செவ்வாய், 31 மே, 2022

திராவிட வரலாற்றை பட்டிதொட்டி எங்கும் .. ‘திராவிட மாடல் பயிற்சி பாசறை’ !

 கலைஞர் செய்திகள்  - பிரேம்குமார் : ‘திராவிட மாடல்' என்று சொல்வது ஒரு நூற்றாண்டின் வரலாற்றைச் சொல்வதாக ஆகும். அந்த அடிப்படையில் இப்பாசறைக் கூட்டங்கள் வெற்றி பெறட்டும்!
பெரியார் - அண்ணா - கலைஞரைத் தொடர்ந்து.. நூற்றாண்டின் வரலாற்றைச் சொல்லும் ‘திராவிட மாடல் பயிற்சி பாசறை’ !
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் - தமிழகத்தில் மாபெரும் அறிவுப்புரட்சிக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது. அனைவரையும் கொள்கை ரீதியாக, கோட்பாடு ரீதியாக பயிற்றுவிக்கும் கடமையை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார்கள்.


“அடுத்த ஆண்டு (2023) நூற்றாண்டு விழா காணவிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும் - அவர் உயிரென எண்ணிக்கட்டிக் காத்த இயக்கத்தின் கொள்கைகளையும் - அவர் வழியில் ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தி ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் தமிழ்நாட்டைத் தலைநிமிரச் செய்துள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளையும், இன்றைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்த்திடும் வகையில், மாநிலம் முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சி பாசறைக்' கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது” என்பதுதான் அந்த கூட்டத்தின் தீர்மானம் ஆகும்.

அரங்குகளிலும் - இணையம் வழியாகவும் இக்கூட்டங்கள் நடக்க இருக்கின்றன. இது போன்ற பாசறைக் கூட்டங்களின் வாயிலாகத்தான் கழகம் வளர்க்கப்பட்டது. கழகத்தின் கொள்கை நாடு முழுவதும் பரப்பப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டங்களை மாலை நேரத்து கல்லூரிகள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அந்தளவுக்கு பயிற்சிக்கூடங்களாக அவை அமைந்திருந்தன. இன்னும் சொன்னால், கட்டணம் செலுத்தி கூட்ட அரங்குக்குள் வந்து - பேச்சுகளைக் கேட்கும் முறையை திராவிட இயக்கம் அந்தக் காலக்கட்டத்தில் அறிமுகம் செய்தது. அரங்கம் நிறைந்து - ஆட்கள் உள்ளே நுழைய முடியாத சூழலும் இருந்தது.

மேலும், பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பேச்சாளர்கள் பேசும் முறையை திராவிடர் இயக்கத்தின் கூட்டங்கள் அறிமுகம் செய்தன. தமிழரின் வரலாற்றுப் பெருமைகள் தொடங்கி - உலகப்புகழ் பெற்ற புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகளின் வரலாற்றை அறிமுகம் செய்வதாக இத்தகைய பாசறைக் கூட்டங்கள் அமைந்திருக்கும். ஆங்கிலத்தில் அந்தக் காலத்தில் வெளியான பல்வேறு புத்தகங்களை தமிழுக்கு அறிமுகம் செய்வதாக அவை அமைந்திருக்கும்.

திராவிட இயக்கத்தின் மூத்தவர்கள் மூவரில் ஒருவரான மருத்துவர் நடேசனார், முதலில் தொடங்கிய திராவிடர் சங்கமும் - பின்னர் தொடங்கிய திராவிடர் இல்லமும் இத்தகைய பயிற்சி பாசறைக் கூடமாகத்தான் அமைந்திருந்தது. அங்கே உரையாற்ற வந்த டி.எம்.நாயரும், தியாகராயரும், நடேசனாரும் இணைந்து தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தையே உருவாக்கினார்கள்.

‘விழியுங்கள்! எழுங்கள்! இன்றேல் நீங்கள் வீழ்ந்து பட்டோர் ஆவீர்கள்' என்று டி.எம்.நாயர் தனது உரையை முடிக்கும் போதெல்லாம் சொல்வார். அதுவே கடந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இன எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தது. சுயமரியாதை இயக்க காலத்தில் ‘மேடை சொற் பயிற்சிக் கழகம்' என்பதை தந்தை பெரியார் அவர்கள் நிறுவி பலருக்கும் பயிற்சியை விதைத்தார்கள். ‘இந்த நாட்டில் ஒருவர் பேச்சை மூன்று மணிநேரத்துக்கும் மேல் கேட்க முடியுமானால் அது பெரியாரின் பேச்சைத்தான்' என்று எழுத்தாளர் கல்கி எழுதும் அளவுக்கு உயர்ந்த கருத்துச் சுரங்கமாக மேடைகளை மாற்றினார் பெரியார். அதில் தென்றலையும் புயலையும் உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா.

“மேடைப்பேச்சு என்பது ஒரு சமயம் வாளாக, பிறிதோர் சமயம் கேடயமாக, ஒரு சமயம் விளக்காக, வேறோர் சமயம் தீப்பந்தமாகப் பயன்படுகிறது. மேடைப்பேச்சு பொறுப்புள்ள பணியாகவும் - பயன் தரு கருவியாகவும் இருத்தல் வேண்டும்' என்றார் பேரறிஞர் அண்ணா. அவரது உரைகளே அப்படித்தான் அமைந்து இருந்தன. இந்தப் பாணியின் இன்னொரு பிரமாண்டமான வடிவம் தாம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். மேடையில் வீசும் மெல்லிய பூங்காற்றாகத் தொடங்கும். புயலாக முடியும். அல்லது புயலாகத் தொடங்கி மெல்லிய பூங்காற்றாக முடியும். அலைகளின் தாலாட்டாக சில நேரமும் - ஆழ்கடலின் அமைதியாக சில நேரமும் கலைஞரின் உரைகள் அமையும். வரலாற்றைச் சுட்டி - நிகழ்காலத்தை உணர்த்துவார்.

நிகழ்காலத் தேவைக்காக கடந்த காலத்தையும் கண்முன் கொண்டு வருவார். நவரசம் கலந்ததாக அவரது உரைகள் அமைந்திருக்கும். அந்த வகையில் இன்றைய தலைவர் - தமிழக முதலமைச்சர் அவர்களின் உரை என்பது நேரில் உட்கார்ந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பேசும் உரையாடல் பாங்கைக் கொண்டதாக அமைந்துள்ளது. மொழியானது இலகுதன்மைக் கொண்டதாகப்பயன்படுத்த வேண்டிய இக்காலத்தில், அதே போன்ற இலகுத்தன்மை கொண்ட உரை மொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்து மேடைகளை ஆண்டு வருகிறார்.

பெரியார் - அண்ணா - கலைஞர் - இன்றைய முதல்வர் ஆகிய தலைவர்களின் உரைகளின் பாணியை விட உள்ளுக்குள் இருக்கும் கருத்தே தமிழ் ச்சமுதாயத்துக்கு அன்றும் இன்றும் முக்கியமானதாக விளங்கி வருகிறது. அந்த வகையில் கொள்கையையும் - கோட்பாட்டையும் இன்றைய ஆட்சியின் இலக்கணமாகக் கொண்டு நடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சியியலை வலியுறுத்தவே இத்தகைய பாசறைக் கூட்டங்களை ஒருங்கிணைக்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

“சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி!” என்று முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

‘திராவிட மாடல்' என்று சொல்வது ஒரு நூற்றாண்டின் வரலாற்றைச் சொல்வதாக ஆகும். அந்த அடிப்படையில் இப்பாசறைக் கூட்டங்கள் வெற்றி பெறட்டும்!

கருத்துகள் இல்லை: