புதன், 3 ஜூன், 2020

திரு.துரைமுருகன், மீண்டும் பொருளாளராகவே தொடருவார்!...திமுக தலைவர் .ஸ்டாலின்.

கதைய முடிச்சிட்டாங்கய்யா... கலங்கிய  துரைமுருகன்மின்னம்பலம் : திமுக பொருளாளராக இருந்து, பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு உயர்த்தப்படுவதாக இருந்த துரைமுருகன், மீண்டும் பொருளாளராகவே தொடருவார் என்று அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சில நாட்களுக்கு முன்னே இது அரசல் புரசலாக துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டபோதிலும் அது அறிவிப்பாக வெளிவந்ததில் குறிப்பாக ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டதில் துரைமுருகன் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்..
ஜூன் 2 ஆம் தேதி காலை மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணையில் பொதுச் செயலாளர் பதவி: துரைமுருகனுக்கு ஷாக் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்டிருந்தவாறே இன்று (ஜூன் 3) துரைமுருகன் பொருளாளர் பதவியிலேயே தொடர்வதாக அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

இன்று காலை கலைஞர் பிறந்த தினத்துக்காக கோபாலபுரம் வீடு, கலைஞரின் நினைவிடம், அறிவாலயம் என்று ஸ்டாலினுடன் சேர்ந்தே அஞ்சலி செலுத்தினார் துரைமுருகன். கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீடு திரும்பினார். அடுத்த சில மணித்துளிகளில்தான், துரைமுருகன் பொருளாளராக தொடர்வார் என்ற அறிவிப்பு வெளியானது. அதைக் கேட்டுவிட்டு அதிருப்தியோடு மதியம் 2 மணிக்கு காட்பாடிக்குப் புறப்பட்டார் துரைமுருகன்.
சில நாட்களாக ஏலகிரியில் ஓய்வெடுத்து வந்த துரைமுருகன் அப்போதே தனது நண்பர்களிடம் பொதுச் செயலாளர் பதவி குறித்து தனது கருத்துகளை மனம் திறந்து சொல்லி வந்திருக்கிறார். பொதுக்குழுவையும் வீடியோ கான்பிரன்ஸிலேயே நடத்தக்கூடாதா என்று அப்போது கேட்டதையும் நாம் மின்னம்பலத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

அந்த நண்பர்களில் சிலர் உடனடியாக துரைமுருகனைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள்.
‘என்னண்ணே இப்படி ஆயிடுச்சு’ என்று விசாரித்த அவர்களிடம் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் துரைமுருகன். அவர்களில் நெருக்கமான ஒருவரிடம், ‘என் கதையை முடிச்சிட்டாங்கய்யா. இனிமே பொதுத் தேர்தல் முடிஞ்சுதான் அமைப்புத் தேர்தலாம். இப்பவே நம்மளை மதிக்காதாவங்க, ஒருவேளை அதிகாரம் வந்ததுக்கப்புறம் எப்படிய்யா மதிப்பாங்க?
அதிலும் இந்த அறிவிப்பை வெளியிடுறதுக்கு கலைஞர் பிறந்தநாளாய்யா கிடைச்சுது?” என்றும் ரொம்பவே வருத்தப்பட்டுக் கேட்டிருக்கிறார் துரைமுருகன்.
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் துரைமுருகனின் ஆதரவாளர்கள் அவரது காட்பாடி வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: