வியாழன், 24 மார்ச், 2022

துபாயில் முதல்வர் ஸ்டாலின்.. நிகழ்ச்சி நிரல்

துபாயில் முதல்வர் ஸ்டாலின்

மின்னம்பலம் :   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மார்ச் 24ஆம் தேதி பிற்பகல் நான்கு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றார்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் உலகளாவிய தொழில் கண்காட்சி துபாய் எக்ஸ்போ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உள் அரங்கை முதல்வர் ஸ்டாலின் நாளை மார்ச் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
இன்று பிற்பகல் 2.50 மணிக்கு தன் இல்லத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சரை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ,திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின்படி இன்று முதலமைச்சர் தனி விமானத்தில் புறப்பட்டார்.

இந்திய நேரப்படி இன்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றடைந்திருக்கிறார்.

நாளை துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு கண்காட்சியை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான தகவமைப்புகள், உள் கட்டமைப்புகள் பற்றி சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்து விவாதிக்க இருக்கிறார். இதன் பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஸ்டாலினோடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், உதயச்சந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலாளர்கள் துபாய் சென்றிருக்கிறார்கள்.

திமுக அயலக பிரிவு செயலாளரான எம்.எம். அப்துல்லா எம்.பி. எக்ஸ்போ நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்காக ஏற்கனவே துபாய் சென்றுள்ளார். முதல்வரின் மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் முதல்வருக்கு முன் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

.வேந்தன்

கருத்துகள் இல்லை: