maalaimalar : ராமேசுவரம்: ராமேசுவரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றின் வேக மாறுபாட்டால் ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது.
மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி அரிச்சல் முனை, அனந்தராயர் சத்திரம் பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் மீனவர்கள் 3 நாட்களாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இரவில் மீண்டும் சகஜ நிலையை அடைந்தது.
இந்த நிலையில் இன்று காலை அக்னி தீர்த்த கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. மேலும் பாம்பன், சங்குமால் கடல் பகுதிகளிலும் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் தரை தட்டி நின்றன.
ராமேசுவரம் கோவில் அமைந்துள்ள அக்னி தீர்த்த கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
அமாவாசை, பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வு என்றாலும் இந்த முறை 200 மீட்டருக்கும் அதிகமாக கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் புனித நீராட முடியவில்லை. இதே போல சங்குமால் பகுதியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக