ஞாயிறு, 29 மே, 2022

குடியரசுத் தலைவராக வெங்கையாவுக்கு திமுக ஆதரவு?

 மின்னம்பலம் : முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையைத் திறந்துவைத்த பின்னர், கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றது. மூத்த அமைச்சர் துரைமுருகனின் வரவேற்புரைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தலைமைச் செயலர், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினர்களை வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்தவர், நடிகர் ரஜினிகாந்த்தை தனியாகக் குறிப்பிட்டார்.
தன்னுடைய தந்தையின் சிலையைத் திறக்கவில்லை என உணர்த்துவதைப் போல, நவீன தமிழ்நாட்டின் தந்தையாக கலைஞர் என்னென்ன செய்தார் என்பதைப் பட்டியலிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்.


“தமிழ்நாட்டின் நிலையை உயர்த்தப் பாடுபட்டவர் என்பதால்தான், கலைஞருக்கு தமிழ்நாடு முழுவதும் சிலை எழுப்பப்பட்டு வருகிறது. இந்தச் சிலைக்கு இருக்கக்கூடிய சிறப்பு, தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவுக்கும் இடையில் அமைந்திருக்கிறது; இது மிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இன்னொரு சிறப்பு, தலைவர் கலைஞரால் ஓமந்தூரார் தோட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் கட்டடம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்காக கட்டப்பட்டது. தற்போது மருத்துவமனையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இது கலைஞரின் கனவுக் கோட்டையாகவே கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இங்குதான் அவரது சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. திறப்பு விழா நடக்கக்கூடிய இந்தக் கலைவாணர் அரங்கமானது, ஒருகாலத்தில் ‘பாலர் அரங்கம்’ என்று இருந்தது. மிக பிரமாண்டமாகக் கட்டி எழுப்பி கலைவாணர் அரங்கம் எனப் பெயர் சூட்டியவரும் கலைஞர்தான்” என்று மூன்று சிறப்புகளையும் விவரித்தார்.

“இந்திய நாட்டின் பிரதமர்களை உருவாக்கியவர் கலைஞர். இந்திய அளவில் நிலையான ஆட்சியை உருவாக்குவதற்கும் துணை நின்றவர் கலைஞர்” என்ற மு.க.ஸ்டாலின், இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர்கள் பலரை உருவாக்கியவர் என்றும் கலைஞரைப் பற்றிக் குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சரின் இந்தப் பேச்சு பூடகமாகவும் உள்ளதென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். என்னதான் எதிர்க்கட்சி என்றாலும், குடியரசுத்தலைவர் தேர்தலின்போது இன்றுவரை இருக்கும் கூட்டணிகூட, வடமாநிலம் - தென்மாநிலம், சொந்த மாநிலத்தவர் - வேறு மாநிலத்தவர் என்கிறபடி பலவித அம்சங்களை முன்னிட்டும், அந்த நேரத்தில் முடிவெடுக்கப்படக் கூடியதாகவும் இருக்கும்.

வடமாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்குப் பிறகு, தென்மாநிலம் ஒன்றைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக வாய்ப்பு உள்ள நிலையில், அந்தப் போட்டியில் வெங்கையாவும் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியிலும் கலைஞரின் சிலை திறப்பு விழா நிகழ்வுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

கருத்துகள் இல்லை: