செவ்வாய், 22 மார்ச், 2022

60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி: நிதின் கட்கரி

60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி: நிதின் கட்கரி

மின்னம்பலம் : தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் அடுத்த மூன்று மாதங்களில் மூடப்படும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று(மார்ச் 22) மக்களவையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகள் விதிகளை மீறி செயல்படுவதாகவும், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008-ன்படி 60 கிலோமீட்டர் குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் மக்களவையில் எம்பி திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.


இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “60 கிலோ மீட்டர் தொலைவுக்குக் குறைவாக உள்ள சுங்கச்சாவடிகள் மூன்று மாதத்திற்குள் அகற்றப்படும்” என்று தெரிவித்தார். அதோடு, “சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து சுங்கச்சாவடியைக் கடக்கும் வகையிலான நடைமுறையைச் செயல்படுத்த ஆலோசனை நடந்து வருகிறது” என்றும் தெரிவித்தார்.

சாலைப் பயணத்தின்போது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எட்டு பேர் வரை பயணிக்கக் கூடிய வாகனங்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், “2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் அமெரிக்காவில் இருப்பதைப் போல் இருக்கும்” என்றார்.

“ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவு உயிரிழக்க நேரிடுகிறது. எனவே, அரசாங்கம் உலக வங்கியுடன் இணைந்து மாற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. சாலை விபத்து தொடர்பாக உலக வங்கி தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றியது. இதில் விபத்துகளைக் குறைப்பதில் ஓரளவு அவர்கள் வெற்றியும் பெற்றனர். எனவே தமிழ்நாடு மாடல் போன்று இந்தியா முழுவதும் அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றும் கூறினார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: