கலைஞர் செய்திகள் - விக்னேஷ் செல்வராஜ் : தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு பேசிய அனல்பறக்கும் பேச்சு, இந்தி - ஆங்கில சப்-டைட்டில்களோடு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழ் மொழி அறியாத வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பலரும் இந்த காணொளியை பார்த்தும், பகிர்ந்தும் வருகின்றனர். நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீப்பறக்கப் பேசிய இந்தக் காணொளி வட மாநிலங்களில் பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.
அந்தக் காணொளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:
“என்னை அரசியல் வாரிசு என அமித்ஷா சொல்வாரெனில் ஆம், நான் அரசியல் வாரிசு தான். நான் கலைஞரின் மகன். நான் கலைஞரின் ரத்த வாரிசு மட்டுமல்ல, கொள்கை வாரிசு. முத்தமிழறிஞர் கலைஞரின், கொள்கைக்கு, கோட்பாட்டுக்கு, லட்சியத்திற்கு வாரிசு.
ஆம், தி.மு.கவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு வாரிசு நாங்கள். திராவிட இயக்கத்தின் வாரிசு நாங்கள். நூறாண்டுகளுக்கு முன்னால் தமிழ்ச் சமூகத்தின் விடியலுக்காக சமூக நீதியை உருவாக்கிய நீதிக்கட்சியின் வாரிசு நாங்கள்.
நாவலருக்கு, பேராசிரியருக்கு, சொல்லின் செல்வருக்கு, புரட்சிக் கவிஞருக்கு, கலைவாணருக்கு, சிந்தனைச் சிற்பிக்கு வாரிசு நாங்கள். ஸ்டாலின் என்பது எனது தனிப்பட்ட பெயர் அல்ல; ஒரு இயக்கத்தினுடைய பெயர்.
நான் தனிமனிதனல்ல; நான் மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாரும் தனிமனிதர்களல்ல; நாங்கள் அனைவரும் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித்ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது.
இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல.பலநூறு ஆண்டுகளாக நடக்கிற யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுக்க முடியாது.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக