BBC : பிரமிளா கிருஷ்ணன்/ நடராஜன் சுந்தர் - பிபிசி தமிழ் : வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்
நதி ஓடும் பாதையில் புனரமைப்புப் பணியில் ஈடுபட்ட பெண்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமது சமீபத்திய மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் ஆறுகளின் முக்கியத்துவம் குறித்து பேசும்போது, தமிழகத்தில் வறண்டு போன நாகநதி ஆற்றை அப்பகுதி பெண்கள் மீட்டுள்ளது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
உலக ஆறுகள் தினம் செப்டம்பர் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், அந்த நாளின் பெருமை குறித்து மோதி தமது மன் கி பாத் உரையில் பேசியது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஒவ்வொரு சொட்டு நீரையும் மதித்து, மாசுபாட்டிற்கு எதிராகப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்த நரேந்திர மோதி, ஆறுகளைப் போற்றும் வகையில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ஒரு முறை நதி திருவிழாவை கொண்டாட வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறார்.
"தமிழகத்தில் கமண்டல நாகநதி வறண்டு போனது, இருப்பினும் அப்பகுதி பெண்கள் எடுத்த முன்னெடுப்பால் மூலம் அந்த நதி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியுள்ள பல ஆயிரம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்கப் பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்" என்று மோதி வலியுறுத்தினார்.
திருவண்ணாமலையின் நாகநதி ஆறு, ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி வழியாக வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு ஆரணி தாலுகா மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. வேலுார் மாவட்டம், கணியம்பாடி தாலுகாவில் மழைக்காலங்களில் நாகநதி ஓடையில் வரும் தண்ணீர் வீணாக ஏரி, குளம், குட்டைகளில் தேங்கி ஆவியாவதை தடுத்து நேரடியாக பூமிக்குள் செலுத்தக்கூடிய உறை கிணறுகள் 354 இடங்களில் அமைக்கப்பட்டதால், இப்பகுதியில் உள்ள கிராமங்களில் 50 முதல் 70 அடி மட்டத்தில் திறந்த வெளி கிணறுகளில் தண்ணீர் கிடைத்து வருகிறது. இதனால் கோடையிலும் அங்கு நெல், வாழை போன்ற தண்ணீர் தேவையுள்ள பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
நாகநதி ஆற்றில் எப்போதும் தண்ணீர் உள்ளது. கணியம்பாடியில் இந்த திட்டத்திற்கு கிடைத்த வெற்றியையடுத்து திருப்பத்துார் மாவட்டத்தில் திருப்பத்துார், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், கந்திலி, மாதனுார், வேலுார் மாவட்டத்தில் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு ஆகிய ஒன்பது தாலுகாக்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 18 நதிகளின் குறுக்கே 3,768 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முழுக்க, முழுக்க பெண் தொழிலாளர்களைக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்த திட்டம் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆரணி அருகே உள்ள படவேடு எனுமிடத்தில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் செண்பகத் தோப்பு அணை அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும்.
நதியின் தற்போதைய நிலை என்ன?
நாகநதி
நாகநதியின் தற்போதைய நிலை மற்றும் இதன் அடுத்தகட்ட நகர்வு குறித்து நாகநதி புனரமைப்பு திட்டத்தின் இயக்குநர் முனைவர் சந்திரசேகர் குப்பனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது அவர், "இந்த நாகநதி மொத்தமாக நீர்பிடிப்பு பகுதி 366 சதுர கிலோமீட்டரில் அளவில் இருக்கிறது. இதில் 60 சதவீதம் வேலூர் மாவட்டத்திலும், மீதம் 40 சதவீதம் திருவண்ணாமலை மாவட்டத்தையும் உள்ளடக்கியது. குறிப்பாக இதில் எவ்வளவு நீரோடைகள், சிறிய ஓடைகள், நன்னீர் குளங்கள் உள்ளது என்பதை ஆராய்ந்தோம். இதையடுத்து இப்பகுதியில் இவ்வாறு மழை பொழிவு உள்ளது, அதை எப்படி நிலத்தடி நீராக அதிகரிப்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தோம்.
நாகநதி
நிலத்தடி நீரை அதிகரிப்பதன் மூலம் எவ்வாறு நன்னீர் ஓடைகள் வரும் என்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு திட்டம் தயார் செய்தோம். இதனை வாழும் கலை அமைப்பு ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்த பெண்கள் உதவியுடன் நிலத்தடி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இதனை ஆரம்பித்தோம்.
2014ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று இந்த பணி தொடங்கப்படுவதற்கு முன்பு 5 ஆண்டுகளாக மேலாக நாகநந்தி வறண்டு இருந்தது. தற்போது இந்த நிலத்தடி நீர் உயர்ந்த காரணத்தினால் நீரோட்டம் அதிகரித்துள்ளது," என்றார் அவர்.
நாகநதி
"இந்த திட்டத்தின் மூலமாக கிடைத்த முடிவுகள் மையமாக கொண்டு மேலும் 10 மாவட்டங்களில் இதே போன்று பணியை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக 18 நதிகளை உள்ளடக்கிய வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், சிவகங்கை, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இந்த பணியை தொடங்கியுள்ளோம். இதனையடுத்து தமிழகம் முழுவதும் இதை செய்யவுள்ளோம்.
குறிப்பாக 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாளன்று முதன் முதலில் இந்த திட்டத்திற்கு பூமி பூஜை செய்து தொடங்கினோம். அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதியன்று நாகநதி நாளாக கொண்டாடி வருகிறோம்," என சந்திரசேகர் குப்பன் தெரிவித்தார்.
நரேந்திர மோதி குறிப்பிட்ட அந்த நாகநதி ஆறு குறித்து பிபிசி தமிழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நாகநதிக்கு வேலூர் பெண்கள் எவ்வாறு உயிர் கொடுத்துள்ளனர் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நம்பிக்கை விதைத்த வேலூர் பெண்கள்
தமிழகத்தில் வறட்சியின் கதைகளை கேட்ட நமக்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறார்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண்கள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் வேலூரில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாதையில் கிணறுகள் தோண்டி, மழை நீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளனர்.
நாகநதி ஆறு அமைந்த பாதையில் 300க்கும் மேற்பட்ட நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைத்து, கற்களை அடுக்கி, 349 தடுப்பணைகளை கட்டியதில் பெரும்பங்கை வகித்தவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை சுருக்கமாய் சொல்லிவிடும் கதைக்கு பின் கடப்பாரை, மண்வெட்டியை தூக்கிக்கொண்டு வியர்வை சிந்தி வேலை செய்த ஆயிரக்கணக்கான அசாத்திய பெண்களின் உழைப்பு உள்ளதை நேரில் பார்த்தோம்.
பாலாற்றின் கிளையாக, வேலூர் மாவட்டத்தில் பாம்புபோல வளைந்து 14 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது நாகநதி.
வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்
60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசனத்திற்கு உதவிய நாகநதி ஆறு, ஆலை கழிவுகள் தேங்குவது, விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆக்கிரமிப்புகள் என பல காரணங்களால் 15 ஆண்டுகளாக வற்றிக்கிடந்தது. அதை இந்த பெண்கள் எப்படி மீட்டார்கள்?
இருபோகம் விளைச்சல் ஆரம்பம்
கொள்ளு, கேழ்வரகு விளைந்த நிலங்களில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் மஞ்சள், வாழை மரங்களும் விளைந்து நிற்பது பெண்களின் வெற்றிக்கு சான்றாக உள்ளது. விவசாயிகளின் வாழ்த்துக்களை பெற்ற ஆயிரக்கணக்கான பெண்களில் ஒரு பணியாளர் சரிதா(30). முன்னர் 80 அல்லது 100 அடியில் தண்ணீர் கிடைத்த ஊராக இருந்தது சரிதா வசிக்கும் கீழரசம்பட்டு கிராமம்.
''20 அடியில் நீங்கள் பார்ப்பது ஊற்று தண்ணீர்,'' என புன்னகையுடன் பேசினார் சரிதா.
''மழை வந்தால் ஒரே நாளில் ஆற்று தண்ணீர் காணாமல் போய்விடும் அல்லது சில இடங்களில் தேங்கி குட்டையாக இருக்கும். ஆனால் நாங்கள் தூர் வாரி, கிணறுகளை அமைத்ததால், இன்று நீர் சேமிக்கப்பட்டுள்ளது.ஒரு போகம் விளைச்சலுக்கு சிரமப்பட்ட விவசாயிகள், இரு போகம் அறுவடை செய்கிறார்கள். எங்களை வாழ்த்துகிறார்கள்,''என்கிறார் சரிதா.
குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்
அடுத்ததாக நாம் சந்தித்த லட்சுமி அம்மா நாகநதி மீட்பு பணிகளால் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது என விவரித்தார்.
குடிநீருக்காக குடங்களை தூக்கிக்கொண்டு நடந்ததை நினைவுகூர்ந்த லட்சுமி, தற்போது தனது வீட்டருகே உள்ள குழாயில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது என்கிறார்.
''ஜல்லிக் கற்களை சுமந்து, கனமான சிமெண்ட் வளையங்களை இறக்கி கிணறு அமைத்தோம். காயம்பட்டு வலித்த அதே கைகளில், ஊற்று நீரை அள்ளிக் குடித்தபோது சந்தோசம் மட்டுமே மிச்சமாய் இருந்தது. வேலூர் என்றாலே அதிகமான வெயில், தண்ணீர் பஞ்சம் இருக்கும் மாவட்டம் என்பார்கள். நாகநதியை சுத்தப்படுத்தி, நிலத்தடி நீரை நாங்கள் சேமித்துள்ளதால், எங்கள் உழைப்பை பலரும் பாராட்டுகிறார்கள். பல ஊர்களில் இருந்தும் எங்களை சந்திக்க வருகிறார்கள், ''என்கிறார் லட்சுமி.
கடந்த முப்பது ஆண்டுகளில் பெய்த மழை அளவை கொண்டுபார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் நாகநதி சுமார் 1,000 மில்லிமீட்டர் மழை அளவை பெற்றுள்ளது என்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள். இனிவரும் காலங்களில் நதியின் பாதையில் நீர் தேங்கி, 1,000 மில்லிமீட்டர் மழைநீர் வீணாகாமல் பயன்படும் என்கிறார்கள்.
ஆறுகளை பாதுகாப்பது எப்படி?
வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்
தமிழக ஆறுகள் குறித்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ள ஆய்வாளர் எஸ்.ஜனகராஜனிடம் நாகநதி மீட்டெடுப்பு குறித்து கேட்டோம்.
''மக்களால் நாகநதி தூர்வாரப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. தங்களது உழைப்பை செலுத்தி, கடுமையாக மக்கள் வேலைசெய்துள்ளார்கள் என்பதை பாராட்டியாகவேண்டும். அதேநேரம், நதியை முழுமையாக மீட்டெடுப்பது என்பது தூர்வாருவதோடு முடிவு பெறாது. இந்த ஆற்றின் மூலத்தை சரிப்படுத்தி,அது ஓடி வரும் பாதையில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பராமரிக்கவேண்டும். மேலும் மணல் தேக்கத்தை கவனிக்கவேண்டும். அந்த ஆற்றின் அகலம் எவ்வாறு இருந்தது, அந்த அகலத்திற்கு விரிவுபடுத்தவேண்டும்,''என்கிறார் ஜனகராஜன்.
நதியில் கழிவுகள் தேங்காமல் பாதுகாக்கவேண்டும், எத்தகைய கழிவுகளை நதி சுமந்துவருகிறது என்று பார்க்கவேண்டும், அந்த நதி தனது பாதையில் பாய்ந்தோட தடங்கல் இருந்தால் அவற்றைக் களையவேண்டும் என்றும் ஜனகராஜன் குறிப்பிடுகிறார்.
பாலாற்றின் கிளை நதியாக இருக்கும் நாகநதி சீராகியுள்ளது என்பத்தோடு இல்லாமல் பாலாற்றின் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் உணரவேண்டும் என்கிறார்.
உறவுகளை உருவாக்கிய நதி
நாகநதியை தங்களது உடமையாக கருதும் மக்களும் இருக்கிறார்கள். தூர்வாரும் பணிகளின்போது புதுசொந்தங்களை தேடிகொண்டவர்கள்தான் அந்த மக்கள்.
வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தபோது சாமிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மேனகா தமக்கு இளவயதில் நிறைய தோழிகள் கிடைத்துவிட்டதாக சொல்கிறார்.
''அரசாங்கத்தில் தினக்கூலியாக ரூ.229 கொடுக்கிறார்கள் என்பதால் வேலைக்கு வந்தேன். மூன்று வாரங்கள் தொடர்ந்து வேலைசெய்ததால் குழுவில் உள்ளவர்கள் தோழிகளாக மாறிவிட்டார்கள். எனக்கு வருமானம் கிடைத்தது. அதேசமயம் ஊருக்காக ஒரு வேலையை செய்தோம் என்ற மனநிறைவு கிடைத்தது. எங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் நதியை பாதுகாப்போம்,''என்கிறார் மேனகா.
தினமும் வேலையின்போது உற்சாகப்படுத்திக்கொள்ள பாட்டுப்பாடுவது, குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்வுகாண்பது, சேமிப்பு பற்றி பேசுவது என பெண்களுக்கு இடையில் உறவுப் பாலத்தை இந்த திட்டம் ஏற்படுத்தியது என்கிறார்கள் பணியாளர்கள்.
நாகநதியை போலவே பாலாற்றின் மற்ற கிளை நதிகளான மலட்டாறு, கௌடண்ய நதி, பொன்னையாறு உள்ளிட்ட நதிகளையும் சீரமைக்க திட்டங்களை வகுத்துவருவதாக வேலூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். பாலாற்றின் பிற கிளை ஆறுகளின் பாதைகளில் சுமார் 2.200 நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும் அதிலும் பெண்களின் உழைப்புதான் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.
மேலும் நாகநதியில் கிணறுகளை அமைத்து பயன்பெற்ற மக்கள், நீர்நிலையை தூய்மையாக வைத்துக்கொள்வதில் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக