மின்னம்பலம் : நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களில் ஒன்று, "இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்" என்பது.
திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை வாக்குறுதி தமிழ்நாட்டு பெண்களிடம் வெகுவாக எடுபட்டது. குறிப்பாக அதிமுகவை காட்டிலும் திமுகவுக்கு பெண்கள் ஓட்டு குறைவு என்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப் பட்டிருந்த நிலையில் பெண்களின் கவனத்தை திமுக மீது திருப்பியதில் இந்த வாக்குறுதிக்கும் ஒரு பங்கு இருக்கிறது.
ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டாவது பட்ஜெட்டை சமர்ப்பித்து விட்டபோதிலும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்ற வாக்குறுதியை திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
"நிதி நிலைமை மேம்படும் போது இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்"என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி .ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். இதை அடிப்படையாக வைத்து எதிர்க்கட்சிகளும், "பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல்
திமுக ஏமாற்றிவிட்டது"என்று தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அரசியல் வட்டாரங்களை தவிர்த்து முதல்முறையாக இலக்கியம் மற்றும் சினிமா தளத்தில் பெண் ஆளுமையாக விளங்கி வரும் கவிஞர் தாமரை இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து இன்று மார்ச் 20 தனது சமூக தள பக்கத்தில்
தாமரை வெளியிட்டுள்ள செய்தியில்,
"வெளிவேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து தன் வீட்டு வேலைகளை, தன் குழந்தைகளை மட்டுமே பார்த்துக் கொள்ளும், கணவனின் ஊதியத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'இல்லத்தரசி'களுக்கு 1000/- மாத உதவி தருவதாக சிலகாலமாக அரசியல் கட்சிகள் பேசி வருகின்றன.
மக்கள் நீதி மையம்தான் முதன்முதலாக தேர்தல் வாக்குறுதியாக/ அறிக்கையாகக் கொடுத்தது என்று நினைக்கிறேன். அப்போதே நினைத்தேன், இதென்ன மடத்தனம், தத்தம் குடும்பங்களைக் கவனித்துக் கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களுக்கு எதற்காக அரசாங்கம் உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்று.
வீட்டுத் தலைவிகள் வீட்டுக்காக 'மாடு மாதிரி' உழைக்கிறார்கள், குழந்தைகளைப் பேணி வளர்க்கிறார்கள், ஆனால் எந்த ஊதியமும் அற்று - ஒருவேளை கணவனால் கைவிடப்பட்டால் நிர்க்கதியாக நின்று - உழைப்புச் சுரண்டல் செய்யப் படுகிறார்கள் என்பது உண்மைதான் !.
இத்தகைய பெண்களின் நிலை அவலமானதுதான் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில், எப்போதும் ஆணின் இரக்கத்தை எதிர்பார்த்து, அவன் என்ன கொடுமை செய்தாலும் அடங்கிப் போயேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒருவேளை அவன் விட்டுவிட்டுப் போனாலோ, திருமணம் தாண்டிய வேறு உறவு ஏற்படுத்திக் கொண்டாலோ இவர்கள் செய்யக் கூடியது ஒன்றுமில்லை - கண்ணைக் கசக்குவதைத் தவிர.
ஆனால் குடும்பத்தில் இருக்கும்போதே இவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்குவது எப்படி அரசாங்கத்தின் பொறுப்பாகும் ? கைவிடப்பட்டோருக்கு, அபலைகளுக்கு, கைம்பெண்களுக்கு வேறுவகைத் திட்டங்கள் அரசாங்கத்தில் உள்ளன. அவை சரியான நோக்கத்தில் செயல்படுகின்றன.
தன் வீட்டில் தனக்காக, தன் குழந்தைகளுக்காக, தன் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிக்கு ஊதியம் தர வேண்டியது அந்த உழைப்பின் பலனை அனுபவிக்கும் கணவனது பொறுப்பு ! அரசாங்கம் எதற்காகக் கொடுக்க வேண்டும்?
ஏற்கனவே, இத்தகைய பெண்களுக்காகத் தன் மாதவூதியத்தில் சிறு பகுதியைக் கணவன் ஒதுக்க வேண்டும் என்கிற திட்டம் பெண்கள் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டார்கள் - குடும்பத்தைப் பிரிக்கிறார்கள், பிளக்கிறார்கள், தன் குடும்பத்திற்கு உழைப்பதற்குப் பெண்களுக்கு எதற்கு ஊதியம்? என்றெல்லாம் எதிர்ப்பு வலுவாக எழுந்தது.
ஆனால் அதையே அரசாங்கம் கொடுக்கிறேன் என்று சொன்னால், 'நீ எதற்காக என் மனைவிக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் ?' என்று ஓர் எதிர்ப்புக் குரல்கூட வரவில்லையே, எப்படி?" என்று கேள்விகளை தொடுத்திருக்கிறார் தாமரை.
மேலும் அவர், "இந்த வேலைகளுக்காக ஒரு பணிப்பெண்ணை அமர்த்தினால் பலமடங்கு ஊதியம் கொடுக்க வேண்டி வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று !. ஊதியமில்லா உழைப்பாளியாக இல்லத்தரசி சுரண்டப்படுகிறார் என்பது நடப்பு நிலை !.
இந்த சிக்கலை வேறுவகையில்தான் எதிர்கொண்டாக வேண்டுமே யொழிய அரசாங்கம் உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்பது தவறான கருத்து !.
வீட்டுவேலையும் செய்து கொண்டு வெளி வேலைக்கும் போய்வரும் பெண்களின் நிலையை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமில்லையா ?
அவர்களெல்லாம் முட்டாள்களா ?அவர்களுக்கும் அரசாங்கம் பரிவுத் தொகை ஏதேனும் கொடுக்குமா ?
சரியாகச் சொன்னால், இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுவேலை போக, மற்றுமொரு பணியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லையே.
தங்கள் தனித் திறனுக்கேற்ப - தையல், பிறர் குழந்தை பார்த்தல், தின்பண்டங்கள் செய்து தருதல், பாடம் சொல்லித்தருதல் - நூற்றுக்கணக்கான தெரிவுகள் உள்ளனவே! ஏதேனுமொன்றைச் செய்து கௌரவமாகப் பொருளீட்ட இயலுமே !
அதென்னது, அரசாங்கத்திடம் இருந்து 'இலவசமாக' உதவி எதிர்பார்ப்பது? வெளி வேலைக்குச் செல்லும் இலட்சக்கணக்கான பெண்களின் வரிப் பணத்திலிருந்துதான் இதைச் சுரண்ட வேண்டும் !
நான் இதைச் சற்றும் ஆதரிக்கவில்லை. தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இதைச் சொல்வதால் எனக்கு எதிர்ப்பு எழும் என்று தெரிந்தேதான் சொல்கிறேன்.
தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் : இந்த-இல்லத்தரசி- இலவச-மாதாந்திர-1000/- திட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஒருவேளை இதைச் செயல்படுத்தித்தான் தீர வேண்டுமெனில், அந்த 1000/- க்கு ஈடான உழைப்பை அவர்களிடமிருந்து பெற்று விட்டு வழங்க வேண்டும். அரசாங்கத்தின் உபரி வேலைகளுக்கா பஞ்சம்? தங்கள் பகுதியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, அம்மா உணவக வேலைகள், சிறார் பள்ளி வேலைகள்...இப்படி இன்னும் பல வேலைகள் உள்ளனவே?
பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், கல்லூரி படிக்கும்வரை குழந்தைகளுக்கு மாதம் 1000/- உள்ளிட்ட திட்டங்களைக் கைதட்டி வரவேற்கிறேன். அதற்காக அரசாங்கத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். ஆனால் இல்லத்தரசிகளுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் மாதம் 1,000 ரூபாய் என்ற திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்" என்று அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் தாமரை.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக