செவ்வாய், 2 ஜூன், 2020

சலூனில் முடிவெட்ட ஆதார் கட்டாயம்!

சலூனில் முடிவெட்ட ஆதார் கட்டாயம்!மின்னம்பலம் : முடிவெட்டச் செல்வதற்கு ஆதார் கண்டிப்பாக கொண்டுசெல்ல வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஐந்தாம் கட்டமாக ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக சலூன் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வழிகாட்டு முறைகளை தமிழக அரசு இன்று (ஜூன் 2) வெளியிட்டுள்ளது.
அதன்படி, அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்களின் நுழைவு வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது சானிட்டைசரை வைக்க வேண்டும். சலூன் உள்ளிட்டவற்றிற்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற விவரங்களை பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும்.
பணியாளர்கள் தங்களைது கைகளை துடைப்பதற்காக பேப்பர் நாப்கின்கள் வைக்கப்படுவதோடு, அவை பயன்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பணியில் ஈடுபடுவதற்கு முன்பு கைகளை கழுவ வேண்டும் அல்லது சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருப்பின் அரசு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொண்டு, மருத்துவரின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பணியில் ஈடுபடக் கூடாது. காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் வாடிக்கையாளர்கள் அழகு நிலையம் உள்ளிட்டவற்றிற்கு வரக்கூடாது.
எழில்

கருத்துகள் இல்லை: