செவ்வாய், 2 ஜூன், 2020

இது மாவோவின் சீனம் அல்ல மாறுபட்ட சீனம்!


மின்னம்பலம் : சாலமன் : : வரலாறு முழுக்க மானுட சமூகங்கள் பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றன. இத்தகைய மாற்றத்துக்குப் பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கின்றன என்றாலும் அதில் கண்டுபிடிப்புகளும் பொருள் உற்பத்தி முறைமையும், பொருள் உற்பத்தியைப் பகிர்தலும் அதன் அடிப்படையில் எழுந்த வர்க்க, சமூக மோதல்களுமே சமூக மாற்றத்துக்கு முக்கிய பங்களிக்கின்றன.ஒவ்வொரு சமூகக் கட்டத்திலும் தனிமனித உறவுகளும் குடும்ப உறவுகளும் சமூக உறவுகளும் அரச உறவுகளும் இத்தகைய காரணிகளாலேயே மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன.
21ஆம் நூற்றாண்டின் அதிகாலைப் பொழுதில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பட்டறைத் தொழிலும் பண்ணை அடிமை முறையும் தங்க காசுகளும் செப்பு காசுகளும் கரைந்து, வளர்ச்சியடைந்த வங்கிகளும் பொருள் உற்பத்தியும் இணைந்து, நிதி மூலதன வடிவம்கொண்டு கண்டம்விட்டு கண்டம் பாயும் காலம் இது.
இக்காலகட்டத்தில் தனிமனிதர்களுக்கு இடையிலான, குடும்பங்களுக்கு இடையிலான, சமூகங்களுக்கு இடையிலான, அரசுகளுக்கு இடையிலான பழைய உறவுகள் புதிய உறவுகளோடு மோதல் கொள்கின்றன. நிதி மூலதன வடிவத்துக்குள்ளேயும் புறத்தேயும் புதிய உறவுகளும் பழைய உறவுகளும் முட்டி மோதுகின்றன. இதன் விளைவாக அரசுகளுக்கிடையிலான அரச போர்களும் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான வர்க்கப் போர்களும் சமூகங்கள், இனங்களுக்கிடையிலான உரிமைப் போர்களும் வெடிக்கின்றன.
புவியெங்கும் இத்தகைய மோதல்கள் இல்லாத தேசங்கள் கிடையாது. இத்தகைய மோதல்களில் முதன்மையான மோதலாக, உலகு தழுவிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய குறிப்பான மோதலாக அமெரிக்க – சீன வர்த்தக மோதல் இப்போது முன்வந்து நிற்கிறது.


பல்வேறு உலக நாடுகளின் வர்த்தகத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடிய அமெரிக்க – சீன வர்த்தக மோதலின் வெளிப்பாடாகவே லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் அண்மையில் இந்திய - சீன ராணுவத்துக்கிடையே மோதல் சம்பவம் நிகழ்ந்ததாகவும் இதில் கைகலப்பு நிகழ்ந்ததாகவும் இரு ராணுவத்தினரும் இரும்புக்கம்பிகள், கம்புகள் மற்றும் கற்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் வருகிற செய்திகளைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. அதையொட்டி இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு அரசுகளாலும் ராணுவம் குவிக்கப்படுகிறது.

போர் அபாயத்தைத் தோற்றுவிக்கக்கூடிய, முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் வெளியுறவுத் துறை நடவடிக்கைகளை நாம் பகுப்பாய்வு செய்வதற்கு வரலாற்றுப் பக்கங்களை அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் புரட்டுவதற்கு முன் இந்திய - சீன நாடுகளுக்கிடையிலான எல்லையையும், எங்கே பிரச்சினை என்பதையும் பார்ப்போம்.

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. இந்த எல்லைக்கோட்டுக்குப் பெயர் மெக்மொகன் எல்லைக்கோடு. ஹென்றி மெக்மொகன் என்பவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவுக்கான வெளியுறவு செயலாளர். இவர் தலைமையில்தான் இந்திய - சீன எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது. மெக்மொகன் வரைந்த எல்லைக்கோட்டை தொடக்கத்திலிருந்தே சீனா ஏற்கவில்லை. ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த எல்லையின் மேற்குப் பகுதியில் ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பகுதியில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மற்றும் கிழக்குப் பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் இடம் பெற்றுள்ளன. ஜம்மு காஷ்மீரை ஒட்டி இருக்கக்கூடிய அக்சாய் சின், அதை ஒட்டியிருக்கிறது லடாக். இந்த லடாக்கின் கிழக்குப் பகுதியில் இருக்கிறது, இப்போதைய பிரச்சினைக்குரிய ஏரியான பாங்கோக் த்சோ ஏரி.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரியின் தலைமையில் வரையப்பட்ட எல்லைக்கோட்டை இந்தியா ஏற்பதும், சீனா அதை ஏற்காமல் எதிர்ப்பதுமே ஒரு போருக்கும் இப்போதைய வரையிலான பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது.

எல்லைக்கோட்டை வரைந்தது பிரிட்டிஷாக இருக்கலாம். ஆனால், இந்த இரு நாடுகளுக்கிடையிலான போரையும் பிரச்சினையையும் அரை நூற்றாண்டுக் காலம் வரைவது அமெரிக்காவாகத்தான் இருக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் எழுப்பிய கேள்வியிலிருந்து தொடங்குவோம்.
``1965ஆம் ஆண்டு இமயமலையின் நந்தா தேவி சிகரத்தில் அமெரிக்கா புதைத்த அணுக்கதிர் வீச்சுப் பொருட்கள் என்ன ஆனது? அணுசக்தி பொருட்கள் கங்கையில் கலந்தால் மக்களின் நிலை என்னவாகும்?’’ எனக் கேள்வி எழுப்பினார். அவரின் கேள்வியையும் வருத்தத்தையும் புரிந்துகொள்ள நாம் 53 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சர்வதேசிய அரசியல் நிகழ்வுகளுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது.


1949 அக்டோபர் மாதம் ஒன்றாம் நாள் சீன அதிபர் மாசேதுங் அவர்களின் தலைமையில் செஞ்சீனம் மலர்ந்தது. பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நோக்கிப் பயணிக்கும் செஞ்சீனத்தைக் கண்டு உலக முதலாளித்துவத்துக்கு வெறி பிடித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ஏகாதிபத்தியமாக வடிவெடுத்த அமெரிக்காவால் செஞ்சீனத்தின் வீறு நடையைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. செஞ்சீனத்துக்கு அருகில் இருக்கும் இந்திய அரசைப் பயன்படுத்த நினைத்தது அமெரிக்கா.


நேரு தலைமையில் இயங்கிய இந்தியாவைச் சீனாவுக்கு எதிராகத் தூண்டிவிட்டது. அமெரிக்க அடிமை சாசனத்தில் கையெழுத்திட்ட நேரு காங்கிரஸ் இந்தியா, அமெரிக்காவின் தலையாட்டி பொம்மையானது. அதிலிருந்து பல்வேறு செயல்களில் இந்தியா, சீனாவைச் சீண்டிக்கொண்டே இருந்தது. நேரு எல்லையைப் பிரிக்கும் மெக்மொகன் எல்லைக்கோட்டை முதல் பிரச்சினையாக்கினார். 3,448 கிலோமீட்டர் எல்லை நீளத்தில் 220 கி.மீ பகுதி சிக்கிமில் வருகிறது. சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா - சீனா - பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு உள்ளது. இந்த முக்கியத்துவமான இடத்தில், சிக்கிமில் உள்ள கலிம்பாங் பகுதியில் அமெரிக்க உளவுத் துறையைப் பெரும் எண்ணிக்கையில் நிரப்பி, பக்கத்திலுள்ள திபெத்தை சீனாவுக்கு எதிராக தூண்டிவிட்டார் நேரு.

தலாய் லாமாவுக்கு அடைக்கலம் தருவதாகக் கூறி சீனாவுக்கு எதிராக இந்தியாவில் இருந்தபடியே தலாய் லாமாவைப் பேச வைத்தார். எல்லைப் பகுதியில் ராணுவங்களைக் குவித்தார். விளைவு செஞ்சீன செம்படையிடம் மிகக் கேவலமான முறையில் தோல்வியுற்றது இந்திய ராணுவம். நேருவோ மீண்டும் மீண்டும் அமெரிக்க சார்பு நிலைபாடுகளிலேயே மூழ்கித் திளைத்தார். கேபினட் அமைச்சர்களிடம்கூட விவாதிக்காமல் அமெரிக்காவுக்குக் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் குண்டு வீசும் பைட்டர் விமானங்களை அனுப்பிவைத்து இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவைத் தாக்க வேண்டுகோள் விடுத்தார். ஆனால், சீனாவோ பெருந்தன்மையோடு முன்வந்து 1962 நவம்பர் 21ஆம் நாளன்று போர் நிறுத்தத்தை அறிவித்தது. இந்திய ராணுவம் விட்டு வந்த ஆயுதங்களை மொத்தமாக இந்தியாவிடம் கொடுத்தது.போரில் வென்ற உலக நாடுகள் எவையும் இதுபோன்று ஆயுதங்களை திருப்பிக் கொடுத்ததில்லை. இந்த விவரங்கள் அனைத்தையும் இந்திய – சீனப் போரை அருகில் இருந்து ஆராய்ந்த `தி டைம்ஸ்’ இதழின் நிருபராகப் பணியாற்றிய நெவில் மாக்ஸ்வெல், `இந்திய – சீனா போர்’ எனும் நூலில் விரிவாகவே எழுதியிருக்கிறார்.


1964 மே 27ஆம் நாள் நேரு இறந்தார். ஆனால் அடிமை மனப்பாங்குகொண்ட இந்திய அரசுக்கு அமெரிக்கச் சார்பு அரசியலும் சீனா மீதான எதிர்ப்புணர்வும் அப்படியேதான் இருந்தது. அடுத்து சில பல விஷயங்கள் நடந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகிறார். கடந்த 1964ஆம் ஆண்டு சீனா முதன்முதலாக தனது அணு ஆயுத சோதனையை நடத்தியது. அலறித் துடித்தது அமெரிக்கா. மீண்டும் சீனாவுக்கு எதிராக இந்திய தலையாட்டி பொம்மையை உசுப்பிவிடும் பழைய பாணி தொடர்ந்தது.
1965ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏவின் அதிகாரிகள் இந்தியா வந்திறங்கினர். சீனாவின் நடவடிக்கையைக் கண்காணிப்பதற்காக சென்சார் கருவி பொருத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சாஸ்திரியின் இந்தியா வழக்கம்போல தலையாட்டியது. சிஐஏ குழுவும் இந்திய ராணுவ அதிகாரிகளும் சீனாவைக் கண்காணிக்க இமயமலையிலுள்ள நந்தா தேவி சிகரத்துக்குப் பயணிக்கின்றனர். இந்த ரகசியப் பயணத்துக்கு கேப்டன் மன்மோகன் சிங் கோஹ்லி தலைமை ஏற்கிறார். அங்கு நிலவிய அடர்குளிரை சமாளிக்க முடியாமல் பிறகு வரலாம் என்று அந்த குழு கொண்டு சென்ற பொருட்களை அங்கேயே புதைத்து விட்டு வருகிறது. சிஐஏ என்ன புதைக்கிறது என்றுகூட தெரியாத, அடிப்படை அறிவற்றவர்கள்தான் அன்றைக்கு ராணுவ கேப்டன்களாகவும் ஆட்சியாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
சிஐஏ மீண்டும் புதைத்த இடத்தில் தேடுகிறது. அவர்கள் பொருள் இல்லை. சலிப்போடு சிஐஏ அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்கிறது. ஆனால், அந்தப் பொருளைத் தேடச்சொல்லி இந்தியாவை அதிகமாக நிர்பந்திக்கும்போதுதான், ‘நீங்கள் கொண்டு வந்தது என்ன? ஒரு சாதாரண சென்சார் கருவிக்கு ஏன் இப்படி பதறுகிறீர்கள்’ என்று கேள்வி எழுப்புகிறது இந்தியா. பிறகுதான் அவை சக்தி வாய்ந்த அணுக்கதிர் வீச்சு கொண்ட கருவிகள் எனும் உண்மை வெளிப்படுகிறது. இந்த கதிர்வீச்சுப் பொருட்களினால் என்ன ஆகும் என்பது பற்றி இதைப் புதைத்த குழுவுக்குத் தலைமை தாங்கிய தற்போது 88 வயதில் டெல்லியில் வசித்துவரும் மன்மோகன் சிங் கோஹ்லியே, “இந்த அணுக்கதிர் வீச்சுப் பொருட்கள் ரிஷி கங்கை நதியில் கலந்தால் தண்ணீர் மாசடையும், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இறக்கவும் நேரிடும். என்னுடைய மதிப்பீட்டின்படி இந்தக் கருவி மிகவும் வெப்பமானது. பனிப்பாறையைத் தொடும்வரை அது தொடர்ந்து மூழ்கிக்கொண்டே இருக்கும்” எனக் கூறுகிறார். மேலும் இந்தக் கருவியில் உள்ள புளூடோனியம் என்ற பயங்கர அணுசக்தி பொருட்கள் கங்கை நீரில் கலந்தால் பல லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்ற தேசத்தை உறைய வைக்கும் அதிர்ச்சிகர தகவல்களும் வெளியானது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல இருக்கிறது.
இத்தகைய கொள்கை முடிவுதான், அமெரிக்க - சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரில் இந்திய அணுகுமுறையில் வெளிப்படுகிறது. சீனா அமெரிக்காவைவிட வர்த்தகத்தில் மிஞ்சுவதாலும் அணு ஆயுத பலத்தில் மிஞ்சுவதாலும் சீனாவை எதிர்க்க தன்னுடைய துருப்புச்சீட்டாக இந்தியாவைப் பயன்படுத்த நினைக்கிறது அமெரிக்கா.
ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை விமர்சித்து 2020 மே 20 அன்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பு அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ராணுவத் தளவாடங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. அதன் காரணமாகவே ரஷ்யாமீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.ரஷ்யாவிடம் ராணுவத் தளவாடங்கள் மேற்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்காவின் சட்டம் வழிவகுக்கிறது என்பதாகவும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது தொடர்பான விவகாரம் பரிசீலனையில் உள்ளதாகவும் ரஷ்யாவிடம் உள்ளதைவிட மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும் இந்தியா எங்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என்றும் மிரட்டினார். ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்து ஏற்றுமதி விஷயத்தில் இருந்த மிரட்டல் தொனி ஆயுத கொள்முதல் விஷயத்திலும் இருந்தது.
இதே அதிகாரி ஒரு சில நாட்கள் கழித்து எல்லை விவகாரத்தில் சீனா தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். சீனா மீதான இவரின் குற்றச்சாட்டை தனக்கிட்ட கட்டளை போல எடுத்துக்கொண்ட இந்தியா எல்லையில் ராணுவத்தைக் குவிக்கிறது. `சீனா - இந்தியா எல்லை விவகாரத்தில் அந்த நாடுகள் விரும்பினால் மத்தியஸ்தம் செய்யவிருப்பதாக’ ட்ரம்ப் தன்னுடைய கட்டுரையில் இப்போது குறிப்பிடுகிறார். காஷ்மீர் விஷயத்தில் இவர் மத்தியஸ்தம் செய்யவிருப்பதாக குறிப்பிட்ட சில காலத்தில்தான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தும் பறிக்கப்பட்டது. இப்போது இந்திய - சீன எல்லை விவகாரத்தில் ராணுவ பதற்றத்தை அமெரிக்கா உருவாக்குவதற்குக் காரணம், இந்தியா ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்காமல் தன்னிடம் வாங்க வைப்பதற்காகவும் அதே நேரத்தில் சீனாவை அதன் அருகிலேயே சென்று மிரட்டுவதற்காகவும் இருக்கலாம். இதுபோலவே சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இரானிலிருந்து இயற்கை எரிவாயுவைக் குழாய் மூலமாக பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமல்ல சில ஆண்டுகளுக்கு முன் இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்த பின் இரானிடம் கச்சா எண்ணெயை வாங்குவதை கைவிடுமாறும் இல்லையெனில் பொருளாதாரத் தடை விதிப்போம் என்றும் இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது. இதன் காரணமாக இரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்டது இந்தியா. அதே நேரத்தில் 2017 -2018 காலகட்டத்தில் முதன்முறையாக தினமும் அமெரிக்காவிடம் 38,000 பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த இந்தியா, 2018-2019ஆம் ஆண்டில் தினமும் 2.24 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்தது. 2019-2020ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.
இப்படி தொடர்ச்சியாக இந்திய அரசை மிரட்டியே லாபத்தில் கொழிக்கிறது அமெரிக்கா.அமெரிக்கா மிரட்டிக்கொழிக்கும் பணம் என்பது இந்திய மக்களின் பணமே. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் பொறுத்தே இந்திய மக்களின் செல்வம் சேமிப்பாகும், பாதுகாப்பு உத்தரவாதமாகும்.
மிகச் சில விதிவிலக்குகள் தவிர, நேரு தொடங்கி மன்மோகன் காலத்தில் கையெழுத்தான ‘123 அணுசக்தி ஒப்பந்தம்’ வரையிலான அமெரிக்கச் சார்புக் கொள்கை இந்திய மக்களை அதலபாதாளத்துக்கே இழுத்துச்சென்றது. அதே நேரத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா என்ற நாடுகள் இணைந்து அதன் ஆங்கில எழுத்துகளின் முதல் எழுத்துகளை இணைத்து BRIC என்று உலக கூட்டமைப்பை உருவாக்கின. இது பொருளாதார நிலை, நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பு என 2009இல் தொடங்கப்பட்டு பின்னர் 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்தவுடன் BRICS என்றாகியது. இந்த நாடுகளின் 11ஆவது உச்சி மாநாடு 2019இல் பிரேசிலில் நடந்ததில் இந்தியா பங்கெடுத்துக்கொண்டது.
இது தற்போதைய சரியான திசைவழிதான் என்ற போதும் பல நேரங்களில் அமெரிக்காவின் கட்டுத் தளைகளிலிருந்து விடுபடுவதற்கான மிகச் சிறந்த முயற்சியாகும். சீனாவோடு நெருங்குகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைக் கெடுக்கும்விதமாக செயல்படுகின்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் இப்போது போலவே மேலும் சீனாவுடன் நெருக்கம் கொள்ளவைப்பதாகத்தான் இருக்கும் என்று இந்திய அரசு, அமெரிக்காவுக்கு அழுத்தமாக உணர்த்த வேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம்.
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிற நேரத்தில், இந்திய - சீன வெளியுறவு துறைகள் போரை விரும்பாமல் சமாதானத்தை விரும்புவதாகக் கூறுவது வரவேற்கக் கூடியது. நிலைமையைச் சிக்கலாக்கும் வகையில் `சீன விவகாரத்தில் மோடி கவலையோடு இருக்கிறார்’ என்று கூறிய ட்ரம்பின் பொய்யை இந்திய வெளியுறவுத் துறை அம்பலப்படுத்தியது சுவாரஸ்யமானதே.
அண்டை வீட்டுக்காரனைப் பகைத்துக்கொண்டு தொ(ல்)லை வீட்டுக்காரனோடு உறவு வைத்துக்கொண்டால் ஆபத்து நமக்கே. இந்திய அரசின் மாறுபட்ட செயல்பாடுகளை சகித்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதற்கு அருகில் உள்ளது, அன்றைய காலத்து மாவோவின் செஞ்சீனம் அல்ல. இப்போது அது மாறுபட்ட சீனம்!
அது அமெரிக்காவுக்குப் போட்டியாக இன்னொரு பெரியண்ணன் மனப்பாங்கோடு எல்லைகளில் படைகளைக் குவிக்கும் தேசம்தான். இத்தகைய எல்லை சீண்டல்களுக்கு அதே ரீதியில் பதிலடி கொடுக்காமல் நிதானத்தோடு நடந்துகொள்வதுதான் தொலைநோக்குப் பார்வையில் சரியானதாக இருக்கும்.
அண்டை நாடுகளோடு உறவோடிருப்போம்!
தேசிய தற்சார்பையும் ஆசிய தற்சார்பையும் உயர்த்திப் பிடிப்போம்!
கட்டுரையாளர் குறிப்பு:

சாலமன், அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணியைச் சேர்ந்த இளம் செயற்பாட்டாளர். திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இளமையில், இருபத்தைந்து ஆண்டுகளாகவே, புரட்சிகர அரசியலால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவர்.கடந்த பத்தாண்டுகளாக, போராட்டக்களத்தில் நிறபவர். நிறைய புத்தகங்களைப் படித்து, நடைமுறைக்கான தத்துவப் பார்வையை விதைப்பவர். போராட்டம், கைது, சிறை என வாழ்க்கையை வகுத்துக் கொண்டுள்ளவர்.


BBC :இந்தியா சீனா இடையிலான எல்லை பதற்றம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது. எப்போது எல்லை பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இரு அண்டை நாடுகள் பற்றிய ஒப்பீடு அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்தநிலையில், இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மீண்டும் இரு நாடுகளிடையே யார் பலசாலி என்ற கேள்விகளும், இந்தியா சீனா பற்றி பல சந்தேகங்களும் இணையத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது.
யாரிடம் அதிக ராணுவ வீரர்கள்?
ஜப்பான் பாதுகாப்புத்துறை 2019-ல் வெளியிட்ட அறிக்கையின் படி சீனாவிடம் 9 லட்சத்து என்பதாயிரம் ராணுவ வீரர்கள் உள்ளார்கள். இந்தியாவில் 14 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளார்கள். சமீபத்தில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்த சீனா, ராணுவ தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தியது.

எல்லைப்பகுதியில் 15 முக்கிய விமான தளங்களையும், 27 சிறிய விமான நிலையங்களையும் சீனா கட்டியுள்ளது.
இதில், திபெத் பகுதியில் சீனா கட்டியுள்ள விமான தளம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், அனைத்து வானிலையின் போதும் விமானங்கள் செல்லவும் தரையிறங்கவும் அனுமதிக்கும் இந்தத் தளத்தில், மேம்பட்ட போர் ஜெட் விமானங்களைக் கையாள முடியும்.
திபெத் பகுதியில் விமான தளத்துடன், விரிவான சாலை மற்றும் ரயில் தொடர்புகளையும் சீனா கொண்டுள்ளது. இதன் மூலம், சீன படைகள் 48 மணி நேரத்தில் இந்திய எல்லையை அடையலாம் என கூறப்படுகிறது.
எல்லைப் பகுதியை வலிமைப்படுத்துவதில் சீனா முன்னணி வகிக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியா தனது தூக்கத்தில் இருந்து விழித்தது" என இந்தியாவின் "ஃபர்ஸ்ட் போஸ்ட்" இணையதளம் கூறியுள்ளது.

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் 73 சாலைகளை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அதில் இதுவரை 30 சாலைத் திட்டங்கள் முடிவடைந்துள்ளன.
அருணாசல பிரேதசத்தில் உள்ள தவாங் மற்றும் டிராங்க் பகுதியில் இரண்டு உயர்தர விமான இறங்கு தளத்தை இந்தியா கட்டி வருகிறது. அத்துடன் வட-கிழக்கு பகுதியில் உள்ள ஏற்கெனவே உள்ள ஆறு உயர்தர விமான இறங்கு தளத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.
இந்தியா, தனது சீன எல்லைப்பகுதியில் 31 விமான தளங்களைக் கொண்டுள்ளது. அதில், அஸ்ஸாமில் உள்ள விமான தளங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றன.

’ராணுவத்தின் பயிற்சி மற்றும் ராணுவ தொழில்முறை இந்தியாவிற்குச் சாதகமாக உள்ளது. உள்கட்டமைப்பு, தளவாடங்கள், பொருட்கள் ஆகியவை சீனாவுக்கு சாதகமாக உள்ளது`` என ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ராணுவம் குறித்த ஆராய்ச்சியாளர் ஸ்ரீகாந்த் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை: