ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

எடப்பாடி : பாஜக பிற மாநில தேர்தல்களுக்கான செலவுக்குக்கூட நம்மிடம்தான் கேட்கிறார்கள் ... நாமும் கொடுத்து வருகிறோம் ...

மின்னம்பலம் : . முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வாழ்க்கையில்
முதன்முறையாக அரசு முறை பயணமாக வெளிநாடு செல்கிறார். அப்படிப்பட்டவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து மரியாதை செலுத்திவிட்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. தனக்கு இப்படிப்பட்ட இடத்தை உருவாக்கிக் கொடுத்த ஜெயலலிதாவுக்கே மரியாதை செய்யாமல் அவர் வெளிநாடு புறப்பட்டு இருக்கிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் அதிருப்தியைப் பகிர்ந்து வருகிறார். இந்தத் தகவல் வெளிநாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடமும் கொண்டு செல்லப்பட்டு விட்டது.
ஆனால் அவரோ, ‘பன்னீர் சொல்வது பற்றியெல்லாம் எதுவும் கண்டுக்காதீங்க’ என்று உத்தரவிட்டிருக்கிறார்.
இப்போது வெளிநாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, சுமார் 10 நாட்களுக்கு முன்பே அமைச்சர்களை அழைத்து பன்னீர் பற்றிய சில விஷயங்களை மனம்திறந்து பேசியிருக்கிறார். அவை இங்கிருக்கும் அமைச்சர்கள் வாயிலாக இப்போது மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்து உள்ளன. அதாவது எடப்பாடி அமைச்சர்களிடம் பேசும்போது, ‘பன்னீர்செல்வம் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருக்கிறார். பணம் கொட்டும் சிஎம்டிஏ அவரிடம்தான் இருக்கிறது. ஆனால் கட்சிக்காகவோ, நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்காகவோ, நமது அம்மா பத்திரிகைக்காகவோ பன்னீர்செல்வம் எந்த நிதியும் கொடுக்கவில்லை. அத்தனை செலவுகளையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன். மேலும் பாஜகவுக்கும் அவர்கள் கேட்டபோதெல்லாம் எவ்வளவு கேட்டாலும் அதைக் கொடுத்துவருகிறேன். பாஜக பிற மாநிலங்களில் எதிர்கொள்ளும் தேர்தல்களுக்கான செலவுக்குக்கூட நம்மிடம்தான் கேட்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு மறுக்காமல் தேர்தல் செலவுக்குக் கொடுத்துச் சமாளித்து வருகிறோம்.
அதேநேரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் அம்மா காலத்திலேயே பொருளாளராகவும் இருந்த பன்னீர்செல்வம் கட்சிக்காக எந்தச் செலவும் செய்வதில்லை. சிஎம்டிஏவில் ஒரு சதுர அடிக்கு எவ்வளவு வாங்கப்படுகிறது என்பதெல்லாம் எனக்கும் தெரியும். அவருக்காக யார் வசூல் நடத்துகிறார்கள் என்பதும் எனக்குத் தகவல் வந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, நான் வெளிநாட்டுக்குச் சென்று விட்டபின் என்னைப் பற்றி ஏதாவது வதந்திகளைக் கிளப்பிவிட்டால், வேறு ஏதேனும் செய்ய முயற்சி செய்தால் அதற்கு இடம் கொடுக்காதீர்கள்’ என்று கறாராக உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
முன்பெல்லாம் முதலமைச்சர் அருகில் இருக்கும்போதும் அமைச்சர்கள் இயல்பாக சக அமைச்சரைப் போலவே அவருடன் பழகி வந்தார்கள். ஆனால், எடப்பாடி வெளிநாடு செல்வதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே அந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அமைச்சர்களுடன் அவர் பழகும் விதத்திலும், அமைச்சர்கள் அவரிடம் பழகும் விதத்திலும் கடந்த சில நாட்களாக மாற்றங்கள் தெரிந்தன. அதாவது முதலமைச்சர் பதவி மட்டுமல்ல; கட்சியின் தலைமைப் பொறுப்பும் தன்னிடம்தான் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் விதமாக அவரது பாடி லாங்குவேஜ் அழுத்தமாகவும் இறுக்கமாகவும் மாறியிருப்பதை அமைச்சர்களே வெளிப்படையாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில் பன்னீர்செல்வம், எடப்பாடி மீது ஜெவை மதிக்கவில்லை என்ற புகாரை தன் வட்டத்தில் முன்வைக்க, எடப்பாடியோ பன்னீர் மீது ஊழல் புகாரையே சக அமைச்சர்களிடம் சொல்லியிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: