நக்கீரன் செய்திப்பிரிவு : டெல்லியில் மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள, தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார். இதற்கான, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
வரும் 2ம் தேதி இந்த விழா நடைபெற உள்ள நிலையில், இதற்கான அழைப்பிதழை நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களுக்கு திமுக தலைமை தங்கள் கட்சியின் எம்பிக்கள் வாயிலாக வழங்கி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பீகார் மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இதற்கிடையே இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா-வை சந்தித்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேரில் அழைப்பு விடுத்தனர். பாஜக சார்பில் யாரும் அழைப்பு விடுக்கப்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகாத நிலையில், தற்போது சபாநாயகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக