தினத்தந்தி : கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற அனைத்து பயனாளிகளுக்கும் வருகிற 31-ந் தேதிக்குள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான 165 பயனாளிகளின் 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு உரிய பயனாளிகளிடம் வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நகைகளை உரிய பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கு உட்பட்ட நகை கடன் பெற்ற பயனாளிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் அதாவது இன்னும் 11 நாட்களுக்கு உள்ளாக கடன் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து பயனாளிகளுக்கும், அதாவது 14 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கும் திட்டவட்டமாக தள்ளுபடி வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுபோக தகுதியுள்ள நபர்களுக்கு நகை கடன் விடுபட்டிருந்தால் அதுவும் வழங்கப்படும். ஒருவருக்கு அரசு ஊழியர் என்று வந்து இருப்பதாகவும், ஆனால் தான் ஆட்டோ ஓட்டி வருவதாகவும் தெரிவித்தார். உடனே நான் அறிவுறுத்தி, அவரிடம் இருக்கும் ரசீதை பெற்றுக்கொண்டு, அவருக்கு நகை கடன் தள்ளுபடி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலி நகைக்கு...
தமிழகத்தில் எந்த மூலை, முடுக்குகளில் இருந்தும் தகுதியான நபர்கள் எங்கள் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக எவ்வளவு பேர் வந்தாலும் வழங்குவதற்கு, அரசும் தயாராக இருக்கிறது. இதில் எந்த முரண்பாடும் கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
ஆனால் முறைகேடாக ஒரே நபர், ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 10 கடன்கள், 20 கடன்கள் என நூற்றுக்கணக்கான கடன்கள் என வாங்கியிருக்கிறார்கள். திருவண்ணாமலையில் ரூ.2 கோடி அளவுக்கு ரத்தன்லால் என்ற சேட்டு 600 கடன்கள் வாங்கி இருக்கிறார். அதற்கெல்லாம் தள்ளுபடி கொடுக்கமுடியாது. போலி நகைக்கு தள்ளுபடி கொடுக்கமுடியாது.
கிரிமினல் நடவடிக்கை
நகையே இல்லாமல் வெறும் பையை வங்கியில் வைத்து மோசடி செய்தவர்களுக்கு தள்ளுபடி கொடுக்கமுடியாது. அதனால்தான் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி முதலில் ஆய்வு செய்தோம். அதன் பிறகு ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு அதிகாரிகளை அனுப்பி மீண்டும் ஆய்வு செய்தோம். தற்போது தணிக்கை செய்துவிட்டோம். தமிழகம் முழுவதும் தற்போது தணிக்கை செய்யப்பட்டு, சிறப்பு ஆய்வுகள் முடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் தற்போது நகை கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. நகை கடன் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக