சனி, 6 ஜூன், 2020

ஊராட்சித் தலைவரை கட்டாயப்படுத்தி சவக்குழி தோண்ட வைத்த ஜாதி ..

Kathiravan Mayavan : நீ குழி வெட்டத்தான் லாயக்கு - திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர் ஒருவரை கட்டாயப்படுத்தி சவக்குழி தோண்டும்படி கூறியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்தில் இருக்கிறது அரியாக்குஞ்சூர் ஊராட்சி. சுமார் 700 வாக்காளர்கள் இருக்கும் இந்தக் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த இருளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியின மக்களுக்காக இந்தப் பகுதி ஒதுக்கப்பட்டதால், சின்னகல்தாம்பாடியைச் சேர்ந்த இருளர் பிரிவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஒருசில மாதங்களில் கான்ட்ராக்ட்டுகள், கரன்சிக் கட்டுகள் என்று புரளும்போது, ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முருகேசன் மின் இணைப்புகூட இல்லாத வீட்டில்தான் தற்போதும் வசித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் விறகு வெட்டி அதை விற்று மட்டுமே குடும்பத்தை நடத்தி வரும் முருகேசன், சொந்தமாக மிதிவண்டிகூட இல்லாத நிலையில் ஊராட்சிப் பணிகளுக்காக நடந்தேதான் சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் வசிக்கும் பகுதியில் ஒருவர் இறந்துவிட, அவரது இறுதிச் சடங்குக்கு மாலை அணிவிக்கச் சென்றார் முருகேசன். அப்போது அவரிடம் இருந்து மாலையைப் பிடுங்கி கீழே எறிந்த சிலர், சவக்குழி தோண்டும்படி வற்புறுத்தியதாகத் தகவல் வெளியானது. அதையடுத்து, ``ஊராட்சித் தலைவரான என்னை கொத்தடிமைப் போல நடத்தி ஆதிக்க சாதியினர் வேலை வாங்குகிறார்கள். சாவுக்குப் போன என்னை நீ குழி வெட்டுவதற்குத்தான் லாயக்கு. போய் குழியை வெட்டு என்று சொன்னார்கள்” என்று முருகேசன் பேசியது சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தலைவர் முருகேசன் கூறியதாவது :
ஊராட்சி மன்றத் தலைவரானதில் இருந்து ஊராட்சிமன்ற நிர்வாகம் தொடர்பாக என்ன நடக்கிறது என்றே தனக்குத் தெரியாது என்றும் ஊராட்சியின் துணைத் தலைவர் மற்றும் செயலர் கூறும் இடங்களில் கையெழுத்து மட்டும்தான் போடுவேன். மற்ற அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். பெயருக்கு மட்டும்தான் நான் ஊராட்சித் தலைவர். ஆனால், என்னை அப்படி யாரும் நடத்தவில்லை என்று கூறினார். பெயருக்குத்தான் முருகேசன் தலைவர். அனைத்து நிர்வாகத்தையும் துணைத் தலைவர் சிவானந்தம்தான் நிர்வகித்து வருகிறார்.
Frw news

கருத்துகள் இல்லை: