சனி, 7 செப்டம்பர், 2019

சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பு

நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருப்பு தினத்தந்தி :  நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருப்பு சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள். பெங்களூரு, இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. கடந்த மாதம் 20-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.


3-ந்தேதி மற்றும் அதற்கு மறுதினம் என்று 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது.

இதனிடையே விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கும் நிகழ்வை, பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு பெங்களூரு வந்தார்.

கவர்னர் மாளிகையில் தங்கிய அவர், இன்று அதிகாலை இஸ்ரோ மையத்திற்கு வந்தார். அங்கு பிரதமருடன் அமர்ந்து 70 மாணவர்களும் நிலவில் ‘சந்திரயான்-2’ விண்கலம் தரையிறங்குவதை பார்வையிட்டனர். முன்னதாக பிரதமர் வருகையை முன்னிட்டு பெங்களூருவில் குறிப்பாக பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: