சனி, 4 ஜூன், 2022

கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு! தேன்மொழி சௌந்தரராஜன் (அமெரிக்க தலித் செயற்பாட்டாளர்) உரை ரத்து – நடந்தது என்ன?

BBC Tamil  : கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு: அமெரிக்காவில் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து – அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிப் பாகுபாடு குறித்த ஓர் உரையை, சாதி ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் பாடுபடும் சமத்துவத்துக்கான ஆய்வகம் (ஈக்வாலிடி லேப்ஸ்) என்ற குடிமை உரிமை அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் இந்த உரையை நிகழ்த்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கடந்த மாதம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


ஆனால், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவரும், கூகுள் நியூஸ் பிரிவில் திட்ட மேலாளராகப் பணியாற்றியவருமான தனுஜா குப்தா மீது அந்த நிறுவனத்தில் பணி செய்யும் பலரும் அவதூறுகளைப் பரப்பி, இந்த நிகழ்வை ரத்து செய்ய வைத்ததோடு மட்டுமல்லாமல், இறுதியில் தனுஜா நிறுவனத்தில் இருந்து பதவி விலகும் சூழ்நிலையும் ஏற்பட்டதாக ஈக்வாலிடி லேப்ஸ் தாம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தனுஜாவின் விலகலை அடுத்து தனது நிறுவனத்துக்குள் நிலவும் சாதிப்பாகுபாடு குறித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை கூகுள் ஏற்கவேண்டும் என்று ஈக்வாலிடி லேப்ஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

ஈக்வாலிடி லேப்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், நிகழ்வில் பேசவிருந்த சமத்துவ ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநரும் தலித் சமூக ஆர்வலருமான தேன்மொழி செளந்தரராஜன், “அன்பு, இரக்கம் மற்றும் நீதியே சாதி சமத்துவத்திற்கான இயக்கத்தின் அடிப்படை. நானும், கூகுள் ஊழியர்களும் கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மூலம் சந்தித்துள்ள பாகுபாடு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை சொற்களால் விவரிக்க முடியாது. அந்த நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பாக இந்த உரையை ரத்து செய்தது. இத்தகைய சாதி ரீதியான தாக்குதல்கள் தன் பணியிடத்தில் தொடர்ந்து நடப்பதற்கு எதிராக கூகுள் ஒரு தீர்வு காண வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமத்துவ ஆய்வகம் வெளியிட்ட அறிக்கை


சாதி சமத்துவத்தை எதிர்க்கும் கூகுள் ஊழியர்களுக்கு எதிராக, தங்கள் மீது காட்டப்பட்ட சாதிப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராட 400 கூகுள் ஊழியர்களுக்கு தனது ஆதரவை வழங்கிய தனுஜா, கூக்ளர்ஸ் ஃபார் என்டிங் ஃபோர்சுடு ஆர்பிட்ரேஷன் என்ற அமைப்பின் நிறுவனரும், கூகுள் வாக்கவுட் இயக்கத்தின் முதல் ஒருங்கிணைப்பாளரும் ஆவார் என்கிறது ‘ஈக்வாலிடி லேப்ஸ்’ அறிக்கை.

தேன்மொழி சௌந்தரராஜன் உரையை ஏற்பாடு செய்ததற்குப் பதிலடியாக தனுஜாவின் குழுவினருக்கு எதிராக நிறுவனத்துக்குள் வெறுப்புப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. அவர்களது பாதுகாப்பு ஆபத்துக்குள்ளானது. தனுஜா மீது கூகுள் மனிதவளத் துறை விசாரணையைத் தொடக்கி, தண்டனை நடவடிக்கையையும் எடுத்தது. இதையடுத்து அவர் பதவி விலகவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் நிறுவனத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.

“11 ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில், இங்கிருந்து வெளியேற பல காரணங்கள் இருந்தன. ஆனால், இந்த காரணம்தான் எனக்கு தேவையாக இருந்தது. என் பணியை செய்துக்கொண்டிருக்கும்போதும், நிறுவனத்தில் சாதி சமத்துவத்தை நிலைநாட்டுவதில் நான் ஈடுபட்டிருந்தபோதும், நான்கு பெண்கள் துன்புறுத்தப்பட்டு, அவர்கள் மெளனமாக்கப்பட்டதை நான் பார்த்தேன். இத்தகைய சம்பவங்கள் ஒன்று இரண்டல்ல என்பதே உண்மை. இது தொடர்ச்சியாக நடக்கும் ஒன்று,” என்று ஜூன் 1ஆம் தேதியன்று அவர் அனுப்பிய விலகல் கடிதத்தில் தெரிவித்திருந்தார் என்றும் அந்த அறிக்கை கூறியது. இந்தக் கடிதம் கிட்டத்தட்ட 15,000 கூகுள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது.

இவர்களுக்கு ஆதரவாக, #metoo இயக்கத்திற்கான சர்வதேச அமைப்பு, “தேன்மொழி செளந்தரராஜன், தனுஜா குப்தா ஆகிய இருவரையும் மதிப்புடன் நடத்துமாறு கூகுள் நிறுவனத்துக்கு வலியுறுத்துகிறோம்,” என்று தெரிவித்துள்ளது.
என்ன சொல்கிறது கூகுள்?

இது தொடர்பான செய்தி, ‘வாஷிங்கடன் போஸ்ட்’ செய்தித் தாளின் வலைதளப் பக்கத்தில் முதலில் வெளியானது.

வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசிய கூகுள் செய்தி தொடர்பாளர் ஷான்னான் நியூபெர்ரி, “எங்கள் பணியிடத்தில் சாதிப் பாகுபாட்டுக்கு இடமில்லை. எங்கள் பணியிடத்தில் பழிவாங்கும் நடவடிக்கைகள், பாகுபாடு பற்றிய கொள்கைகள் குறித்து பொதுவெளியில் தெளிவாகப் பகிர்ந்திருக்கிறோம்,” என்றார்.

கருத்துகள் இல்லை: