புதன், 23 மார்ச், 2022

ஹிஜாப் - கர்நாடக திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை!

 மின்னம்பலம் : கர்நாடக கடலோர மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடை அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்கள் கடலோர கர்நாடக மாவட்டங்களாக அழைக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில்கள் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக களையிழந்து இருந்த திருவிழாவை இந்தாண்டு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் உள்ள மகாலிங்கேஸ்வரா கோயிலில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கடை அமைப்பதற்கான ஏலம் மார்ச் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் முஸ்லிம் வியாபாரிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழில், இந்துக்கள் மட்டுமே மார்ச் 31 ஆம் தேதி ஏலத்தில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், உடுப்பி மாவட்டத்தில் உள்ள காபுவில் உள்ள ஒசமாரிகுடி கோயிலில் இந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்திர கண்காட்சிக்காக மார்ச் 18 அன்று நடைபெற்ற ஏலத்தில் முஸ்லிம்களுக்கு கடைகளை ஒதுக்க மறுத்துவிட்டது.

ஹிஜாப் மீதான தடை செல்லும் என்ற கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதால், காய்கறிகள், இறைச்சி, பழங்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தட்சிண கன்னடா மாவட்டத்தில், ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோவிலில் வைக்கப்பட்ட பேனரில், “சட்டத்தையோ, நிலத்தையோ மதிக்காதவர்கள், நாங்கள் பிரார்த்தனை செய்யும் பசுக்களை கொல்பவர்கள், ஒற்றுமைக்கு எதிரானவர்களை வியாபாரம் செய்ய அனுமதிக்கமாட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் என்.சஷி குமார் கூறுகையில், “இந்த ஃப்ளெக்ஸ்களை வைத்தது யார் என்பதை விசாரித்து வருகிறோம். சிவில் ஏஜென்சி புகார் அளிக்கத் தயாராக இருந்தால், நாங்கள் எங்கள் சட்டக் குழுவைக் கலந்தாலோசித்து அதன்படி நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

உடுப்பி மாவட்ட தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் முகமது ஆரிப் கூறுகையில், ”இதுபோன்ற நிலை இதற்கு முன்பு இருந்ததில்லை. இந்த சங்கத்தில் மொத்தம் 700 பேர் பதிவு செய்த வியாபாரிகளாக உள்ளனர். இதில் 450 பேர் முஸ்லிம்கள். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு எந்த வியாபாரமும் இல்லை. இப்போது மீண்டும் வியாபாரம் செய்ய வாய்ப்பு வந்துள்ள நிலையில், கோயில் கமிட்டியினரால் ஒதுக்கப்பட்டுள்ளோம்” என்று கூறினார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: