சனி, 4 ஜூன், 2022

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு; தீட்சிதர்கள் எடுத்த அதிரடி முடிவு!

tamil.samayam.com : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் அரசின் உத்தரவும், அவற்றை எதிர்க்கும் தீட்சிதர்களும் என பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கண்ணன் மற்றும் துணை ஆணையர் சி.ஜோதி ஆகியோருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் எஸ்.ஹெமசபேச தீட்சிதர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னிச்சையாக கோயில் ஆவணங்களை கோர இயலாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பிலேயே கூறப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட 19-9-2014 தேதியிட்ட அரசாணை எண் 236-ல் இந்து அறநிலையத்துறை 6-1-2014 தீர்ப்பின் படி தீட்சிதர்கள் தனி சமய பிரிவினர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்கால வழக்குகளிலும், மேற்சொன்ன தீர்ப்பின்படி முன்வழக்கு தடையாக செயல்படும்.               எனவே மேற்கண்ட தீர்ப்பின் முடிவு இறுதியாக உள்ளது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தீட்சிதர்கள் தனி சமய சீர்மரபினர் என்று தீர்ப்பு முடிவு இறுதியாக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப் பிரிவு 107-ன் கீழ் தீட்சிதர்கள் நிர்வாகமானது இந்து சமய அறநிலையத்துறையின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது.


நடராஜர் கோயில் நிலங்கள் 9-3-1976 தேதியிட்ட அரசாணை எண் 836-ன் படி தனி வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே நடராஜர் கோயில் நிலங்களை பற்றி தனி வட்டாட்சியரிடம் தான் கோர முடியும். தங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட பதிவேடுகளானது தங்களது துறை கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் கடந்த 40 வருடங்களாகவே இல்லை. நகைகள் பற்றிய விபரத்திற்கு தாங்கள் 2005ஆம் ஆண்டு செய்த தணிக்கை அறிக்கை இதுவரை சிதம்பரம் கோயிலுக்கு தரப்படவில்லை.

கடைசியாக முடிக்கப்பட்ட தணிக்கை அறிக்கை இல்லாமல் புதிதாத 17 ஆண்டுகள் கழித்து தொடங்க இயலாது. 7-6-2021 தேதியிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி துறை தணிக்கை குழுக்கான விதிகள் சட்டப்படி செல்லாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சட்டப்பூர்வமான தணிக்கை மற்றும் ஆய்விற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம். ஆனால் தங்களது சட்டப்பிரிவு 107-ன் படி நீங்களே ஒப்புக் கொண்ட வகையில் தனி சமய பிரிவினர் நிர்வாகம் செய்யும் கோயிலிகளில் தன்னிச்சையாக ஆய்வு மற்றும் தணிக்கை செய்ய உங்கள் துறை அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்ற சட்டநிலைப்பாடு உள்ளது.


அதனால் தங்களது ஆய்வு மற்றும் தணிக்கையை உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டு கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் தணிக்கை ஆட்சேபனை 15 லட்சத்திற்கும் மேல் தீர்க்கப்படாமல் உள்ளது. பல அதிகாரிகள் கோயில் நிதி முறைகேடாக கையாண்டு உயர் நீதிமன்ற தீர்ப்பில் கண்டிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோயில்களில் முறைகேடுகளை சரி செய்யாமல், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல், அரசியல் சாசன பாதுகாக்கப்பட்ட கோவில் நிர்வாகம் செய்யும் தனி சமய பிரிவினரான தீட்சிதர்கள் நிர்வாகத்தை ஆய்வு செய்ய தார்மீக உரிமையில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தற்போது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை திரும்ப பெறவும் மற்றும் அரசாணையை திரும்ப பெறவும் மீண்டும் கோரப்படுகிறது. தவறினால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல் தமிழக அரசின் தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: