புதன், 23 மார்ச், 2022

மலேசியாவில் அதிகரித்து வரும் ஜாதி மனோநிலை

 Subashini Thf :  மலேசியாவில் சாதி !  மலேசியா ரொம்பவே மாறிவிட்டது.
நான் பிறந்து வளர்ந்த காலத்தில் மலேசிய இந்தியர்களிடையே இன்றைக்கு இருப்பதுபோல சாதிப் பற்று இருந்ததை நான் சிறிதும் உணர்ந்ததில்லை. ஆனால் இன்றைக்குச் சாதி தொடர்பான ஆர்வம் என்பது மலேசிய தமிழ் மக்களிடையே மிக வேகமாக, அதேசமயம் ஆழமாக வேரூன்றி வருகிறது.
மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் மட்டுமே என்று எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களுடன் கணிசமான தெலுங்கர்கள் மலையாளிகள் மற்றும் குஜராத்தியர் சீக்கியர் ஆகியோரைக் கூறலாம். ஆனால் பெரும்பான்மை தமிழர்கள்தான். ஆனால் இந்தத் தமிழ் மக்கள் சாதியால் இன்றைக்குத் தங்களைத் தாங்களே பிரித்து வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்று அறிகிறேன்.


மலேசிய தமிழர்களில் மிகப் பெரும்பான்மை என்றால் மூன்று சமூகத்தாரைக் குறிப்பிடலாம்.  பறையர்கள், வன்னியர்கள்,  முக்குலத்தோர். இதனை அடுத்து கவுண்டர்கள் செட்டியார்கள் நாடார்கள் வேளாளர்கள் போன்ற சாதி சமூக அமைப்பைச் சார்ந்தோரைக் குறிப்பிடலாம். பிராமணர்கள், இலங்கைத் தமிழர்கள் (வேளாளர்கள்) ஏனைய பிற தமிழ் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றார்கள்.
மலேசியத் தமிழர்களிடையே உயர்ந்த சாதி என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் இலங்கைத் தமிழ் மக்களும் (வேளாளர்கள்) செட்டியார் சமூகத்தவரும் என்று கூறலாம். இவர்கள் நான் வளர்ந்த காலத்திலேயே தங்களைத் தனித்து அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.
இன்றைக்கு இந்த நிலைமை பல்வேறு வகையில் மாறி ஏனைய பல சாதி சமூகத்தவரும் தங்களைப் பிரித்துக் கொண்டு தனித்தனியாக குழுக்களாக வாழ விரும்புவதை பற்றி இங்கு உள்ளூரில் பேசும்போது அறிந்து கொண்டேன்.
முக்குலதோர் சங்கம், பறையர் சங்கம் நாடார் சங்கம், வன்னியர் சங்கம், கவுண்டர் சங்கம் எனச் சாதி சங்கங்கள் இன்று வளர்ந்து விட்டன என்று கேள்விப்படுகிறேன்.  திருமணம் மட்டுமல்ல தொழில் துறையில் கூட இந்தப் பாகுபாடு.. அரசியலிலும் இந்தப் பாகுபாடு என்று தெளிவாகத் தெரிவதாக அறிகிறேன்.
மலேசியத் தமிழர்களிடையே சாதிப் பாகுபாட்டை வளர்ப்பதில் தமிழக சாதி சங்கங்களும் தமிழ் சினிமா திரைப்படங்களும் அளப்பரிய பங்காற்றுகின்றன. சாதி என்ற கொடிய விஷத்தைப் படிப்படியாக மலேசியத் தமிழர் சிந்தனையில் தமிழ்நாட்டு சாதி அமைப்புகளும் சினிமா திரைப்படங்களும் வேறூன்றச் செய்து விட்டன.
இன்றைய காலச் சூழலில் மலேசியத் தமிழர்கள் பொருளாதாரரீதியாக சாதி பாகுபாடின்றி மிகச் சிறப்பாகவே வாழ்கின்றார்கள். இங்கு பொருளாதாரம் மனிதர்களின் உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஆனால் ஒன்றுக்கும் உதவாத தமிழ்நாட்டு சாதிப் பற்று இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு வந்து மலேசிய மக்களின் சிந்தனையைக் கெடுத்து வருங்கால தலைமுறையினர் சிந்தனையும் பாழாக்கி வைத்திருக்கின்றது.
புரையோடிப் போன புண் போல இந்த நோய்க்கு மருந்து போட்டு தெளிவாக்குவது என்பது மிகச் சிரமம் என்றே உணர்கிறேன்!
-சுபா

கருத்துகள் இல்லை: