மின்னம்பலம் : கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக தலைவர் அண்ணாமலைதான் இதை தீவிரமாக எழுப்பினார்.
இதற்கு பிடிஆர் தொடர்ந்து கொடுத்த பதில்களையடுத்து, “தமிழ் நாட்டின் நிதி அமைச்சராக இருக்கக் கூடியவர் தன் தினசரி வேலைகளை திறம்பட செய்வதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் ஒரு தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும்.
நிதியமைச்சர் உடன் வேலை செய்யும் நபர்களையும் நிதி அமைச்சகத்தையும் ஆபத்தான சூழ்நிலையில் விட்டுவிடாமல் தமிழக முதலமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் அண்ணாமலை.
இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதற்காக பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்ட பிடிஆருக்கு ஒன்றிய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலில் புதிய பொறுப்பை அளித்துள்ளது.
இன்று (செப்டம்பர் 26) ஒன்றிய நிதித் துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் சீர்திருத்தக் குழுவுக்கு மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் உறுப்பினர்களாக டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த சவுதாலா, அசாம் மாநில நிதியமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் மாநில வர்த்தக அமைச்சர் டி.எஸ்.சிங், ஒடிசா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தமிழ்நாட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தன்னை இந்தக் குழுவில் இடம்பெறச் செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் பிடிஆர்.
அண்ணாமலை இங்கே பிடிஆரை கடுமையாக எதிர்த்த போதிலும் பிடிஆரின் அறிவை உணர்ந்து இக்குழுவில் இடம் அளித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்கிறார்கள் இங்குள்ள பாஜகவினர் சிலரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக