சனி, 2 அக்டோபர், 2021

வைகோ, திருமாவளவன் மீதான வழக்குகள் ரத்து!

வைகோ, திருமாவளவன் மீதான வழக்குகள் ரத்து!

மின்னம்பலம் : வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.


இவ்வழக்கு விசாரணைக்குக் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இருவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதனிடையே தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருவர் மீதும் பதியப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி இவ்வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: