செவ்வாய், 2 ஜூன், 2020

சுப. வீரபாண்டியன் : பச்ச மட்டைக்குப் பயந்தவர்கள் இல்லை நாங்கள்!

-சுப. வீரபாண்டியன் : ஆபாசமும், வன்முறையும் நிறைந்த அந்த முகநூல்
பதிவு, சில நாள்களுக்கு முன் வெளிவந்துள்ளது. நான் நேற்று மாலைதான் பார்த்தேன்.
ஒரு செருப்பை எடுத்து ஒருவர் உயர்த்திக் காட்டி, "என்ன தெரியுதா இது, தேய்ந்துபோன பழைய...."என்று அந்தக் காணொலி தொடங்குகிறது. 11 நிமிடங்கள் தொடரும் அந்தக் காணொலியில், தோழர் சுந்தரவள்ளியைப் பற்றிய இழிவான, தரக்குறைவான வசைகள் நிறைந்துள்ளன. வசைகளுக்கு இடையிடையே மிகக் கடுமையான வன்முறை மிரட்டல்கள் இடம் பெற்றுள்ளன. திமுக தலைவர் தளபதி, தி,க தலைவர் ஆசிரியர் ஆகியோரைப் பற்றியும், என்னைப் பற்றியும், இழிவான சில சொற்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
எதற்காக இந்தக் காணொலி? சுந்தரவள்ளி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்துத் தவறாகப் பேசிவிட்டாராம். அப்படி என்ன பேசிவிட்டார்? "தோழர் பிரபாகரன்" என்று சொன்னாராம். அதற்குத்தான் அவ்வளவு வசையாம். "நீ யாருடி அவர தோழான்னு சொல்றதுக்கு?" என்று தொடங்கி, சுந்தரவள்ளியின் உருவ அமைப்பு, நடத்தை பற்றியெல்லாம் பல அவதூறுகள்.
தோழர் என்னும் சொல் அவ்வளவு இழிவானதா? மிக உயர்ந்த சொல்லாயிற்றே அது!

சோவியத் அதிபராக இருந்த அவரையே தோழர் லெனின் என்று அழைப்பதில்லையா? அதற்கு யாரேனும் இவ்வளவு இழிவாகப் பேசுவார்களா? எனக்குள் ஒரு ஐயம் எழுந்தது. "எங்க குலசாமி அவரு" என்று இடையில் ஒரு தொடர் வருகின்றது. ஆனால் அவர் பேசும் முறை ஈழத்தமிழர்களின் தமிழ் ஒலிப்பு முறை போல இல்லை. அதோடு மட்டுமில்லாமல், இது ஈழத்தமிழர்களின் பண்பாடும் இல்லை. அவர்கள் குழந்தைகளைக் கூட, வா, போ என்று ஒருமையில் அழைக்க மாட்டார்கள். வாங்க, போங்க என்றுதான் சொல்வார்கள்.
எனவே அவர் ஈழத்தமிழரும் இல்லை, அவர் சொல்கின்ற காரணம் உண்மையுமில்லை என்று பட்டது. சரி, அப்படி ஊர், பெயர் தெரியாத ஒருவரைப் பற்றி நீங்கள் ஏன் முகநூலில் பதிவிடுகின்றீர்கள் என்று கேட்கலாம். அவர் வெறும் அம்புதான். பின்னல் இருக்கும் கைகளைத் தேடுகிறேன் நான்.
அது மட்டுமில்லாமல், இது சுந்தரவள்ளி என்னும் தனி மனிதரை நோக்கியதன்று. ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளை நோக்கியது. எவரும் வாய் திறக்கக்கூடாது என்னும் கொலை மிரட்டல் இது. ஆதலால் இது குறித்துப் பேசியே ஆகவேண்டும்.
அந்தத் தரங்கெட்ட மனிதர், தன் பேச்சுக்கிடையில் இரண்டு மூன்று முறை, "நான் ஒன்னும் சீமான் ஆளில்லை" என்று கூறுகின்றார். எதற்காக அப்படிச் சொல்ல வேண்டும்? அது ஏதோ 'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதுபோல் தெரிந்தது.
பிறகு தோழர் சுந்தரவள்ளியைத் தொடர்பு கொண்டு, என்ன நடந்தது என்று கேட்டேன். தன்னை இழிவாகப் பேசியவரின் முகநூல் தலைப்பில் சீமான் படம் இருக்கிறது என்றும், சில நாள்களுக்கு முன்பு, சீமானைக் கேலி செய்து, தான் வெளியிட்ட காணொலிக்கான எதிர்வினையாக இது இருக்கலாம் என்றும் கூறினார். சுந்தரவள்ளியின் காணொலியை நான் பார்த்திருக்கிறேன். ஈழம் சென்றதாகவும், அங்கு தனக்காக டைனோசர் கறி சமைத்துக் கொடுத்திட்டார்கள் என்றும், அந்தக் கறியின் உள்ளிருந்து இட்லி கொட்டியதாகவும் பேசியிருந்தார். சீமானின் ஆமைக்கறிக்கு மாற்றான அங்கதம் இது!
இப்போது காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளதாகச் சுந்தரவள்ளி கூறினார். அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுத்துள்ளனரா என்று கேட்டேன். பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புகைச் சீட்டு மட்டும் அனுப்பியுள்ளனர் என்றார்.
அந்தப் பேச்சு வெறும் ஆபாசப் பேச்சு மட்டுமில்லை. கடுமையான வன்முறைத் தூண்டல்களையும் உள்ளடக்கியது. "உன் கையைக் கட்டிப்போட்டுட்டு, நாக்கில பச்ச மிளகாய அரைச்சுத் தடவுனாத்தா நீயெல்லாம் சரியாவே" என்கிறார் அந்த நபர். வன்முறை மட்டுமில்லை வன்மமும் நிறைந்திருக்கிறது.
பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். கேட்பதற்கு நாதியிருக்காது என்ற ஆணவமும், எங்கள் நாம் தமிழர் கட்சியைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ யாராவது பேசினால் இதுதான் நிலைமை என்று வெளிப்படையாக மிரட்டும் திமிரும் அந்தக் காணொலியில் இடம்பெற்றுள்ளன.
மத்திய, மாநில ஆளும்கட்சிகளின் கையாள்களாகத்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள் என்பதால், காவல்துறை தம்மை ஒன்றும் செய்யாது என்றும் அவர்கள் நினைக்கக்கூடும்.
காவல்துறை இருக்கட்டும். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சீமான் ஏதும் நடவடிக்கை எடுப்பாரா? இந்தக் கேள்வி சிறுபிள்ளைத்தனமானது என்று எல்லோருக்கும் தெரியும் ஏனெனில், சீமானே அப்படிப் பேசுகின்றவர்தானே! தொலைக்காட்சியிலும், வலையொளிகளிலும் சில மாதங்களுக்கு முன்பு பலமுறை ஒலித்த அவருடைய குரலை நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம்தானே!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, அவர் பேசிய பேச்சு இது -
" இவனுங்கள என்ன பண்ணனும்? புடிச்சு கட்டிவச்சு, இந்த மாதிரி மரங்கள்ல கட்டிவச்சு, திருக்கைவால் இருக்குல்ல திருக்கை வால், பாத்திருக்கீயளா, பாக்கல, சரி விடுங்க, பச்சை மட்டையை, பனை மரத்துப் பச்சை மட்டைய எடுத்துவந்து சீய்ச்சுட்டு, சட்டையை கழட்டி விட்டுட்டு, முதுகுத் தோல் இருக்குல்ல முதுகுத்தோல், அது உரிய உரிய அடிச்சு, உப்பைத் தடவி விட்டுட்டு அப்படி உக்காந்து பாக்கணும்." என்று சொல்லும்போது தெரியும் அவரின் குரூர மனம்.
இன்னொரு பேச்சையும் கேளுங்கள் -
"நான் பலபேரை அன்போடு வேண்டுகிறேன். என்னிடத்தில் அதிகாரம் வருவதற்கு முன்பு நீங்கள் இறந்து போய்விடுங்கள்.இல்லையென்றால், உங்களைக் கொன்று அந்தக் கொலைப்பழியை நான் ஏற்க வேண்டியிருக்கும்"
இவர்தான் சீமான். இவருடைய தொண்டர் வேறு எப்படி இருப்பார்? இப்படித் தேர்தல் நேரத்திலேயே பேசினாரே, அவர் மீது அரசோ, தேர்தல் ஆணையமோ ஏதும் நடவடிக்கை எடுத்ததா? எடுக்க மாட்டார்கள். பாஜகவின் கையாள்கள்தானே இந்த சீமான் கட்சியினர். திராவிடத்தையம், திமுக வையும் எதிர்த்துப் பேசுவதற்காகத்தானே இவர்கள் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக, மனிதநேயத்தின் நிழல் கூட இல்லாமல், ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கனை ஒரு காவல்துறை அதிகாரி தன் பூட்ஸ் காலால் அவன் கழுத்தில் அழுத்திக் கொலை செய்த பின், இன்று அமெரிக்காவே பற்றி எரிகிறது. கலவரம் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் பெயர் இன்று உலகெங்கும் பரவி நிற்கிறது. அத்தனை வல்லமையும் கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையின் பதுங்கு குழிக்குச் செல்ல நேர்ந்திருக்கிறது.
.என்றும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.
வரலாற்றில் வன்முறை வென்றதே இல்லை!

கருத்துகள் இல்லை: