Abdul Nasar : சவுகார்பேட்டைகள் - சென்னை சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன. அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்குமானது.
ஆனால் நடைமுறையில் அப்பள்ளிகள் முழுக்க முழுக்க வடநாட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயங்கும் தனியார்ப் பள்ளிகள் போல் இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.
1. AG JAIN Higher secondary school
2. Gujarathi Kendal Higher secondary school
3. SKPD TELUGU Higher secondary school
4. Ramdev Higher secondary school
5. MFSB Higher secondary school
6. Ganesh Bhai Kannada Higher secondary school
7. Sugni Bhai girls Higher secondary school
8. Moonbei Bhai girls Higher secondary school
9. Manilal Mehta higher secondary school
உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் சென்னை சவுகார்பேட்டையில் மட்டுமே உள்ளன. இப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வடநாட்டினர். 20 ஆண்டுகளுக்கும் முன் பணியமர்த்தப்பட்ட ஓரிரு தமிழக ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். அவர்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அங்கே எந்தப் பள்ளியிலும் தமிழ் பயிற்றுவிப்பது இல்லை. தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதில்லை.
தமிழ் மாணவர்களைச் சேர்க்கச் சென்றால் அவர்கள் சொல்வது, 'அவர்களைச் சேர்த்தால் எங்கள் பள்ளியில் வீண் பிரச்சினை ஏற்படும்' என்பதாகும். மேலும் ஓரிரு ஆசிரியர்களைத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் பார்ப்பனராகவே இருக்கவேண்டும். பார்ப்பனராக இருந்தாலும் இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டும். இங்கு மட்டும் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தி லிருந்து இப்பள்ளிக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. சென்னையின் நடுப்பகுதியான சவுகார்பேட் டையில் தமிழ் மொழிக்கும், தமிழ் மாணவர்களுக்கும் வஞ்சகம் செய்து கொண்டிருக்கும் இவ்வகையான பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இப்பொழுது குஜராத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகக் கூறி தமிழ்வழிப் பள்ளியை மூட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது குஜராத் அரசு.
அந்தத் தமிழ்ப்பள்ளி, தங்கள் பள்ளியில் ஆங்கில வழியில் பயிற்றுவிக்க அனுமதி கேட்கிறது. ஆனால் அனுமதி மறுக்கிறது குஜராத் அரசாங்கம். ஆனால் இங்கே சவுகார்பேட்டையில் உள்ள 28க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழியில் வகுப்பு நடத்துவதற்கும் தமிழக அரசு கோடிக்கணக்கில் நிதி வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழிலேயே சொல்லித்தராத இந்தப் பள்ளிகளுக்குக் கோடிக்கணக்கில் நிதி உதவி அளிப்பது சரியா? இங்கு நிரப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்கு வட இந்தியாவிலிருந்து வெறும் இளங்கலை பட்டம் பெற்றவர்களை அழைத்து வந்து பணி அமர்த்துகிறார்கள்.
அவர்கள் எந்த ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெறவில்லை.. அவர்களுக்கென இருக்கும் சிறப்பு அனுமதியின் பேரில் ஆசிரியப் பயிற்சியைப் பெற அவர்களை இங்கே பணியமர்த்தி ஊதியம் வாங்கிக் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில், அதுவும் தலைநகரமான சென்னையில் தமிழ்நாட்டவருக்கோ, அவர்களின் தாய் மொழியான தமிழுக்கோ சம்பந்தம் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாகப் இந்தப் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு எப்படி நடக்க முடிகிறது என்பது ஆச்சரியப்பட வேண்டியதுதான்.
கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த விவரங்கள் எல்லாம் தெரியவே தெரியாதா?
சவுகார்பேட்டையில் வடநாட்டுக்காரர்கள் குடியிருப்பு அதிகம் இருக்கலாம்; அதே அடிப்படையில் வடநாட்டு மாணவர்கள் அதிகம் சேர்க்கப்படுவதைப் புரிந்து கொள்ள முடியும். அதற்காக தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதில்லை என்பது எப்படி சரியாகும்? ஆசிரியர்களும் பெரும்பாலும் வடநாட்டுக்காரர்களாகவும், பார்ப்பனர்களாகவும் ஆதிக்கம் செலுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
பொதுவாக சென்னையில் மட்டும் வணிகத்தில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த வட மாநிலத்தவர்கள் இப்பொழுது தமிழ்நாட்டின் நகர கிராமப்புரங்கள் வரை தங்களின் வணிக சாம்ராஜ்ஜியத்தை நிறுவிவிட்டார்கள்.
ஒரு கால கட்டத்தில் வடநாட்டவர்கள் வசிக்கும் பகுதி என்று சவுகார்பேட்டையை சொல்லுவதுண்டு. இப்பொழுது அப்படி இல்லை; சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களின் குடியிருப்புகள் அடுக்கு மாடிக் கட்டடங்களாக உச்சியைத் தொடுகின்றன.
அத்தகைய குடியிருப்புகளில் வடநாட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர தமிழ்நாட்டுக்காரர்களுக்கு இடம் அளிப்பதில்லை. வெளிப்படையாகவே மறுக்கவும் செய்கிறார்கள். இந்தப் போக்கு நீடிக்குமானால் இது தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.
வடநாட்டிலிருந்து தொழிலாளர் வந்து குவிவது ஒரு பக்கம்; மொத்த வியாபாரங்கள் (Whole Sale) அனைத்தும் அவர்களின் கையிருப்பு! அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது - தேர்தலில்கூட அவர்களின் கணிசமான வாக்குகள் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் ஆபத்து இருப்பதை அலட்சியப்படுத்த முடியாது - அரசியல்வாதிகள் கவனம் இந்தப் பக்கமும் திரும்ப வேண்டியது அவசியமே!
முத்து செல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக