வெள்ளி, 3 ஜூன், 2022

கலைஞர் பிறந்தநாள்: விருது, குடியிருப்பு ஆணை வழங்கிய முதல்வர்!

கலைஞர் பிறந்தநாள்:  விருது, குடியிருப்பு ஆணை வழங்கிய முதல்வர்!

கலைஞரின் 99ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன்முறையாக அரசு விழாவாக கலைஞர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் முதல்வர் ஸ்டாலின், ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத் துறை வித்தகர்' விருதைச் சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸுன் வீட்டிற்கே சென்று வழங்கி கவுரவித்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை தரப்பில் மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதனுக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து 'கலைஞர் எழுதுகோல் விருதையும் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.



அதுபோன்று, கனவு இல்ல திட்டத்தின் கீழ், தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய விருதுகளைப் பெற்ற ந. செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன்,கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதன், முனைவர் இ.சுந்தரமூர்த்தி,பூமணி என்கிற பூ. மாணிக்கவாசகம், முனைவர் கு. மோகனராசு,இமையம் என்கிற வெ.அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில்,குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, சென்னை, ராயபுரம், தங்கசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” என்ற தூய்மைப் பணி விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்தார்.

ஒருபுறம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்திக் கொண்டாடி வருகின்றனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை: