தினமலர் சேலம்:தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி, 5,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஓராண்டுக்கு பின் கோவையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரமேஷ், 40. இவரது தலைமையில் 15 பேர், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்' என்ற பெயரில் நிதி நிறுவனம் துவங்கினர். அதில், 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம், 10 சதவீத வட்டி, 10 மாதம் முடியும் நிலையில், முதலீட்டு தொகை இரட்டிப்பு என்பன உள்ளிட்ட கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இதை நம்பி, தமிழகம், கேரள மாநில மக்கள், தொழிலதிபர், அரசியல்வாதிகள் லட்சக்கணக்கில் டிபாசிட் செய்தனர்.
இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த மகேஷ், 34 உட்பட 10 பேரிடம், 4.80 கோடி ரூபாய்க்கு அந்நிறுவனம் மோசடி செய்திருப்பதாக, 2020 செப்., முதல் வாரம், அப்போதைய சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு புகார் வந்தது.
அவரது தலைமையில், குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பூபதிராஜன் அடங்கிய தனிப்படையினர் விசாரித்து, அந்நிறுவனத்தின் தலைவர் கவுதம் ரமேஷ், ஒண்டிபுதுார் பிரவீன்குமார், 30, ஆகியோரை அதே ஆண்டு கைது செய்தனர்.
இதில் மற்றொரு முக்கிய குற்றவாளியான, கோவை, ராம் லட்சுமணன் நகர் கனகராஜ், 25, என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், ஓராண்டுக்கு பின், நேற்று முன்தினம் கோவையில் பதுங்கி இருந்த அவரை, தனிப்படையினர் கைது செய்தனர். இதையறிந்த கேரள மாநில போலீசார், அவரிடம் விசாரிக்க சேலம் வந்துள்ளனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 2,000 பேரிடம், 1,200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. இங்கு சுருட்டிய பணம் மூலம், கேரள மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட கிளைகளை ஏற்படுத்தி, 7,000 பேரிடம், 3,800 கோடி ரூபாய் வரை வசூலித்து, அதை திருப்பி வழங்காமல் மோசடி செய்துள்ளனர். இரு மாநிலங்களிலும் மொத்தம், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக