Veerakumar - Oneindia Tamil : சென்னை: திமுகவை சேர்ந்த கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக, தமிழகத்திலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து. இங்கே கிளிக் செய்யவும்
இதேபோல, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தரப்பும், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தரப்பும் வேட்பாளர்களை களம் இறங்காத நிலையில், இவர்கள் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாகியுள்ளனர்.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்கள் ஆகினர். இதனால் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து காலி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக சார்பில் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். உறுப்பினர்கள் பலம் அடிப்படையில் இந்த இருவரும் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால் அதிமுக தரப்பில் யாரும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.
இன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கே.பி.முனுசாமியின் எம்.பி. பதவிக்காலம் 2026ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முடிவடைவதாக இருந்தது. அதுபோல வைத்திலிங்கத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு 2022 ஜூன் 29ம் தேதி முடிவதாக இருந்தது. எனவே திமுகவிலிருந்து அந்த இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளோரும், அதே அளவு காலம்தான் பதவியில் இருக்க முடியும். முனுசாமி இடத்தில் கனிமொழி சோமு நிறுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு காலம் பதவி உள்ளது. ஆனால், வைத்திலிங்கம் இடத்திலிருந்து தேர்வாகியுள்ள ராஜேஷ் குமாருக்கு 1 வருடம்தான் பதவிக்காலம் உள்ளது.
இதேபோல, தமிழகத்தில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்க போதிய பலம் இல்லாததால் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பி வேட்பாளராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, தமிழக பாஜக தலைவராக இருந்த முருகனுக்கு மத்திய ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் பதவியை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து 6 மாதங்களுக்குள் மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் களமிறக்கப்பட்டார் முருகன். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து போட்டியின்றி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் முருகன். 15 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் நான்கு சட்டசபை உறுப்பினர்களை பாஜகவுக்கு பெற்றுக் கொடுத்ததில் முருகன் பங்களிப்பு அபாரமானது. தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட முருகன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதற்கெல்லாம் பரிசாக மத்திய அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினராக பாஜக செல்வகணபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. பிற அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருந்தது. அதேபோல செல்வகணபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரசுக்கு போக வேண்டிய எம்.பி. பதவியை கூட்டணியில் உள்ள பாஜக பெற்றுக் கொண்டதாக விமர்சனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக