புதன், 1 ஜூன், 2022

மாநாடு பட வசூல் 117 கோடி .. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்

 மின்னம்பலம் : நடிகர் சிலம்பரசனின் ‘மாநாடு’ திரைப்படத்தின் உலகளாவிய வசூலை அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் ‘மாநாடு’. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் உலகம் முழுவதுமே இந்தப் படம் 117 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு திரைப்படம் உலகம் முழுவதுமே கிட்டத்தட்ட 117 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த வருடத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றியாகவும் இந்தப் படம் அமைந்துள்ளது. 

இதற்காக நடிகர் சிலம்பரசன், வெங்கட் பிரபு, எஸ்.ஜே. சூர்யா, யுவன்ஷங்கர் ராஜா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன் எனப் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் திரைப்படம் முதன்முறையாக 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூல் செய்துள்ளது என ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். நடிகர் சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’ படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுமட்டுமில்லாமல், ‘கொரோனா குமார்’, ‘மஹா’ ஆகிய படங்கள் சிம்புவிடம் கைவசம் இருக்கின்றன.

ஆதிரா

கருத்துகள் இல்லை: