத்து உள்ளிட்ட அவர்களது உறவினர்களைத் தேடி வருகிறனர்.

இந் நிலையில் மாடக்கண்ணுவின உறவினர்கள் சுப்பையா குடும்பத்தினரை தாக்க திரண்டு வந்து அவரது வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்றனர்.

போலீசார் விரைந்து வந்து அவர்களைத் தடுத்துவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அங்கு இரு தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: