புதன், 23 மார்ச், 2022

மதிமுகவின் எதிர்காலம் - துரை வைகோ அரசியலில் பிரகாசிப்பார் என்று வைகோ நிச்சயம் ... ?

May be an image of 5 people, people sitting, people standing and wrist watch

Raj Dev :  மதிமுக....?   வைகோவுக்கு எதிராக மதிமுகவில் எழுந்துள்ள குரலை கவனியுங்கள். அது சற்று விநோதமாக உள்ளது. வழக்கமான அதிருப்தி குரல்கள் ‘கூட்டணி பிடிக்கவில்லை;
வெளியேறு’ என்பதாக இருக்கும்.
ஆனால் ஒரு  கூட்டணியில் இருக்கும் போதே கூட்டணி வேண்டாம்;
அதற்கு பதிலாக கட்சியையே இணைத்து விடலாம் என்று பேசுவதை எப்படிப் புரிந்து கொள்வது?
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறும் சூழ்நிலை எளிதில் நிகழப் போவதில்லை.
திமுக கூட்டணியில் இருக்கும் வரை அந்த சிறு சதவீத தொகுதி ஒதுக்கீட்டில் தான் ஒட்டுமொத்த மதிமுகவினரின் அரசியல் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.
கட்சியை திமுகவுடன் இணைத்து விட்டால் அப்போது மதிமுகவினர் முன்புள்ள வாய்ப்புகளும், தொடர்புகளும் அகலமாகின்றன என்பது ஒரு கணக்கு.


வைகோவின் துயரம் யாருக்கும் வரக்கூடாது. அவருக்கு முன்பாக உள்ள அரசியல் தெரிவுகள் மிகக் குறைவானவை.
ஈழப்பிரச்சினை, வாரிசு அரசியல் ஆகியவற்றை முதன்மையாக வைத்து தொடங்கப்பட்ட மதிமுக இன்று அதன் அரசியல் பாத்திரத்தை இழந்து விட்டது.
ஈழப்பிரச்சினை முடிந்து விட்டது என்பதல்ல பொருள்.
அதை பகுதிநேரப் பிரச்சினையாக கொள்ளலாம்; முதன்மைப் பிரச்சினையாக தமிழக மக்கள் எண்ணங்களில் மாறும் நிலை இல்லை. ‘வாரிசு அரசியல்’ என்பதில் மக்களின் ஏற்பு தான் முக்கியம் என்ற கருத்து வலுவாகி விட்டது. வாரிசுகள் இல்லாத கட்சியே இன்றில்லை என்றாகி விட்டது. மேலும் அதை விடவும் பாரதூரமான வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. வைகோ தனது கட்சியை புதிய நிலைமைகளுக்கு தகவமைக்க தவறினார். பல அரசியல் தொப்பிகளை நேரத்துக்கு தகுந்தாற் போல அணிந்து அவற்றை அவசரமாக மாற்றிக் கொண்டார். ஸ்டெர்லைட் எதிர்ப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதை கார்ப்பரேட் எதிர்ப்பாகவோ அல்லது சமூகநீதி அரசியலுடனோ இணைக்கத் தவறினார். எனவே அது தொடர்பான அவருடைய முயற்சிகள் ஒரு பகுதிப் பிரச்சினையாக சுருங்கியது.

இன்னொன்று ஈழப்பிரச்சினையை அடிப்படையாக வைத்து தன்னை போன்று எழுபவர்களை வைகோ மதிக்கவில்லை. மதிமுக தேர்தலை புறக்கணித்த 2011—ஆம் வருடம் வைகோவை தேடி சீமான் தாயகம் சென்றார். அப்போது சீமானை மதிமுகவில் இணைத்துக் கொண்டிருந்தால் சீமான் இப்படி கோடரிக்காம்பாக மாறுவதை தவிர்த்து இருக்கலாம். வைகோ தனக்கு மக்களிடம் புதியதொரு அனுதாபம் ஏற்பட்டு வருவதாக நம்பினார். பிற்பாடு வைகோவை அரசியலில் அப்புறப்படுத்தவே தெலுங்கர் எதிர்ப்பு கொள்கை சீமானிடம் முன்னுரிமை பெற்றது. வாரிசு அரசியலை வெறுத்த அன்றைய காலகட்டத்தில், கட்சியின் இரண்டாம் மட்டத்தில் தலைமைப் பண்புடன் வேறு யாரும் இல்லாத நிலையில் வைகோ கட்சியின் நீடித்த இருப்புக்கு வழிவகை கண்டிருக்க வேண்டும். வைகோ அதில் அசிரத்தையாக இருந்தார்.

துரை வைகோ அரசியலில் பிரகாசிப்பார் என்று வைகோ நிச்சயம் நம்ப மாட்டார். எதிர்காலத்தில் ஒட்டு மொத்தமாக மதிமுகவுக்கு ஒரே ஒரு எம்.பி தொகுதி — வைகோ மகன் என்ற பாசத்துக்காக — துரை வைகோவுக்கு வழங்கப்படலாம் என்ற நிலைமையே இப்போதுள்ளது. அதற்கு தனியாக ஒரு கட்சி தேவைப்படாது. இப்போது மதிமுகவை  திமுகவில் இணைக்க வலியுறுத்துபவர்கள் கட்சி கரைந்த நிலையில் சேருவதில் பலனில்லை; இப்போதே சேர்ந்து விட்டால் இப்போதிருக்கும் பேர வலிமையை பொறுத்து வைகோவின் மகனுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் சிலவற்றை பெற முடியுமே என்று எண்ணுகிறார்கள். வைகோ அப்படியொரு பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. முதலில் திமுக அதற்கு தயாராக இருக்க வேண்டும். கரைவதை காட்டிலும் இணைவது நல்லது.

கருத்துகள் இல்லை: