ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

ஆபிரகாம் பண்டிதர் ...தமிழிசை எப்படி கர்நாடக சங்கீதமாக ஆனது? வடசென்னைக்காரி நூலில் .. ஷாலின மரியா லாரன்ஸ்

Shalin Maria Lawrence : ஆபிரகாம் பண்டிதர் பற்றிய பகுதி "வடசென்னைக்காரி" புத்தகத்தில் இருந்து.
கட்டுரை-இசைக்கு யார் ஓனர்.
இன்று பண்டிதரின் நூற்றாண்டு நினைவு நாள்.
ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் பிறந்த ஆண்டு 1859. பண்டிதர் என்றால் அப்படி இப்படி பண்டிதர் அல்ல. சித்த வைத்தியர், தமிழ் இசை கலைஞர் மற்றும் தமிழ் கவி. திருநெல்வேலியில் பிறந்த இவர் தஞ்சையில் குடிபுகுந்தார். திட்டுக்கள் சடையானை பட்டரிடம் இசை பயின்றார்; பின்பு தஞ்சையில் நாதஸ்வரம், வீணை, பிடில், ஆர்மோனியம் என்று கற்று வித்தகரானார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணவராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் அதிலும் சிறந்து விளங்கினார்.
அப்பொழுது கர்நாடக இசையின் தாக்கத்தால் தமிழ் மரபு இசை தமிழ்நாட்டில் துவண்டிருந்ததை கண்டு மனம் பொறுக்காத ஆபிரகாம் பண்டிதர் இசை, தமிழ் இசைப் பற்றி ஆராய்ச்சியில் இறங்கினார். இது பல வருடம் தொடர்ந்த நிலையில்
தமிழகத்தில் முதல் முறையாக அகில இந்திய இசை மாநாட்டை நடத்தினார். இது போன்று மொத்தம் ஆறு மாநாடுகளை தமிழகத்தில் தன் சொந்த செலவிலேயே நடத்தினார் என்பதுதான் சிறப்பு.
பின்பு தஞ்சாவூரில் இசை ஆய்வுக்கென ’சங்கீத வித்யாமகாஜன சங்கம்’ என்ற அமைப்பை உண்டாக்கினார். இதைத்தொடர்ந்து பல வருடங்களின் ஆராய்ச்சியின் விளைவாக ’கருணாமிர்த சாகரம்’ என்கிற மாபெரும் தமிழ் இசை நூலை வெளியிட்டார். 85 தமிழிசை ராகங்களை பற்றிய திறனாய்வு கொண்ட இந்த நூல் தமிழ் இசை இலக்கணங்களும் மற்றும் எப்படி இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இசை வடிவமும் தமிழ் மரபு இசையின் இலக்கணங்களில் இருந்து தோன்றி இருக்கிறது என்பதனை அறிவியியல் ரீதியாக எடுத்துரைக்கிறது.

ஸ்ருதி கணக்கியல் எனும் விஷயத்தையும் உருவாக்குகிறார்.
சொல்ல மறந்துவிட்டேன். இவர் ஒரு musicologist அதாவது "இசையியல் வல்லுநர். இசை எங்கிருந்து வருகிறது என்கிற கேள்விக்கு பதிலை கொடுத்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
வரலாற்று புத்தகங்கள் சொல்லுகின்ற சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கர்நாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய ராகங்கள்தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். ராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 1916ம் ஆண்டு, மார்ச் 20 முதல் 24 வரை பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப்பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்"
அவ்வளவுதான்... எந்த இசையை பிறப்பின் அடிப்படையில் ஒருவர் கற்று கொள்ள வேண்டும் இன்னொருவர் கற்றுக்கொள்ள கூடாது என்று இந்த சாதிய சமூகம் தீண்டாமையை திணித்ததோ அந்த இசையை அக்குவேர், ஆணிவேராக பிரித்து எல்லாமே தமிழ் மரபு இசையில் இருந்துதான் எடுக்கப்பட்டது என்று உண்மையைப் போட்டு உடைத்தார் ஆபிரகாம் பண்டிதர் .
அவரை யாரும் அப்பொழுது எதிர்க்கவில்லை; ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் ஆதாரத்தோடு நிரூபித்தார். என்னை பொறுத்தவரை ’கருணாமிர்த சாகரம்’ என்பது நூலுலகத்து பெரியார்..!
எப்படி பார்ப்பனியத்தை பெரியார் பகுத்தறிவின் மூலம் உடைத்தாரோ அப்படியே கார்நாடக சங்கீதம் எனும் தேவ சங்கீதத்தின் உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார் பண்டிதர்

கருத்துகள் இல்லை: