செவ்வாய், 8 ஜூன், 2010

பூநகரி, கௌதாரிமுனை, சுற்றுலாத் தலமாக்குவது தொடர்பான ஆலோசனைகள்

பூநகரி, கௌதாரிமுனை, மண்ணித்தலைப் பகுதியை சுற்றுலாத் தலமாக்குவது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இயற்கையான வனப்பும் பண்டைக்காலப் பண்பாட்டுச் சின்னங்களுமுள்ள இப்பகுதி கடந்தகாலத்தில் ஏற்பட்டஅசாதாரண நிலைமைகளினால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. மேலும், இங்குள்ள இயற்கையான மணல் மேடுகளிலிருந்து தற்போது கட்டிட வேலைகளுக்காக கணிசமான அளவு மணல் அள்ளப்பட்டு வருகின்றது. இதனால், இப்பகுதியின் இயற்கைவளம் பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது. மேலும், இப்பகுதியில் சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட சைவப் பாரம்பரியமிக்க சிவாலயமொன்று கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. எனவே, இப்பகுதியை, சுற்றுலாத்தலமாக்குவது தொடர்பில் சாதகமான கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மேற்படி பகுதி சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டால் இப்பகுதியைச் சேர்ந்த பலர் தொழில்வாய்ப்பைப் பெறுவர். இதனோடு கௌதாரிமுனை மீனவர் சமாசத்திற்கென குருநகர் கடற்கரை வீதியில் மீன்சந்தைக்கான நிலமொன்று உள்ளது. இது கடந்த காலத்தில் ஏற்பட்ட போர்ச் சூழலினால் பயன்படுத்தப்படவில்லை. இதையும் மீள இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் பூநகரிப் பகுதி மீனவர்கள் குடாநாட்டிற்கு வந்து மீனை விற்பனை செய்துகொள்ள முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: