வியாழன், 30 செப்டம்பர், 2021

கேரள பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியார்..! சங் பரிவர்களின் வரலாறுகள் நீக்கம்! கேரளா அதிரடி

 Arsath Kan -  Oneindia Tamil : திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கன்னூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியாரின் சமூக தொண்டு குறித்து சேர்க்கப்பட்டுள்ளது.
பெண்ணுரிமைக்காகவும், சாதி பேதமில்லா சமத்துவ சமுதாயத்துக்காவும் தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை உழைத்தவர் பெரியார். முற்போக்கான கருத்துக்கள் மூலம் பகுத்தறிவை வளர்த்தெடுத்தார்.
மூடப்பழக்க வழங்கங்களை வாழ்நாள் முழுவதும் எதிர்த்த பெரியார் , சுயமரியாதையை போதித்து வந்தார். குழந்தை திருமணம் எதிர்ப்பு, விதவை மறுமணம், பெண்களுக்கு கல்வி, என பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஓயாது குரல் கொடுத்து வந்தார் பெரியார்.
இதனிடையே கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் உள்ள தெருக்களில் பட்டியலின பிரிவை சேர்ந்தவர்கள் நடக்க கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த சமூக நல ஆர்வலர்களின் அழைப்பை ஏற்று போராட புறப்பட்டுச் சென்றார் பெரியார்.


மேலும், வைக்கத்தில் போராட்டம் நடத்தி கைதானார். தமிழகம் கடந்து இன்று உலகம் முழுவதும் பெரியாரின் கொள்கைகள் மற்றும் சிந்தனைகள் பரவியுள்ளன.
அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில், கன்னூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியார் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது பெரியார் கொள்கை பின்பற்றாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
"சட்டகங்களுக்குள் பொருந்தாத தலைவன்".. பெரியாரை கொண்டாடும் வடஇந்தியர்கள்.. பாராட்டும் கேரளா, கர்நாடகா முதுகலை படிப்பில், அதாவது எம்.ஏ. ( அரசியல் மற்றும் நிர்வாகம் ) பிரிவில் பெரியார் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது.
இதனிடையே சங்பரிவார், தீனதயாள் உபாத்யாயா, பல்ராஜ் மதோக் போன்றோர் தொடர்புடைய விவகாரங்களை பல்கலைக்கழக கல்வித்திட்டக் குழு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து அதிலிருந்து நீக்கியிருக்கிறது.
அதே சமயத்தில் கோல்வால்கர், வீர சாவர்கர், முகமது அலி ஜின்னா, மவுலானா அபுல் கலாம் ஆசாத், போன்ற தலைவர்கள் குறித்த விவரங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் குறித்த வரலாறுகளும் எம்.ஏ. அரசியல் மற்றும் நிர்வாகம் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனிடையே திராவிட நாடு என்ற தலைப்பில் தந்தை பெரியாரை பற்றிய பாடம் இணைக்கப்பட்டுள்ளது. வசதியான குடும்பத்தில் பிறந்து சமூக தொண்டுக்காக சுகபோக வாழ்க்கையை துறந்து மக்களுக்கு பெரியார் ஆற்றிய அனைத்து பணிகளும் இந்த பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன


கருத்துகள் இல்லை: