திங்கள், 2 செப்டம்பர், 2019

கீழடி: 2500 ஆண்டுகள் பழமையான மண் குவளை!

கீழடி: 2500 ஆண்டுகள் பழமையான மண் குவளை!மின்னம்பலம் : கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ள அகழாய்வில் சுடாத மண் குவளை கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை மூன்றுகட்ட அகழாய்வுகளுடன் நிறுத்திக்கொண்ட பின், நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் கட்ட அகழாய்வு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக தமிழக அரசு 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெறும் இந்த அகழாய்வு 5 பேரின் நிலங்களில் 27 இடங்களில் நடத்தப்பட்டுவருகிறது.
இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உட்பட 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிகளவில் சுவர்களும் கிடைத்தன.
தற்போது முருகேசன் என்பவரது நிலத்தில் சுடாத மண் குவளை கண்டெடுக்கப்பட்டது. மண்பாண்டப் பொருள்களை சுட்டால் மட்டுமே, புவியில் மட்காமல் நீண்ட நாள்கள் இருக்கும். சுடாத மண்பாண்டப் பொருள்கள் சில நூற்றாண்டுகளிலேயே மட்கிவிடும். ஆனால் கீழடியில் கிடைக்கப்பட்ட சுடாத மண் குவளை இன்று வரை மட்காமல் உள்ளது. மேலும் அது பளபளப்பாகவும் இருக்கிறது. இந்த குவளை 2,500 ஆண்டுகளாக மக்கிப் போகாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தானியங்களை சேகரித்துவைக்க இந்த குவளை பயன்படுத்தப்படிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: