Shyamsundar - Oneindia Tamil : சென்னை: சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் போதை பொருள் பார்ட்டி நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அங்கு போலீசார் ரெய்டு நடத்தினர். வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானாவிற்கு சொந்தமான ரிசார்ட் இது என்று கூறப்படுகிறது.
சென்னை ஈசிஆர் பகுதியில் பல்வேறு ரிஸார்ட்டுகள் உள்ளன. இங்கு அவ்வப்போது போதை பொருள் பயன்படுத்தி பார்ட்டிகள் நடப்பதாக கொடுக்கப்படும் புகார்களை வைத்து போலீஸ் ரெய்டு நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ரெய்டு நடத்தப்பட்டது. தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஆணையின்படி இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
ஹோலியை முன்னிட்டு இந்த ரிசார்டில் பெரிய பார்ட்டி நடத்தப்பட்டு இருக்கிறது. இதை பற்றி தகவல் கிடைத்து உடனடியாக மது மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் இங்கே விரைந்து சென்று சோதனை செய்தனர். நேற்று இரவு 1 மணிக்கு இந்த ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அங்கே முழு போதையில் சிலர் பார்ட்டி நடத்தி வந்துள்ளனர்.
வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானாவிற்கு சொந்தமான ரிசார்ட் இது என்று கூறப்படுகிறது. தகவல் கேட்டறிந்த வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானா உடனே சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேரில் வந்தார். அங்கு ரிசார்ட் நிர்வாகிகளிடம் இவர் விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி, இங்கே நடனம் ஆடியவர்கள் , பார்டியில் கலந்து கொண்டவர்களை கைது செய்து இருக்கிறோம். ஆனால் இவர்களிடம் இருந்து போதை பொருட்களை நாங்கள் பறிமுதல் செய்யவில்லை. இது என்ன மாதிரியான பார்ட்டி என்று விசாரித்து வருகிறோம். இவர்கள் சட்ட ஒழுங்கை மீறி செயல்பட்டு உள்ளனரா என்று விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக